Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 138


இம்முறை தீ மூட்டு வைபவத்தை பெரிய கல்லில் வைப்பதென்றும், பிரதம அதிதியாக கல்லடிவாரத்தில் தவமிருக்கும் பெரியவரைக் கொண்டுவருவதென்றும் ஏற்கெனவே   முடிவாகி இருந்தது.

அதன்படி சடல அடக்கத்தின் முடிவோடு,  செரோக்கி தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, மரவேர் பிடுங்கி வருவதற்காக, வனத்துக்குள் நுழைந்தான்.

பெரியவரை  கல்லடியிலிருந்து பெரியகல் வரை  கொண்டுவருவதென்றால் இரட்டை வேர் நார்கள் கல்லடிவரை  கொண்டுசென்று இடைக்கிடையே  குச்சிகள் சொருகி, "நாரேணி" உருவாக்க வேண்டும்.

அதனால் மரவேர்களோடு அவர்கள் குச்சிகளையும் வனத்திலிருந்து எடுத்து வந்திருந்தார்கள். 

பெரிய கல்லின் மேற்பகுதி நிலப்பகுதியில் ஓங்கி வளர்ந்திருந்த "வெரலு" மரத்தின் அடிப்பாகத்தில்,  வேர்நார்களின் ஒரு முனையைக் கட்டிவிட்டு மறுமுனையை   கல்லடிவரை  இறக்கினார்கள். பிறகு இறக்கிய நார்களை  மேலே இழுத்தெடுத்து,  தாம் கொண்டுவந்திருந்த குச்சிகளைக் கொண்டு   சமாந்திரமாக இரு நார்களையும் இணைத்துக்கட்டுவதன்மூலம், அவர்கள் நாரேணியை உருவாக்கினார்கள்.

இறுதிப்பகுதியில் குச்சி இணைக்கப்பட்டதும், ஏணிவடிவிலான அதனை மெதுமெதுவாகக்  கீழே இறக்கினார்கள்.

நாரேணி கல்லடிவாரத்து நிலத்தைத்   தொட்டதும், செரோக்கி அதிலே  இறங்கலானான்.

செரோக்கி கல்லடிவார  நிலத்தைத் தொட்டத்தும், அங்கு தரையில் விரவிக்கிடந்த பொன்னிற இலைகளின்மேல் தனது பாதங்களைப் பதித்தபோது அவன் தனக்குள்  புத்துணர்வு  உண்டானதை  உணர்ந்தான்.

அன்றொருநாள் அவன் கல்லடிவாரத்தில் முதன் முதலாகத் தரை  இறங்கியபோது எது நடந்து கொண்டிருந்ததோ அதுவே எவ்வித மற்றமுமின்றி  நடந்துகொண்டிருப்பதை அங்கு அவன் கண்டான்.

ஓங்கி வளர்ந்திருந்த மரத்தினடியில் அந்தப் பெரியவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். அவருக்கருகில் இரண்டு வானரங்கள் அங்குமிங்குமாகக் குதித்தபடி, பெரியாருக்கு ஒத்தாசை புரிந்து கொண்டிருந்தன.

மெதுமெதுவாக செரோக்கி தனது கால்களை நகர்த்தி, பெரியவர் இருந்த இடம்வரை  நடக்கலானான். இலைகளின் மீது அவன் அடியெடுத்து வைக்கின்றபோது வந்த மெல்லிய ஒலி,  அவனது காதுகளுக்குள் ஒருவித சங்கீதமாக நுழைந்ததையும் அவன் உணர்ந்தான்.

செரோக்கி பெரியவரிடத்தை  அடைவதற்கும், அவர் தன் தவத்திலிருந்து மீள்வதற்கும் சரியாக இருந்தது!

அவர் அன்று போலவே இன்றும் எவ்வித சலனமுமின்றி, 

"வா குழந்தாய்... வா..." என்று வரவேற்றார்.
செரோக்கி மரியாதையாகத் தலைசாய்த்து, கைகட்டி நின்றான்.

"இன்று அந்திசாயும் வேளையில் தீ மூட்டு விழா பெரியகல்லில் நடக்கப்போகின்றது... விழாவுக்கு இம்முறை நமது மக்கள் தங்களைத்தான் பிரதம விருந்தாளியாக அழைக்கின்றார்கள். மறுக்காமல் தாங்கள் வரவேண்டும்" என்று குறிப்பிட்டபோது, பெரியவரின் முகத்தில் இனம்புரியாத ஓர் மகிழ்ச்சி தாண்டவமாடியதை அவனால் உணர முடிந்தது.

எங்கோ ஒரு தூரத்து நாட்டிலிருந்து குடும்பத்தோடு இங்குவந்த அவர், தனது சிறுபிராயத்திலேயே பெரியகல்லிருந்து சறுக்கி விழுந்து, முதுமைவரை  வானரங்களின் தோழமையுடனும்,  வனப்பிராணிகளின் உதவியுடனும் உயிர்வாழ்ந்து வந்தவருக்கு வெளியுலகைக் காணவேண்டுமென்ற அவா இல்லாமலா போய்விடும்...?
(தொடரும்)




 


Post a Comment

0 Comments