Ticker

6/recent/ticker-posts

Ad Code



காற்பந்தாட்டத் தொடரில் மொரோக்கோவின் வெற்றிப் பயணம்!



"ரபாத்"தைத் தலைநகராகக் கொண்ட மொரோக்கோ வடக்கு ஆபிரிக்காவிலுள்ள  ஒரு மன்னராட்சி நாடாகும். 1956ல் பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்ற  இந்நாடு புராதன காலத்தில் "அல்மஹ்க்ரிப்" என்று அழைக்கபட்டு வந்தது.

ஆறாம் முஹம்மத் மன்னரை ஆட்சியாளராகக் கொண்டுள்ள இந்நாட்டின், பிரதமராக அப்பாஸ் அல்பாஸி இருந்து வருகின்றார்.

அட்லாண்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள மொரோக்கோ நாடு, கிழக்கே அல்ஜீரியா, வடக்கே ஸ்பெயின், தெற்கே மௌரித்தேனியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட 1,72,414 சதுர மைல் பரப்பான நாடாகும். இதன் சனத்தொகை சுமார் 4 கோடியாகும்.


ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத ஒரேயொரு "ஆபிரிக்க நாடு" மொரோக்கோவாகும். ஆனாலும் இது அமெரிக்காவின் நேட்டோ அங்கத்துவ நாடு  அல்லாத,  பிரதான உறுப்பு நாடாக இருக்கின்றது!

காலிறுதியில் ஸ்பெயினை சாய்த்து வரலாறு படைத்த மொரோக்கோ!

கத்தார்-2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் சுறுசுறுப்பாக விளையாடிய ஸ்பெயினைத் தன்னம்பிக்கையால் சாய்த்து வரலாறு படைத்துள்ள மொரோக்கோ, இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது  பெனால்டிகளின் மூலம் 3:0 எனும் கோல் கணக்கில் வெற்றிவாகை சூடி உலகக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது!

ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்ததால் வெற்றியாளரை பெனால்டிகளின் மூலம் நிர்ணயிக்க வேண்டியிருந்தது. பல இளம் வீரர்களைக் கொண்ட ஸ்பெயின் தான் எடுத்த எல்லா பெனால்டிகளையும் கோலாக்கத் தவறிவிட்டமை மொரோக்கோவின் அதிர்ஸ்டமாகும்!

ஆட்டம் சென்ற விதம் ஸ்பெயினுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற உணர்வைத் தந்தபோதிலும், மொரோக்கோவின் விடாமுயற்சிக்குக் கிடைத்த வெகுமதி இந்த வெற்றி எனலாம்!

சுவிட்சர்லாந்துக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 6:1  கோல் கணக்கில் அமோக வெற்றி கண்ட போர்ச்சுகல்லின்  நட்சத்திர ஆட்டவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்து விளையாடவில்லை.

இவரே உலகில்  மிகவும் பிரபலமான கால்பந்தாட்ட வீரராகக் கருதப்படுகின்றார். நிகழ்வொன்றின்போது, ரொனால்டோவை அவரது போர்த்துக்கல் பயிற்சியாளர் பெஞ்சில் உட்காரச்செய்து, அவரை உதாசீனம் செய்தார். இதுவரை நடந்த போட்டியின் மிக முக்கியமான ஆட்டம்; சுவிட்சர்லாந்துடனான நாக் அவுட்.

போர்த்துக்கல்லின் மிக முக்கியமான வீரர் போட்டியின் மிக முக்கியமான ஆட்டத்தில் விளையாடாதது விளையாட்டுப் பிரியர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. அதற்கான காரணம் ரொனால்டோ தவறாக நடந்து கொண்டதுதான்! உலகக்கோப்பையின் முந்தைய ஆட்டத்தில் அவருக்குப் பதிலாக பயிற்சியாளர் வேறொருவரை நியமித்ததில் ரொனால்டோ கோபமடைந்தபோது, பயிற்சியாளர் மிகவும் அதிருப்தி அடைந்தார். அத்துடன் ரொனால்டோ விளையாடாத அந்த ஆட்டத்தை போர்த்துக்கல் 6:1 என்ற கணக்கில் வென்றது. போட்டியின்போது ரொனால்டோவுக்குப் பதிலாக விளையாடிய  21 வயது இளைஞன் மூன்று கோல்களை அடித்தமை குறிப்பிடத்தக்கது!

மொரோக்கோவின் வரலாறு கண்ட வெற்றி!



உலக கோப்பை காற்பந்து போட்டியின் மூன்றாவது காலிறுதி திசம்பர் 10ம் திகதி  போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகளுக்கிடையில்  இலங்கை  நேரப்படி, இரவு 8.30 மணிக்கு அல்துமாமா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

பரபரப்புடன் ஆட்டம் தொடங்கிய நிலையில் இரு அணிகளும் கோல் போஸ்ட்டை வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்  நெருங்கின. ஆனால் ஒவ்வொரு முறையும் இரு அணிகளும் சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தவே "கோல் கனவு" கைகூடவில்லை!

கடந்த போட்டியில் ரொனால்டோவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டு, ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய 21 வயதான 'கோன்காலோ ரமோஸ்'மீது இப்போட்டியின்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது! அதற்கேற்ப ஆட்டத்தின் இரண்டாவது நிமிடமே கோல் அடிக்க அவர் முயற்சித்தபோதிலும், அது கைகூடவில்லை!

யாரும் எதிர்பாராத விதமாக ஆட்டத்தின் முதல் பாதிக்கு முன்பாக மொரோக்கோ வீரர் யூசெப் என்-நெஸிரி கோல் ஒன்றை அடித்தார். இதனால் முதல் பாதியில் 1:0 என்ற கணக்கில் மொராக்கோ முன்னிலை வகித்தது!

இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்  போர்ச்சுகல் இருந்ததால், ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ களமிறக்கப்பட்டார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது எதுவுமே நடக்கவில்லை! இரண்டாம் பாதியில் மொராக்கோவின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்ததை போர்ச்சுகல்  அணி உணர்ந்தது.

ரொனால்டோ இருமுறைகள் முயன்றும் அது மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பௌனௌவால் திறம்பட தடுக்கப்பட்டது! இதனால், போர்ச்சுகல் பரிதாபமாக வெளியேற வேண்டியேற்பட்டதால், இறுதியில் 1:0 என்ற கணக்கில் போர்ச்சுகல்லை வீழ்த்திவிட்ட வீராப்பில்  மொரோக்கோ அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது!


இதன்மூலம் ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆபிரிக்க அணியாக மொரோக்கோ வரலாறு படைத்தது!

36 வருடங்களுக்கு முன்பு மெக்சிகோவில் நடைபெற்ற உலகக்கோப்பைக் காற்பந்துத் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் ஆபிரிக்க அணி என்ற பெருமையை பெற்றிருந்த மொரோக்கோ, தற்போது கத்தார்-2022 உலகக் கோப்பையில் முதன் முறையாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றுக்கொண்ட அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது!

அல்பைட் மைதானத்தில் நடை பெற்ற
கத்தார்- 2022 உலகக்கிண்ணக் காலிறுதிப் போட்டியில்  இங்கிலாந்து அணியை பிரான்ஸ்  அணி வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணி தனது தோல்வியைத் தொடர்ந்து, உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ள நிலையில்,  எதிர்வரும் புதன்கிழமையன்று நிகழ்வுள்ள அரையிறுதிப் போட்டியில் மொறொக்கோ அணி  பிரான்ஸ் அணியை   எதிர்கொள்ளவுள்ளது!

செம்மைத்துளியான் 


 


Post a Comment

0 Comments