Ticker

6/recent/ticker-posts

இமாம் புகாரி(ரஹ்) -- வாழ்வின் இறுதி நாட்கள்

நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?”  (அல்குரான்29:2)

இஸ்லாம் வழங்கிய ஆட்சி அதிகாரங்களை அனுபவித்த ஆட்சியாளர்களில் அநேகமானவரிடம் இஸ்லாத்தின் போதனைகள் குடிகொள்ளவில்லை என்பதற்கு இந்த வரலாற்றுப்பக்கமும் ஒரு சான்றாகும். 

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளின் இறுதிநாட்களில்  உலகில் பரந்திருந்த இஸ்லாமிய உலகின் கிழக்கே ஆசியாவில் இருந்த இஸ்லாமிய நாடுகளான நிக்ஷாபூர்,புகாரா,சமர்கண்ட் ஆகியவற்றின் ஆட்சியாளர்களால் கடுமையாக துன்புறுத்தப்பட்டார் என்பது அநேக முஸ்லிம்கள் அறியாததாகும்.

அன்னாருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக.

இமாம் புகாரி(ரஹ்) ற்கு ஏற்பட்ட முதலாவது பெரும் சோதனை நிக்ஷாபூரில் இருந்த அவரின் ஆசிரியர் க்ஷேக் முஹம்மத் பின் யஹ்யாவிடமிருந்து வந்தது ஆகும். 

க்ஷேக் முஹம்மத் பின் யஹ்யா அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ‘அல்குரான் உருவாக்கப்பட்டது’ எனக்கூறுவதாக குற்றம் சாட்டி பிரச்சாரம் செய்தார். ஆனால் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ‘அல்குரானின் உச்சரிப்புக்காக நாவும்,உதடுகளின் அசைவுகளும் மாத்திரமே’ உருவாக்கப்படுகின்றது,எது உச்சரிக்கப்படுகின்றதோ அது உருவாக்கப்படவில்லை’ என்றே கூறினார். இக்கூற்றை திரிவுபடுத்திய க்ஷேக் முஹம்மத் பின் யஹ்யா அவர்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் அல்குரான் படைக்கப்பட்டது எனக்கூறுவதாக பாரதூரமான செய்தியைப்பரப்பினார். இது இமாம் புகாரி(ரஹ்) மீது அவரின் ஆசிரியருக்கு ஏற்பட்ட பொறாமையினால் என குறிப்பிடப்பட்டாலும் அல்லாஹ்வே நங்கறிந்தவன்.

 இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலி (ரஹ்) அவர்களுக்குமான சோதனை ‘அல்குரான் படைக்கப்பட்டது’ எனக் கூறும்படி கூறிய ஆட்சியாளர்களின் வேண்டுகோளை ஏற்காததால் அஹ்மத் இப்னு ஹம்பலி (ரஹ்) சிறையில் அடைத்து சித்திரவதை செய்ததாகும். அஹ்மத் இப்னு ஹம்பலி (ரஹ்) பற்றியும் ஒரு கட்டுரையில் வரைந்திருக்கின்றேன்.

இமாம் புகாரி(ரஹ்) ற்கு ஏற்பட்ட இரண்டாவது சோதனை புகாராவின் ஆட்சியாளரிடமிருந்து வந்தது.  புகாராவின் ஆட்சியாளர்,அவரின் குழந்தைகள் இமாம் புகாரி (ரஹ்) அவர்களிடம் கல்வி கற்க விரும்புவதாகவும் ஆளுநர் மாளிகைக்கு சமூகந்தந்து அவர்களுக்கு கற்பிக்குமாறும் இமாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.ஆனால் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் ‘கல்வி என்பது அதனை தேடுபவனின் வாயிற்படிகளை அடைவதில்லை மாறாக தேடுபவன் கல்வியுடையவனை அடைந்து கல்வியை அடையவேண்டும்’ என்ற கொள்கையை உடையவராக இருந்தார். கல்வியை இழிவுபடுத்த விரும்பாத இமாம் அவர்கள் ஆளுநரின் வேண்டுகோளை ஏற்கவில்லை. இதனால் ‘நான்’ என்ற ஆளுநரின் வெறி இமாமை புகாராவிலிருந்தே துரத்தியது. இறுதிவரை துரத்திக்கோண்டே இருந்தது.

இமாம் புகாரி(ரஹ்) புகாரா விலிருந்து நிக்ஷாபூருக்கு இடம்பெயர்ந்தார்.

இமாம் புகாரி(ரஹ்) சொன்னது சரிதான்,கல்வி என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் அருள்களில் ஒன்று,அதனை அடைய விரும்புபவர் பணிவாக செறுக்கின்றி நடந்து கொள்ளவேண்டும், அதனை தேடிப்பெற்றுக்கொள்ளவேண்டும். அது எல்லோரிடமும் சேர்வதில்லை.

இப்போது இமாம் புகாரி(ரஹ்) அவர்களுக்கு 62 வயதாகியது. இமாம் அவர்கள் நிஷாபூரின் சிறிது காலம் வாழும்போது நிக்ஷாபூரின் ஆளுநரிடமிருந்து செய்து ஒன்று வந்தது. இமாம் அவர்கள் தொடர்ந்து அங்கிருப்பதை அவர் விரும்பவில்லை எனவும் அங்கிருந்து வெளியேறுமாறும் உத்தரவு பிரப்பித்திருந்தார். இமாம் அவர்கள் அந்நகரத்தை விட்டு வெளியேறி தனது சொந்த ஊரான புகாராவை மீண்டும் அடைந்தார். இச்செயல் புகாராவின் ஆளுநரின் தூண்டுதலினால் ஏற்பட்டதாகவும் இருக்கலாம்.

தனது சொந்த ஊரான புகாராவிற்கு திரும்பி வந்ததும் வராததுமாக அதன் ஆளுநரிடமிருந்து மீண்டும் கடுமையான தொனியில் செய்தி வந்தது, இமாம் அவர்களை ‘இப்போதே’  நகரை விட்டு வெளியேறுமாறு அதில் எழுதியிருந்தார். செய்தி கொண்டுவந்த காவலர்கள் இமாம் அவர்களுக்கு சிறிதும் இரக்கம் காட்டவில்லை. இமாமின் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி எடுதுச்செல்லக்கூட நேரம் ஒதுக்கவில்லை. அவசர அவசரமாக அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இமாம் செய்வதறியாது நகரிலிருந்து வெளியேறி நகரின் ஒதுக்குப்புறமாக கூடாரமொன்றில் மூன்று நாட்கள் தங்கினார். அங்கிருந்து புத்தகங்களை ஒழுங்கு படுத்தியவருக்கு எங்கு போவதென்று தெரியவில்லை.

இமாம் அவர்கள் ‘சமர்கண்ட்’ ஐ நோக்கிப்பயணமானார். அவர் நகருக்குள் நுழையாமல் பக்கத்தில் இருந்த ‘கர்தனக்’ என்ற ஊரிற்கு சென்றார்.அங்கே அவரின் உறவினரான இப்றாகிம் பின் மகீல் என்பவரின் வீட்டிற்கு விருந்தாளியாக செல்வதென்பது அவரின் எண்ணமாக இருந்தது. இமாம் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கும் அரசகாவல் அதிகாரிகள் வருவதற்கு அதிகநேரம் செல்லவில்லை. சமர்கண்ட் இன் ஆளுநரிடமிருந்து கொண்டுவந்த செய்தியை அவர்கள் வாசித்தார்கள். அதில் அவ்வூரையும் சமர்கண்டையும் விட்டு உடனடியாக வெளியே செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்தார்கள்.

இது இரவு நேரம், அதுவும் நோன்புபெருநாள் இரவு,நாளை நோம்புப்பெருநாள்.ஆனால் கட்டளை ‘இப்போதே’ என்றிருந்தது,நாளை பெருநாள் கழித்து அடுத்தநாள் என்ற சலுகை இருக்கவில்லை. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் வயது மூப்பினாலும் எங்கே போவது என்று புரியாத திக்கற்ற நிலையினாலும் மிகவும் மனம் வருந்தினார். தன்னை கண்ணியப்படுத்திய உறவினர்களுக்கு தீங்கு செய்து விடுவார்களோ எனவும் பயந்தார். சோதனை கடுமையானதாக மாறியிருந்தது. 

இறைவனிடன் கையேந்தினார்:
 “இறைவா, உனது பூமி விசாலமானது, ஆனால் எனக்கு மிகவும் குறுகியதாகிவிட்டது, எனவே என்னை உன்னிடம் அழைத்துச் செல்” எனப்பிராத்தித்தார்கள்.

இப்ராஹிம் பின் மகீல் இரண்டு கழுதைகளை தயார் செய்தார். ஒரு கழுதையில் இமாம் அவர்களின் புத்தகங்களை ஏற்றினார். மற்றையதை இமாமின் சவாரிக்காகவும் தயார் படுத்தினார்.

இப்னு மகீல் வீட்டினுள் வந்து இமாம் அவர்களை கழுதைகளை நோக்கி அழைத்து வந்தார். வாசலில் இருந்து 20 எட்டுக்கள் எடுத்து வைத்திருப்பார், அதற்கப்பால் அவரால் நகரமுடியாது அவர் மிகவும் களைப்பாக இருப்பதாகவும் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு நகர மகீல் இடம் அனுமதி கோரினார். மகீல் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு செல்லும்படி கூறியதும் இமாம் அவர்கள் பாதையோரத்தில் அமர்ந்ததும் அவரின் கண்களை தூக்கம் வருடியது. 

ஹிஜ்ரி 256,சவ்வால் 1, நோன்புப்பெருநாள் இரவு இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் உயிர் அதே இடத்தில் பிரிந்தது.

இமாம் புகாரி (ரஹ்) அவர்களுக்கு 62 வயதாக இருக்கும்போது ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து மூன்று நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவரின் பயணம் இறைவனை நோக்கியதாகவே இருந்தது. அவருக்கு மாளிகைகளோ,சொத்து செல்வங்களோ,புகழோ இருக்கவில்லை. ஆனால் இன்று நிக்ஷாபூர், புகாரா,சமர்கண்ட் இன் ஆட்சியாளர்களை யாரும் அறியமாட்டார்கள். ஆனால் இமாம் புகாரி (ரஹ்) அவர்களை எல்லோரும் அறிகின்றனர்.

“அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்”. (அல்குர்ஆன் : 13:17 )

AKBAR  RAFEEK


Email;vettai007@yahoo.com


 



Post a Comment

0 Comments