ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளுக்கு #strengthenMMDA அமைப்பின் பகிரங்க மடல்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் கட்சிகளுக்கு #strengthenMMDA அமைப்பின் பகிரங்க மடல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு,

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திற்கான திருத்தங்களை செய்கின்ற பணியில் ஒரு முக்கியமான கட்டம் எட்டப்பட்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, முஸ்லிம்களைத் தலைமையாகக் கொண்ட பிரதான கட்சிகள் மூன்றுக்கும் #strengthenMMDA அமைப்பு இந்தப் பகிரங்க மடலை வரைகின்றது.


கடந்த காலங்களில் இனவாதம் தலைதூக்கி இருந்த நேரத்தில் பல அழுத்தங்களைப் பிரயோகித்து எமது தனியார் சட்டத்தை இல்லாமல் ஆக்கவும் அல்லது அந்த சட்டத்தினுள் எமது மார்க்கத்திற்கு முரணான சித்தாந்தங்களை உட்புகுத்தவுமான பல முன்னெடுப்புகள் நடைபெற்றது. ஆனால் இன்று அரசியல் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன. பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினரை சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்ற சூழல் தணிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கான திருத்தம் என்பது ஒரு முக்கியமான கட்டத்தை எட்டி இருக்கின்றது.

சமூகத்தில் இந்தச் சட்ட திருத்தம் தொடர்பாக வெகுவாக எழுந்த அதிருப்திக் குரல்களின் வெளிப்பாடாக இன்று மக்கள் பிரதிநிதிகளைக் கலந்தாலோசிக்கின்ற ஒரு நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் வருவதற்கான சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்தச் சட்டத் திருத்தமானது எந்த வகையிலும் இனவாத நிகழ்ச்சி நிரலுக்குள் விழுந்து விடாமலும், மார்க்கத்திற்கு முரணான சித்தாந்தங்கள் எமது தனியார் சட்டத்தில் உட்புகுத்தப்படாமலும் பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் தலையாய பொறுப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல்களைப் பின்பற்றி அமையப்பெற்றது. எனவே செய்யப்படுகின்ற திருத்தங்கள் மார்க்க வழிகாட்டலுக்கு அமைவாக இருப்பதை உத்தரவாதப் படுத்துவது மிக அவசியம்.

இந்த விடயத்தில் நீண்ட காலமாகப் பொறுப்பு வாய்ந்த பணி ஒன்றினை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செய்து வருகின்றது. சட்ட திருத்தத்தில் மார்க்க விடயங்கள் சம்பந்தமான முழு ஆலோசனையும் ஜமியத்துல் உலமாவின்வழிகாட்டலின் பெயரில் அமைய வேண்டும் என்பதோடு மார்க்கத்திற்கு முரணான சித்தாந்தங்களால் உந்தப்பட்டிருக்கின்ற பெண் நிலைவாத அல்லது பால்நிலை சமத்துவம் பேசுகின்ற அமைப்புக்களினால் ஏற்படுகின்ற அழுத்தங்களின் பின்னணியில் செய்யப்படக்கூடாது என்பதையும் #strengthenMMDA அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

சட்டத்திருத்தம் தொடர்பில் பின்வருவன முக்கியமான விடயங்களாக அமைகின்றன.

1. திருமணம் ஒன்றின் ஒப்பந்ததாரர்கள் மணமகனும் வொலியும் மட்டுமே. (மணமகளின் சம்மதம் பெறப்பட வேண்டும்)

2. பெண்கள் காதிகளாக நியமிக்கப்பட முடியாது.

3. பதிவு செய்யப்படாத காரணம் ஒன்றுக்காக இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட வழக்காற்று திருமணம் ஒன்று (நிக்கா) வலிதற்ற திருமணம் எனக் கொள்ளப்பட முடியாது.

4. திருமணம் செய்வதற்கான ஆகக்குறைந்த வயது 18 என சட்டம் நிர்ணயிக்கின்ற போது விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடியவறான விதிவிலக்கு வாசகம் ஒன்று சட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

5. பலதாரமணம் நிபந்தனைகளோடு அனுமதிக்கப்படுமாயின் அந்த நிபந்தனைகள் மார்க்க வழிகாட்டலுக்கு அமைவானது என்பதை மார்க்க அறிஞர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தீர்மானிக்க வேண்டும்.

6. காதி நீதிமன்றங்களில் இருக்கின்ற குறைபாடுகள், அக்குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டு காதி நீதிமன்றங்கள் முறையாக செயல்படுவதை உத்தரவாதப்படுத்தும் நோக்கிலேயே சுட்டிக் காட்டப்பட வேண்டுமே அன்றிக் காதி நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு மாவட்ட நீதிமன்றங்களுக்கு நியாயாதிக்கம் கையளிக்கப்படுவதை அனுமதிக்க
முடியாது.

7. காதி நீதிமன்றங்கள் என்ற சொல்லாடல் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு "Marriage Conciliator" என்ற சொற்பதம் உள்வாங்கப்படுவதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் "காதி திமன்றங்கள்" என்பது முஸ்லிம் சமூகத்தின் ஒரு நூற்றாண்டு கால அடையாளமாகும்.

மேலே கூறப்பட்ட விடயங்களில் எந்த விட்டுக்கொடுப்புகளும் யாருக்காகவும் செய்யப்படக்கூடாது. இதனை உத்தரவாதப்படுத்த வேண்டியது பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளின் கடமையாக இருக்கின்றது. அவ்வாறான விட்டுக் கொடுப்புகள் செய்யப்படுகின்ற போது எதிர்காலத்தில் அது எமது சமூகத்தை பல சிக்கலான சூழ்நிலைகளுக்குட் தள்ளக்கூடிய வாய்ப்புகள் மிக ஏராளமாக இருக்கின்றன.

எனவே எமது முன்னோர்கள் பல பிரயத்தலங்களுக்கு மத்தியில் ஒரு கட்டுக்கோப்பான முஸ்லிம் சமூகத்தை எமது மண்ணில் வழிநடத்துவதற்கென்று உருவாக்கித் தந்திருக்கின்ற எமது தனியார் சட்டத்தினை முறையாகப் பாதுகாக்கின்ற பொறுப்பு இன்று எமது மக்கள் பிரதிகளின் கைகளில் தரப்பட்டிருக்கின்றது. எனவே மக்களின் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்க கூடிய முன்னெடுப்புகளை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் வழிகாட்டலோடு மிகவும் பொறுப்புடன் கையாள்வதைக் கட்சிகள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என இந்தக் கட்சிகளை #strengthenMMDA அமைப்பு கேட்டுக் கொள்கின்றது.

இவ்வண்ணம்,

(#strengthenMMDA அமைப்பு)


 

Post a Comment

Previous Post Next Post