திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 3

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 3


வாழ்க்கைத் துணநலம்--6

இல்லறம் சிறப்பது பெண்களாலே

பிறந்தவீடு புகுந்தவீடு போற்றிடவே
வருவாய்க்குள் வாழ்பவளே நல்மனைவி!

பண்பற்ற இல்லாளின் இல்லத்தில்
பொன்பொருள் சேர்ந்தாலும் மதிப்பில்லை!

கற்பென்னும் மனவுறுதி கொண்டவளே
பெண்குலத்தின் ஒளிவிளக்காய்த் திகழ்கின்றாள்!

கணவனையே தெய்வமாக மதிப்பவளோ
பெய்யென்றால் பெய்துவிடும் நல்மழைதான்!

கணவனின் குடும்பத்தின் புகழ்தன்னைக்
காப்பவளே பெண்ணாவாள் மண்ணுலகில்!

மங்கையின் உடலுக்கே சிறைக்காப்பு!
உள்ளத்தின் சிந்தனைக்கு முடியாது!

பேரடக்கப் பண்புகளால் மங்கையிங்கே
காக்கின்ற நெறிமுறைதான் சிறப்பாகும்!

மண்ணுலகில் கணவனையே தெய்வமாக
எண்ணிவாழ்ந்தால் விண்ணுலகும் வாழ்த்திநிற்கும்!

கணவனின் புகழ்விளக்கைக் காக்காத
காரிகை அமைந்துவிட்டால் பகைவர்முன்
கணவருக்குச் சிங்கநடை இல்லையம்மா!

மனைவியே இல்லறத்தின் மங்கலமாம்!
பிள்ளைகள் குடும்பத்தின் அணிகலனாம்!


மக்கட்பேறு---7

நல்லகுழந்தைகள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை

அறிவும் ஆற்றலும் இணைந்துள்ள
குழந்தைச் செல்வம் உயர்செல்வம்!
பண்பான குழந்தையைப் பெற்றவர்க்கோ
தலைமுறை ஏழிலும் துன்பமில்லை!

நெறிகளைப் போற்றி வாழ்ந்திருந்தால்
குழந்தைகள் நல்லவ ராகிடுவார்!

மழலைக் கைகள் பிசைந்திட்ட
எச்சிச் சோறு பெற்றோர்க்கு

அமுதை விஞ்சும் சுவைதானே!
அருமை அருமை அருமைதான்!

குழந்தை உடலைத் தீண்டுவது
தழுவிய மேனிக்கு இன்பந்தான்!

மழலையைக் கேட்டு மகிழாதோர்
குழலிசை யாழிசை இனிதென்பார்!

கற்றவர் அவையில் தன்மகனோ
நிற்கும் தகுதியைக் கல்வியாலே
தந்தை தருவது கடமைதான்!

தங்களைக் காட்டிலும் குழந்தைகள்
அறிவால் உயர்ந்தால் அகமகிழ்வார்!
சான்றோர் என்றே பிறர்சொன்னால்
பெற்ற பொழுதினும் தாய்மகிழ்வாள்!

இத்தகைய பிள்ளைகள் பெற்றெடுக்க
தந்தை செய்த தவமென்ன
என்றே உலகம் வியக்குமாறு
செய்வது பிள்ளைகள் கடனாகும்!


அன்புடைமை -- 8

வாழ்க்கையின் உயிர்நாடி அன்பே

அன்பை அடைக்கும் தாழில்லை
உருகும் கண்ணீர் காட்டிவிடும்!

அன்பில் லாதோர் தமக்குரியர்!
தன்னலம் கொண்டே செயல்படுவார்!

அன்புடை யாரோ பிறர்க்குரியார்!
மற்றவர்க் காக செயல்படுவார்!

உயிரும் உடலும் இணைந்ததுபோல்
அன்பும் வாழ்க்கையும் இணைந்திருக்கும்!

அனைவரை நாடிப் பழகவைக்கும்!
நட்பை விழுதாய்ப் படரவைக்கும்!

அறநெறி காக்கும் அன்பிங்கே
வீரத் திற்குத் துணைபோகும்!

எலும்பே இல்லா உயிரினத்தை
வெய்யில் இங்கே துன்புறுத்தும்!
அன்பே இல்லா மாந்தரையோ
அறத்தின் கடவுள் துன்புறுத்தும்!
அன்பே இல்லா வாழ்க்கையோ
பாலை நிலத்தின் பட்டமரம்
துளிர்த்தது போன்ற நிலையாகும்!

உள்ளே உள்ள இதயத்தில்
அன்பே இல்லை என்றாலோ
வெளியே உள்ள உறுப்புகளால்
பயன்கள் என்ன  சொல்லுங்கள்?
(தொடரும்)





 


Post a Comment

Previous Post Next Post