''எங்க கிளப்புக்கு வாங்க.. 1,839 கோடி ரூபாய் தரோம்''.. ரொனால்டோவுக்கு வலை வீசும் சவுதி அரேபியா!

''எங்க கிளப்புக்கு வாங்க.. 1,839 கோடி ரூபாய் தரோம்''.. ரொனால்டோவுக்கு வலை வீசும் சவுதி அரேபியா!

கால்பந்து விளையாட்டு உலகின் நட்சத்திர வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து சமீபத்தில் விலகினார்.போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த முன்னணி வீரரான கிரிஸ்டியானோ ரொனால்டோ தனது கால்பந்து வாழ்வின் சாதனை பயணத்தை மான்செஸ்டர் யுனைடெட் அணியை அடித்தளமாகக் கொண்டு தான் தொடங்கினார்.

பின்னர் ஸ்பெனியின் முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட் அணியுடன் 2009இல் ஒப்பந்தம் செய்து விளையாடத் தொடங்கினார் ரொனால்டோ. பின்னர் பல ஆண்டுகள் கழித்து தன்னை வளர்த்தெடுத்த தாய் கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் 2021ஆம் ஆண்டில் கம்பேக் கொடுத்தார். இந்த வருகை இங்கிலாந்து கிளப் தொடர் ரசிகர்களுக்கும், குறிப்பாக மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகமிக்க செய்தியாக அமைந்தது.ஆனால் ஓராண்டிலேயே கிளப் நிர்வாகம், மேலாளர் ஆகியோருடன் ரொனால்டோவுக்கு மோதல் வெடித்தது.

பின்னர் ஊடக பேட்டி ஒன்றில் ரொனால்டோ, "அணியின் உரிமையாளர்கள் அணியின் வளர்ச்சி குறித்தோ, விளையாட்டை குறித்தோ கவலைப்படவில்லை. அணிக்கு கிடைத்த புகழை வைத்து பணம் சம்பாதிப்பதே உரிமையாளர்களின் குறிக்கோளாக உள்ளது" என பகீரங்கமாக குற்றஞ்சாட்டினார்.இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகியதாக அவர் அறிவித்தார். தற்போது உலகக் கோப்பை போட்டி நடைபெறுவதால் போர்ச்சுகல் அணிக்கு விளையாடி வரும் ரொனால்டோ இதன் பின்னர் எந்த கிளப்பில் சேரவுள்ளார் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த AL NASSR என்ற கிளப் ரொனால்டோவுக்கு வலை வீசியுள்ளது.

தனது அணிக்கு விளையாட 225 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,839 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. ஆண்டுக்கு 75 மில்லியன் டாலர் தொகை என்ற முறையில் மூன்றாண்டு ஒப்பந்தத்திற்கு 225 மில்லியன் டாலர் தருகிறோம் என ரொனால்டோவுக்கு சவுதி கிளப் ஆபரை அள்ளி வீசியுள்ளது.

இந்த ஆஃபரை ரொனால்டோ ஏற்பாரா என்று ஆர்வம் கிளம்பியுள்ளது. காரணம் முன்னணி கால்பந்து வீரர்கள் அனைவரும் ஐரோப்பிய கிளப்களில் தான் விளையாட விரும்புவார்கள். ஓய்வு காலத்தில் தான் ஆசியா, அமெரிக்க கிளப்புகளில் விளையாடுவார்கள் என்ற நிலையில் சவுதி கிளப்பின் ஆஃபருக்கு ரொனால்டோ என்ன பதில் சொல்லப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
news18


 


Post a Comment

Previous Post Next Post