Ticker

6/recent/ticker-posts

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க முடியாது...முஜிபுர் ரஹ்மான்

இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க முடியாது. அதனால் நாடாளுமன்றத்தில் இருக்கும் வெளிநாட்டவரை சபாநாயகர் வெளியில் அனுப்புவார் என்று எதிர்பார்ப்பதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.11.2022) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்திற்கான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டுக்கு தேவையான சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றும் போது அந்த சட்டங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் உள்ளது.

இருப்பினும் குறித்த சட்டத்தை மீறுபவர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் மெளனமாக இருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் இருக்கும் வெளிநாட்டவரை வெளியில் அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது. ஆனால் சபாநாயகரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை நினைத்து நாங்கள் வெட்கப்பட வேண்டும்.

இரட்டை குடியுரிமை பெற்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். அவர் 2004இல் இருந்து பிரித்தானிய கடவுச்சீட்டு பயன்படுத்தி வருகின்றார் என்பது குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் 2021இல் இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்தபோது, இவரின் ஆவணங்களை பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இவர் இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதால் இவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்கள நாயகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதி, ஆலோசனை கேட்டிருக்கின்றார்.

இருப்பினும் அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லாமையால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்க திணைக்களம் மறுத்துள்ளது.

ஆனால் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோது, 2022 செப்டெம்பர் 12ஆம் திகதி அவருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நாயகத்தினாலே இது வழங்கப்பட்டிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பெற்றுக்கொள்ள முடியாமல் இராஜதந்திர கடவுச்சீட்டை ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனவே நாட்டுக்கு சட்டம் இயற்றும் நாடாளுமன்ற உறுப்பினரே சட்டத்தை மீறி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அதனால் நாடாளுமன்றத்தில் வெளியாளராக இருக்கும் குறித்த உறுப்பினரை வெளியில் அனுப்புவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.”என்று கூறியுள்ளார்.


 


Post a Comment

0 Comments