Ticker

6/recent/ticker-posts

வரலாறு காணாத வறட்சி..கென்யாவில் கொத்து கொத்தாக மடியும் காட்டு விலங்குகள்.. 200க்கும் மேற்பட்ட யானைகள் மரணம்!

ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் சுற்றுலா அமைச்சர் பென்னினா மலோன்சா கூறுகையில், இந்தாண்டு பிப்ரவரி தொடங்கிய வறட்சி 40ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில இடங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டாலும், அது சராசரியை விட குறைவானதே. இந்த வறட்சி பாதிப்பு காரணமாக வனவிலங்குகள் கொத்து கொத்தாக உயிரிழந்துள்ளன. காட்டுப் பகுதிகளில் உயிர் வாழ அடிப்படை தேவையான நீர் கூட இல்லாததால், இந்தாண்டில் மட்டும் சுமார் 205 யானைகள் மரணமடைந்துள்ளன. யானைகளுடன் சேர்த்த 512 வைல்ட்பீஸ்ட் என்ற விலங்கு, 381 வரிக்குதிரைகள், 12 ஒட்டக சிவிங்கி, 51 காட்டெருமைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு 14 வகையான விலங்குகள் கோர வறட்சி காரணமாக பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்துள்ளன.

யானைகள் எண்ணிக்கை அதிகளவில் கொண்ட நாடுகளில் ஒன்று கென்யா. வறட்சியின் பிடியால் அங்கு யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்தாண்டின் கணக்கின்படி, 36,000 யானைகள் தான் உயிருடன் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.வேட்டை போன்ற சட்ட விரோத செயல்களால் அதிக உயிரிழப்புகள் இருந்த நிலை மாறி, தற்போது கால நிலை மாற்றம் 20 மடங்கு அதிகமாக விலங்குகளை கொல்கிறது என அரசு தெரிவிக்கிறது. இது அரசின் கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தவை. இதைவிட அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கை இருக்கவே வாய்ப்பு உள்ளது.

கென்யாவின் முக்கிய வருவாய் பங்களிப்பாக வனவிலங்கு சுற்றுலா உள்ளது. அந்நாட்டின் 10 சதவீத பொருளாதாரத்தை வனவிலங்கு சுற்றுலா தீர்மானிக்கிறது. சுமார் 20 லட்சம் மக்கள் இந்த துறையை நம்பியுள்ளனர். ஆனால், வதைக்கும் வறட்சி, கால நிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் அந்நாட்டை அவலமான சூழலுக்கு தள்ளியுள்ளது. வறட்சி, பஞ்சம் காரணமாக அந்நாட்டில் சுமார் 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக ஐநா சபை ஆய்வு தெரிவிக்கிறது. ஐநாவின் கால நிலை மாற்றம் தொடர்பான COP27 உச்சி மாநாடு இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், கென்யாவின் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
news18


 


Post a Comment

0 Comments