திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-80

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-80


குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

மாப்ள... நம்ம வாழ்க்கையில, சேக்காளிங்க இருப்பாங்க. பகையாளிங்க இருப்பாங்க. நம்ம நாட்டுக்காரங்களோடு பழகுவோம். வெளி நாட்டுக் காரங்களோடும் பழகுவோம். எதாவது சிக்கல் வரும்போது, இப்படில்லாம் அவங்களை பிரிச்சுப் பாக்காம, நன்மை தரக்கூடிய நடுநிலைமையோடு நடக்கது ஒரு அறச் செயல் மாப்ள.

குறள் 153 
இன்மையுள் இன்மை விருந்துஒரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை. 

தம்பி.. வறுமையிலும் மோசமான வறுமை எது தெரியுமா? வந்த விருந்தாளுங்களை கவனிக்க முடியாம போறது தான். 

அது மாதிரி வலிமையிலும் வலிமை எது தெரியுமாடே? மடப் பயலுவொ செய்யுத வேலைகளை எல்லாத்தையும் பொறுத்துக் கொள்ளுதது தான்.

குறள் 206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான்.

பிறத்தியான் எவனும் தனக்கு எந்த ஒரு கெடுதலும் செய்திறக்கூடாதுன்னு சிலவனுவொ நெனைய்ப்பானுவொ. அப்பிடிப்பட்டவனுவொ அடுத்தவொளுக்கும் எந்த கெடுதலும் செய்யாம இருக்கணும். 

குறள் 371
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

மாப்ள.. துட்டு சேரும்னு ஓந் தலைல எழுதியுருந்தா, அதைச் சேக்கதுக்கு உண்டான ஊக்கம் உண்டாவும்.

இருக்கதையும் தொலைச்சிருவ அப்படின்னு எழுதியிருந்தா, அதை அழிக்கதுக்குத் தேவையான சோம்பேறித் தனம் வந்திரும். 

குறள் 531.
இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

ஒருத்தன் நல்ல மகிழ்ச்சியா இருக்கும் போது, அவனுக்கு வார சோம்பேறித்தனம் இருக்கே... அது கோவத்தை விட கொடுமையானது. 
(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post