திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 4

திருக்குறள் குழந்தைப் பாடல்கள்- 4


விருந்தோம்பல் -- 9
விருந்தளிக்கும் பண்பே குடும்பத்திற்கு அழகாகும்

ஈட்டல் காத்தல் இல்லறத்தில்
விருந்தின ரோடு மகிழ்வதற்கே!

வீட்டில் விருந்தினர் அமர்ந்திருக்க
அவரை விட்டுத் தனியாக
உண்பது மாபெரும் தவறாகும்!
அமிழ்தே எனினும் நஞ்சாகும்!

விருந்தின ரைத்தான் உபசரித்தால்
வாழ்க்கை வறுமையில் அழியாது!
மலர்ந்த முகத்துடன் வரவேற்றால்
செல்வத் திருமகள் வசித்திருப்பாள்!

விருந்து முடிந்தபின் மிச்சத்தை
உண்பவர் நிலத்தில் பயிரினங்கள்
விதைக்கா மல்தான் வளர்ந்திருக்கும்!

வந்தவர் செல்ல வருவோரை
அன்புடன் வாழ்த்தி வரவேற்றால்
சான்றோர் உலகே மகிழ்ந்திருக்கும்!
அங்கே விருந்தினர் ஆகிடுவார்!

கருமித் தனமாய் இருந்தவரின்
செல்வம் அழியும் நேரத்தில்
விருந்தின் பயனே அறியாமல்
வாழ்ந்தேன் என்றே வருந்திடுவார்!

தொட்டுற வாடும் விருந்தினரைப்
பாரா முகமாய் வரவேற்றால்
மோந்ததும் வாடும் அனிச்சம்பூ
போல வாடித் தளர்ந்திடுவார்!

இனியவை கூறல் -- 10
நல்லதைப் பேசினால் நன்றாக வாழலாம்

அறநெறி வாழ்வை ஏற்றவர்கள்
பேசும் சொற்கள் இனிமைதான்!

அள்ளிப் பொருளைத் தருவதினும்
இன்சொல் பேசுதல் உயர்வாகும்!

அகமும் முகமும் மலர்ந்திருக்க
இன்சொல் கூறுதல் அறமாகும்!

பணிவும் இன்சொல் பேசுதலும்   
அணிகல னாகும் மாந்தருக்கு!

இனிமை யாகப் பேசுவோரை
வறுமை என்றும் தீண்டாது!

இன்சொல் பேசுவோர் வாழ்வினிலே
பாவம் தேய்ந்தே அறம்வளரும்!

நன்மை வளர்க்கும் இன்சொல்லைப்
பேசினால் நன்மை உண்டாகும்!
துன்பம் தருதல் அற்பந்தான்!
இன்பம் தருவது இன்சொல்லே!

கனிகளை விட்டுக் காய்களையே
உண்டு களிக்க நினைப்பவர்போல்
இன்சொல் இருக்க வன்சொல்லை
விரும்பிப் பேசுதல் அறிவின்மை!

செய்ந்நன்றி அறிதல் -- 11
நன்றி மறவாப் பண்பே உயர்வை அளிக்கும்

மற்றவ ருக்கு உதவாமல்
மற்றவர் நமக்கு உதவிசெய்தால்
அந்த உதவிக் கீடாக
ஈரே  ழுலகும் ஆகாது!

தேவை யான நேரத்தில்
செய்யும் உதவி சிறிதெனினும்
உலகைக் காட்டிலும் பெரிதாகும்!
எதிர்பார்ப் பின்றி உதவுங்கள்!
கடலைக் காட்டிலும் பெரிதாகும்!

தினையின் அளவே உதவிகளைச்
செய்த போதும் அதன்பயனைப்
பனையள வாகப் போற்றுவார்கள்!

உதவிக் குள்ள சிறப்பெல்லாம்
பெறுவோர் பண்பின் அளவாகும்!
மாசே இல்லா நட்பினையும்
இன்னலில் துணையாய் இருந்தோரையும்
என்றும் மறக்கக் கூடாது!

எத்தனைப் பிறவி எடுத்தாலும்
சான்றோர் மறக்க மாட்டார்கள்!
நன்மையை என்றும் மறக்காதே!
தீமையை உடனே மறந்துவிடு!
முன்னர் செய்த நன்மையை
மனதில் நாளும் நினைத்தேதான்
பின்னர் செய்த துன்பத்தை
உடனே மறப்பது பண்பாகும்!

நடுவுநிலைமை -- 12
நடுநிலையே சிறந்த அறமாகும்

நீதி என்றும் வழுவாமல்
நடுநிலை காப்பதே அறமாகும்!
இப்படி உள்ளவர் செல்வங்கள்
பரம்பரைக் கெல்லாம் உதவிடுமே!

நடுநிலை தவறும் பண்பாலே
மலைபோல் செல்வம் குவிந்தாலும்
அற்பம் என்றே ஒதுக்கிவிடு!

நடுநிலை போற்றிய பண்பாளன்
என்பதைப் புகழும், பழியுந்தான்
உலகில் காட்டும் அளவுகளாம்!

வறுமையும் வளமும் அணியல்ல!
நடுநிலை சான்றோர் அணியாகும்!
நடுநிலை விட்டே தவறிவிட்டால்
கெடுநிலை அவனை அழித்திடுமே!

நீதி மானின் வறுமையினை
பெருமை என்பார் சான்றோர்கள்!
சாயா துலாக்கோல் போலத்தான்
நடுநிலை கொண்டோர் சான்றோராம்!

ஒருதலைத் தீர்ப்பு சொல்லாத
நியாயப் பண்பே நடுநிலையாம்!

நுகர்வோர் நிலையில் தான்நின்று
வணிகம் செய்தல் வணிகருக்கு
சிறப்பைக் கொடுக்கும் ஒழுங்காகும்!
(தொடரும்)



 


Post a Comment

Previous Post Next Post