சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-29

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-29


நம் கணக்கு வேறு... இறைவன் கணக்கு வேறு...
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால், ஆம் பாரதியின் வைர வரிகள்... வெற்றி கிடைத்துவிட்டால் உலகில் தானே பலவான் என்ற மமதைக்குச் சென்றுவிடுகின்றான் மனிதன் சக உயிர்களை நம் உயிர்போல் கருதாமல், ஆணவத்துடன் வாழ்ந்த பலர் மண்ணோடு மண்ணாகிப்போய்விட்டனர்.

மன்னாதி மன்னர்கள் எல்லாம் நிரந்தரமாய் வாழ்ந்ததில்லை. மகத்தான பூவுலகில் பூமான்கள் யாரும் நிலைத்ததில்லை. இது தானே வாழ்க்கைத் தத்துவம். வாழும் காலத்தில் புண்ணியம் சேர்க்காமல், அறம் செய்யாமல் பிறர்மனத்தை ரணமாக்கி வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? எல்லாம் மாறிவிடும் ; மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது... இதை உணர மனிதஇனம் ஏன் மறுக்கிறது?
இதோ,

வள்ளுவம் கூறுவதைப் பாருங்கள்...

ஒருபொழுதும் வாழ்வது அறியார்கருதுப கோடியும் அல்ல பல (குறள் 337) என்பதன் மூலம்.

நாம் வாழும் வாழ்நாள் எவ்வளவு என்பதையே அறியாத மக்கள், நினைக்கும் எண்ணங்களோ கோடிக்கும் மேல் ஆகும் என்கிறார். இதனைக் கூறும் போது ஒரு வரலாற்றுச் சம்பவம் நினைவிற்கு வருகிறது.

மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவிற்குப் புறப்பட்டபோது, தன் நண்பரும் குருவுமான அக்கால மகாஞானியாகத் திகழ்ந்த டயோஜனீசைக் காணச் சென்றான். அவர் அலெக்சாண்டரிடம், “எங்கே? எதற்காகப் போகிறாய் எனக்கேட்டார். நான் ஆசியா முழுவதும் வெல்லப் போகிறேன் என்றார். சரி, அதை வென்றபின் என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்க, “இந்தியாவை வெல்வேன்” என்றார். அப்புறம்..."உலகத்தையே வெல்வேன்
என்றான்அலெக்சாண்டர்.

அப்போது டயோஜனிஸ், ஆற்றங்கரையில் நிர்வாணமாக வெயில் காய்ந்து கொண்டிருந்தார்... அவர் சிரித்தப்படி, “உலகம் முழுவதும் வென்றபின் என்ன செய்யப் போகிறாய்?' என்று மீண்டும் கேட்க, “அதற்குப் பிறகு நான் நிம்மதியாக ஓய்வெடுப்பேன் என்று கூறினார்.

இதைக் கேட்டவர் பலமாகச் சிரித்தபடி, சற்று தொலைவில் படுத்திருந்த தன் நாயைப் பார்த்து, “இவர் சொல்வதைக் கேட்டாயா? உலகத்தை எல்லாம் வென்ற பிறகு, இவர் ஓய்வெடுக்கப் போகிறாராம். நாம் ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் இங்கு ஓய்வெடுத்துக் கொண்டுதானே இருக்கிறோம். அதுசரி, “ ஓய்வு தான் உன்னுடைய கடைசி இலட்சியம் என்றால், இந்த அழகான ஆற்றங்கரையில் என்னுடன் நீயும் சேர்ந்து கொள்ளலாமே? அதற்குத் தேவையான இடம்தான் இங்கு இருக்கிறதே ! நிம்மதியாக ஓய்வெடுக்கலாமே.
கடைசியில் ஓய்வெடுப்பதற்காக வேண்டி ஏன் உலகம் முழுவதிலும் உள்ள நாட்டு மக்களைத் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்க வேண்டும். இப்போதே, இங்கேயே ஓய்வெடுக்கலாமே? என்று கூறினார்.

அவருக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. நீங்கள் சொல்வது அறிவு பூர்வமாகத் தான் உள்ளது. ஆனால் நான் இப்போது ஓய்வெடுக்க இயலாது. முதலில் உலகத்தை வென்றுவிடுகிறேன் என்றார். அதற்கு ஞானி, உலகத்தை வெல்வதற்கும் ஓய்வெடுப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாகத்தெரியவில்லை. 

ஏனெனில், உலகத்தை வெல்லாமல் நான் இங்கு ஓய்வெடுக்கவில்லையா? என்று கேட்டார்.

நீங்கள் சொல்வது நியாயம் தான். ஆனால், நான் புறப்பட்டுவிட்டேன். இனி பின்வாங்குவதற்கு வழியில்லை என்றான் அலெக்சாண்டர்.

ஞானியின் வாக்கு, தீர்த்த தரிசனம் பலித்தது அவர் சொன்னார், ' நீ பாதிவழியில் திரும்பிவிடத்தான் போகிறாய். பயணம் முடிந்த பிறகு யார்தான் இதுவரை திரும்பி இருக்கிறார்கள்?

இந்தியாவை வென்றபிறகு நாடு திரும்புகையில் பாதிவழியிலேயே அம்மன்னன் இறந்துவிட்டான். கிரீஸை அவன் அடையவேயில்லை. எல்லா அலெக்சாண்டர்களும் செத்துத்தான் போகிறார்கள் பாதிவழியிலேயே ! வெற்றி ஒன்றையே மனத்தில் கொண்டு வாழ்க்கையை வாழாமலே மறைந்து போகிறார்கள். அலெக்சாண்டர் இறக்கும் தறுவாயில், “நான் இறந்த பிறகு கல்லறைக்கு வெளியே என் இரு கைகள் தெரியும்படி அடக்கம் செய்யும் படிவேண்டினார். அதன் மூலம் வெறுங்கையுடன் தான் இந்த உலகத்தை விட்டுச் சென்றான் என்று இந்த உலகம், தெரிந்து கொள்ளட்டும்" என்று வேண்டிக் கொண்டானாம்.

மனிதா ! இதை உணர்... உன்னை வெல்ல முயற்சி செய்... நிறைவுடன், மனமகிழ்வுடன் வாழ் ! நலமே விழைக!

பிரச்சனைகளை மட்டுமல்ல... பிரச்சினைக்குரிய நபர்களையும்... தூரத்தில் வையுங்கள்... நிம்மதி என்றும் உங்கள் அருகில் நிலைத்திருக்கும்...
(தொடரும்)



 


1 Comments

  1. அருமையான பதிவுகள் ஐயா... மனமார்ந்த வாழ்த்துக்கள் மா 👍💗💖 மேன்மேலும் உங்களுடைய அறப்பணி சிறக்கட்டும்...

    ReplyDelete
Previous Post Next Post