Ticker

6/recent/ticker-posts

7.1 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்த டெல்லி கேபிடல்ஸ்… குஜராத் அணி படுதோல்வி…

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தெடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 106 ரன்கள் இலக்கை 7.1 ஓவரிலே அடைந்து சாதனை படைத்துள்ளது டெல்லி அணி. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் முதலிடத்தில் மும்பையும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, உ.பி. வாரியர்ஸ், குஜராத், பெங்களூரு அணிகள் உள்ளன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டது.

மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சபினேனி மேகனா ரன் ஏதும் எடுக்காமலும், வோல்வார்ட் 1 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். ஹர்லீன் தியோல் 20 ரன்னும், வேர்ஹாம் 22 ரன்னும், கிம் கார்த் ஆட்டமிழக்காமல் 32 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை எடுத்தது. 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்களி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷெபாலி வர்மா, மெக் லேனிங் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி பறந்ததால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. குறிப்பாக ஷெபாலி வர்மா அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். 18 பந்தில் அரைச்சதம் அடித்த அவர், 28 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்சர் 10 பவுண்டரியுடன் 76 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக மெக் லேனிங் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். 7.1 ஓவரில் டெல்லி அணி 107 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 ப்ரீமியர் ஆட்டங்களில் இன்றைய ஆட்டம் ஓர் அதிரடியான சேஸிங்காக கருதப்படுகிறது.
news18



 



Post a Comment

0 Comments