முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமூலமும் திருத்தங்கள் பற்றிய சாதக பாதகமான பரிந்துரைகளும்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டமூலமும் திருத்தங்கள் பற்றிய சாதக பாதகமான பரிந்துரைகளும்.


கி. பி. 1770ல் முஸ்லிம்கள் மத்தியில் நடைமுறைப் படுத்தப்படுவதற்காக டச்சுக்காரரால் பதேவியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, விவாக - விவாகரத்து, வாரிசுரிமை தொடர்பான சட்டமூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், 1806ல் முகம்மதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டு,  1852ல் நாடளாவிய ரீதியில் வியாபிக்கச் செய்யப்பட்டதாகவும், அதுவே 1886ல் முகம்மதிய திருமணப் பதிவுச்சட்டமாக உருவாகியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன.

கி.பி. 1926ல் பிரித்தானிய அரசு மேற்படி சட்டத்தை மாற்றுவதற்கான தெரிவுக்குழுவை நியமித்தது.  அந்நாளில் பிரதி சட்டமா அதிபராகப் பணிபுரிந்த நீதியரசர் எம். ரீ. அக்பர் குழுவுக்குத் தலைமை தாங்கியுள்ளார். முஸ்லிம் அல்லாத ஐவர் அக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.  குழுவின் சிபாரிசில் ஏற்படுத்தப்பட்ட சட்டமானது, 1929ம் ஆண்டு சட்டவுருப்பெற்று, 1937ல் நடைமுரைப்படுத்தப்பட்டதோடு, அது மீண்டும் 1951ல்  சீர்திருத்தத்திற்குட்பட்டு, 13ம் இலக்க முஸ்லிம் விவாக – விவாகரத்துச்  சட்டமாக இன்றுவரை நடைமுறையிலிருந்து வருகின்றது.

இன்று நடைமுறையிலிருந்து வரும் சட்டமானது, 1986லிருந்து பலமுறைகளில் சீர்திருத்தத்திற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அவை கைகூடாமற்போயுள்ளன. அறிஞர்கள், புத்திஜீவிகள், பெண்ணுரிமை அமைப்புக்களின் அவ்வப்போதைய உந்துதல் காரணமாக சீர்திருத்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, 1990ல் கலாநிதி ஏ. எம்.எம். சஹாப்தீன்  அவர்களது தலைமையின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பல திருத்தங்கள் சிபாரிசு செய்யப்பட்டபோதிலும், அவை அமுலாக்கம் பெறவில்லை.  பின்னர் 2009ல் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஷூப் தலைமையில் 18 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையும் நீதியரசரிடம் கையளிக்கப்பட்டது.  அத்தோடு இன்னொரு பாராளுமன்ற உப-குழு உருவாகி, வேறோர் அறிக்கை கூட  உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் கொவிட் 19ன் தாக்கம் காரணமாகவும்,  அரசியல் மாற்றங்கள் காரணமாகவும் இதுபற்றிய பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இப்போது இதுபற்றிய அலசல்கள் கட்டுரைகளினூடாகவும், பதிவுகளினூடாகவும் வெளிவந்தவண்ணமிருக்கின்றன.  திருத்தங்கள் சம்பந்தமான சாதக -பாதகங்களை சில பல குழுக்களும், சமூக அமைப்புக்களும், தனிப்பட்ட சட்டவல்லுனர்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

குழுக்கள் முரண்பட்டுக் கொள்ளாமலும், சம்பந்தப்படும் தனிமனிதனோ, சமூக அமைப்புக்களோ தேவையற்ற பிரச்சினைகளை உள்வாங்கி, குட்டையைக் குழப்பாமலும்,  எமக்குத்தேவையான திருத்தங்கள் என்ன,  அவை எவ்வாறு திருத்தியமைக்கப்படல் வேண்டும்,  பரிந்துரைக்கப்படும் திருத்தங்கள் எதிர்காலத்தில் எந்த வகையில் சமுதாயத்தைப் பாதிக்கும் அல்லது சமுதாயத்திற்கு நன்மைதரும் என்பனவற்றை முறையாக ஆராய்ந்து, அமுல்படுத்திக்கொலள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.  இவ்விடயத்தில் இதுவரை நமது சமூகம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் சரியாக இனங்காணப்பட்டுள்ளபோதிலும்,  அவற்றை மேலோட்டமாக எடுத்துக்கொள்ளாமல், சீராக அலசி ஆராய்ந்து முன்னெடுப்பது காலத்தின் தேவையாகும்.  மார்க்க சட்டங்களோடு முரண்படாமலும், காலத்தின் தேவைகளைக் கருத்தில் கொண்டதாகவும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது கல்விமான்கள் பலரது அபிப்பிராயமாகும்.

விவாகரத்து, பலதாரமணம், தாபரிப்புச் செலவு, திருமணக் கொடுக்கல்-வாங்கல்கள், பெண்களுக்கான பாதுகாப்பு,  காதி நீதிமன்றங்களுக்கான சட்ட அதிகாரம், காதி நீதி மன்றங்களின் சீரமைப்பு,, திருமணப்பதிவேட்டில் மணப்பெண் கையெழுத்திடல், காதிகள் முன்னிலையில் சட்டத்தரணிகளுக்கு இடமளித்தல்,  காதிகளுக்கான குறித்த அதிகபட்ச கல்வித்தகைமையை நிர்ணயித்தல், பெண்பிள்ளையின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது,  பெண்கள் காதிகளாக நியமிக்கப்படல் என்பன போன்ற விடயங்கள் சிபாரிசுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதோடு, பாரளுமன்ற உறுப்பினர்கள் – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினரின் ஒன்று கூடல்களின்போது பெண்பிள்ளையின் குறைந்த பட்ச திருமண வயதெல்லை 16 ஆக இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தபோதிலும், அது தற்போது 18 என்ற நிலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.  தாபரிப்புப் பணம் பெற்றுக்கொள்ள நீதிமன்றங்களை நாடவேண்டியுள்ள தற்போதைய நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, இவ்வதிகாரம் காதிநீதிபதிகளுக்கே வழங்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் கூடஒரு முடிவுக்கு வந்துள்ளதையும் அறிய முடிகின்றது!

இஸ்லாத்தில் திருமணம் செய்ய வயதெல்லை பற்றிய வரையறை எதுவுமில்லாத நிலையில் கூட,  இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டத்தின் பிரிவு 23ன் படி முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை, 12 என்றே வரையறுக்கப்பட்டுள்ளது.  இதன்படி 12 வயதிற்குட்பட்ட பெண்பிள்ளையின் திருமணமானது, காதிநீதவான் பூரணமான விசாரணை செய்து அதிகாரமளித்த பின்னரே பதிவு செய்யப்படலாம் என்றதொரு விதியுமுள்ளது. எமது நாட்டில் 12 வயதிற்குக் குறைந்த முஸ்லிம் பெண்களின் திருமணப்பதிவு நடைபெறுவது அரிது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடளாவிய ரீதியில் 65 காதிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  காதிநீதிமன்றங்களில் முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், திருமணப்பிணக்குகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்றும், பெண்கள் இயக்கங்களால் சுட்டிக்காட்டப்பட்டு, பெண்களும் காதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்னெடுத்து வரப்படுகின்றது. சர்ச்சைக்குரிய இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் கலந்துரையாடலின்போது பெண்கள் காதிகளாக நியமிக்கப்படலாகாது; காதி நீதிமன்றங்களில் ஜூரிகளாக அல்லது ஆலோசனை சபை உறுப்பினர்களாக அல்லது விவாகப்பதிவாளர்களாக நியமனம் பெறலாம் என்ற முடிவை எட்டிற்று.  அண்மையில்  நீதித்துறையும் இப்பிரேரணையை தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது!

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது ‘மின்ஹாஜூத் தாலிபீன்’ எனும் நூலில் நீதிபதிகளின் தகுதிகளை வரையறுக்கின்றபோது – முஸ்லிம், சுதந்திரமான ஆண், வயது வந்தவர்,  நற்பண்பு கொண்டவர்,  பார்வை – கேள்விப் புலன்கள் தெளிவாக உள்ளவர், சட்டத்தை ஆழமாக விளங்கியவர் எனக் குறிப்பிடுவதாகவும், இஸ்லாமிய அறிஞர்கள் பலரது கருத்துக்களுக்கமைய ஆண்கள் மாத்திரமே நீதிபதிகலாகச் செயல்பட முடியுமென்ற கருத்தும் பரவலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது!



 


Post a Comment

Previous Post Next Post