என்னை சலீம் மாலிக் வேலைக்காரன் போல் நடத்தினார்..! வாசிம் அக்ரம் குற்றச்சாட்டுக்கு சலீம் மாலிக்கின் ரியாக்‌ஷன்

என்னை சலீம் மாலிக் வேலைக்காரன் போல் நடத்தினார்..! வாசிம் அக்ரம் குற்றச்சாட்டுக்கு சலீம் மாலிக்கின் ரியாக்‌ஷன்

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலிங் ஜாம்பவான் வாசிம் அக்ரம். சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் வாசிம் அக்ரம். பாகிஸ்தான் அணியீல் 1984ம் ஆண்டு அறிமுகமாகி 2003ம் ஆண்டுவரை ஆடினார்.

104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 414 மற்றும் 502 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மிரட்டலான இடது கை ஃபாஸ்ட் பவுலரான வாசிம் அக்ரம், அவரது கெரியரில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, சனத் ஜெயசூரியா, சுனில் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக், ஜாக் காலிஸ், கேரி கிறிஸ்டன், ராகுல் டிராவிட் ஆகிய மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களை தனது மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கால் தெறிக்கவிட்டுள்ளார்.

2003ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வாசிம் அக்ரம், இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்துவருகிறார். இந்நிலையில், Sultan: A Memoir என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் குறித்து அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

வாசிம் அக்ரம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தவர் சலீம் மாலிக். அவர் குறித்து சுயசரிதை புத்தகத்தில் எழுதிய வாசிம் அக்ரம், நான் பாகிஸ்தான் அணியில் சேர்ந்த புதிதில் நான் ஜூனியர் வீரர் என்பதால் அதைப் பயன்படுத்தி என்னை வேலைக்காரன் போல் நடத்தினார் சலீம் மாலிக். அவர்  ஒரு சுயநலவாதி, எதிர்மறையானவர். அவரது துணிகள் மற்றும் ஷூக்களை என்னை சுத்தம் செய்ய சொல்வார் என்று குறிப்பிட்டிருந்தார் வாசிம் அக்ரம்.

இது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பிய நிலையில், அதுகுறித்து விளக்கமளித்துள்ள சலீம் மாலிக், என்னை பற்றி என்ன மாதிரி அர்த்தத்தில் வாசிம் அக்ரம் எழுதியிருக்கிறார் என்றுஅவரிடம் கேட்க விரும்புகிறேன். நாங்கள் எங்கு சென்று ஆடினாலும் துணிகளை துவைக்க வாஷிங் மெஷின் இருக்கும். கைகளில் துவைக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் அவரது புத்தகத்தை படிக்கவில்லை. எனவே முழு விவரம் தெரியாமல் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. மேலும் நாங்கள் இருவரும் இணைந்து ஆடியிருக்கிறோம். அதனால் தேவையில்லாத சர்ச்சையை கிளப்ப நான் விரும்பவில்லை. 

நான் சுயநலவாதியாக இருந்தால், எனது கேப்டன்சியில் அவரை எப்படி ஆட வைத்திருப்பேன்..? அவரை எப்படி பந்துவீச வைத்திருப்பேன்..? எனது துணிகளை அவரை துவைக்கவைத்தேன், மசாஜ் செய்ய சொன்னேன் என்று சொல்வதெல்லாம் அவரை அவரே அசிங்கப்படுத்திக்கொள்வதாகும். இதுகுறித்து நான் இன்னும் அவரிடம் பேசவில்லை. எனவே எந்த அர்த்தத்தில் அவர் இப்படி எழுதினார் என்று தெரியவில்லை என்று விளக்கமளித்துள்ளார் சலீம் மாலிக்.
asianetnews



 


Post a Comment

Previous Post Next Post