GETTY IMAGES
பிபிசி நாடகமான The Serpent-ல்(சர்ப்பம்) சித்தரிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு தொடர் கொலையாளி, நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நேபாள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆசியா முழுவதும் 1970களில் நடந்த பல கொலைகளுக்குப் பொறுப்பானவராக அறிவிக்கப்பட்ட பிரெஞ்சு தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இன்று சிறையை விட்டு வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளிவந்ததை மிகப்பெரிய விஷயமாக உணர்கிறேன். நிறைய செய்ய வேண்டியுள்ளது என்று ஏஎஃப்பி செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவரான சார்லஸ் சோப்ராஜ், கடந்த 1975ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இரு சுற்றுலா பயணிகளை கொலை செய்த குற்றத்திற்காக 19 ஆண்டுகளை சிறையில் கழித்த நிலையில், அவரை விடுதலை செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பிரான்ஸ் நாட்டுக்கு அவர் திரும்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கோனி ஜோ ப்ரோன்ஜிக் மற்றும் அவரது நண்பர் லூரெண்ட் கேரயர் ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை சார்லஸ் சோப்ராஜ்-க்கு விதிக்கப்பட்டது. லூரெண்ட் கேரயரை கொன்ற குற்றத்திற்காக கடந்த 2004ம் ஆண்டும் கோனி ஜோ ப்ரோன்ஜிக்கை கொன்ற குற்றத்திற்காக கடந்த 2014ம் ஆண்டும் அவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், சோப்ராஜின் வயது முதிர்வு (78 வயது) மற்றும் நன்னடத்தை காரணமாக அவருக்கு சிறைத்தண்டனையில் சலுகை வழங்க வேண்டும் என்று கோரி அவரது வழக்கறிஞர் குழு மனு தாக்கல் செய்ததை அடுத்து, நேபாள உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க புதன்கிழமை உத்தரவிட்டது.
75 சதவீத சிறை தண்டனையை அனுபவத்தவர்கள் மற்றும் சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்துவர்கள் ஆகியோரை விடுதலை செய்ய நேபாள சட்டத்தில் உள்ள விதி அனுமதிக்கிறது.
"அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது கைதியின் மனித உரிமைகளுக்கு ஏற்புடையதல்ல" என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை கூறுகிறது.
மேலும் இதய நோய்க்காக அவர் எடுத்துவரும் சிகிச்சையும், சோப்ராஜ் விடுதலை செய்யப்படுவதற்கான மற்றொரு காரணியாக உள்ளது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
திகிலூட்டும் கணிப்பு
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட சைகோன் பகுதியில் ( தற்போது ஹோ சி மின் என்று அழைக்கப்படுகிறது) 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய தந்தைக்கும் வியட்நாம் தாய்க்கும் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். அவரது பிறந்த இடம், எளிதாக பிரான்ஸ் குடியுரிமை கிடைக்க அவருக்கு உதவியது.
சிறுவயதில் தந்தையால் நிராகரிக்கப்பட்டது சோப்ராஜின் மனதில் வெறுப்பையும் கசப்பை அதிகளவில் ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனது நாட்குறிப்பில், ‘தந்தைக்கான கடமையை நீங்கள் தவறவிட்டதால், நீங்கள் வருத்தப்படும்படி செய்வேன்’ என்று சோப்ராஜ் குறிப்பிட்டிருந்தார். திகிலூட்டும் வகையில் இந்த கணிப்பு நிஜமாகிப் போனது.
தனது காதல் மனைவி சாண்டல் கும்பேன்யூ உடன் இணைந்து வழிப்பறி உள்ளிட்ட சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார். 1973ல், டெல்லியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் நகைக்கடைக்காரர்களிடம் ஆயுதமேந்திய கொள்ளையில் அவர் ஈடுபட்டார். எனினும் இது தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சோப்ராஜ் தனது மனைவியின் உதவியுடன் தப்பினார். எனினும், மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒருகட்டத்தால் சாண்டல், சோப்ராஜை பிரிந்து மீண்டும் பிரான்ஸுக்கே சென்றுவிட்டார்.
ஹிப்பி பயணிகளை குறிவைத்து குற்றம்
1960கள் மற்றும் 1970களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்த இளைஞர்கள் ஹிப்பி கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர். அவர்கள் வழக்கமான வாழ்க்கை முறைகள், உடை அணிதல் மற்றும் நடத்தை ஆகியவற்றை நிராகரித்தனர், மேலும் அமைதி மற்றும் அன்பின் அடிப்படையில் வாழ்க்கையை வாழ முயன்றனர். ஐரோப்பிய நகரங்களில் இருந்து இரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு வந்து புதுபுது கலாச்சாரங்களை அறிந்துகொண்டனர்.
இந்தியாவில் கோவா, வாரணாசி, டெல்லி, பம்பாய், மெட்ராஸ் ஆகிய பகுதிகளில் ஹிப்பிக்கள் அதிகம் பயணம் செய்துள்ளனர் (1970களின் இறுதியில் இரான் புரட்சி, சோவியத் ஒன்றியத்தின் ஆப்கான் படையெடுப்பு ஆகியவற்றுக்கு பின்னர் இந்த வகை பயணம் வீழ்ச்சி அடைந்தது)
இத்தகைய ஹிப்பி பயணிகளை குறிவைத்து தனது குற்றச் செயல்களை சோப்ராஜ் அரங்கேற்றினார். ஹிப்பி பயணிகளிடம் பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்று பின்னர் மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்து அவர்களிடம் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டார்.
இளம் பெண்களை குறிவைக்கும் இவரது இயல்புக்காக பிகினி கில்லர் என்றும் சிறையில் இருந்து தப்பிக்கும் இயல்புக்காக சர்ப்பம் என்றும் அவர் அழைக்கப்பட்டார். இவரை மையமாக வைத்து கடந்த 2020ம் ஆண்டு பிபிசி தி செர்பென்ட் என்ற சீரிஸை வெளியிட்டது. பின்னர் நெட்பிளிக்ஸில் இது வெளியானது.
துணிச்சலாக தப்பிக்கும் இயல்பு
1972 முதல் 1982 வரையிலான காலத்தில் 20க்கும் மேற்பட்டோரை சோப்ராஜ் கொலை செய்துள்ளார். விஷம் வைத்தல், கழுத்தை நெரித்தல், அடித்தல் மற்றும் எரித்தல் ஆகிய பாணியில் இந்த கொலைகள் நடந்துள்ளன.
அசோகா ஹோட்டல் கொள்ளை முயற்சியிலும் சரி அதற்கு பிந்தைய சம்பவங்களிலு சரி அவர் கைதாகி சிறை சென்றபோதெல்லாம், அங்கிருந்து சமார்த்தியமாக தப்பியுள்ளார். மேலும், சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசதியான வாழ்க்கையையும் அவர் வாழ்ந்து வந்துள்ளார்.
1986ம் ஆண்டு அவர் சிறையில் இருந்து தப்பித்த சம்பவம் பல்வேறு ஆச்சரியங்களை கொண்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். அப்போது, திராட்சை, பிஸ்கெட்ஸ் ஆகியவற்றில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்தது. அவற்றை சாப்பிட்ட அதிகாரிகளும் கைதிகளும் மயக்கமடைந்தனர். இச்சூழலை பயன்படுத்தி அவர் சிறையில் இருந்து தப்பினார். பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரது சிறை தண்டனை 10 ஆண்டுகள் மேலும் அதிகரிக்கப்பட்டது.
சிறையில் இருந்து தப்பித்ததும், மீண்டும் சிக்கியதும் அவர் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் 20 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பிறகு சோப்ராஜ் தாய்லாந்துக்கு நாடு கடத்தப்படுவதாக இருந்தது. அங்கு, 5 கொலை வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். ஒருவேளை அவர் நாடு கடத்தப்பட்டு இருந்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கலாம். 1997ம் ஆண்டு சோப்ராஜ் விடுதலையானபோது அவரை நாடு கடத்துவதற்கான காலக்கெடு முடிந்திருந்தது. . மரணதண்டனையில் இருந்து தப்பிக்கவே சோப்ராஜ் இவ்வாறு திட்டம் தீட்டினார் என்பது விமர்சகர்களின் வாதம்.
bbctamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments