லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் : சாம்பியன் பட்டம் வென்றது ஆசியா லயன்ஸ் அணி…

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் : சாம்பியன் பட்டம் வென்றது ஆசியா லயன்ஸ் அணி…


கத்தாரில் நடைபெற்று வந்த லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் வேர்ல்டு ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஆசியா லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற முக்கிய ஆட்டக்காரர்கள் பங்கேற்ற லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்தது. இந்திய வீரர்களை மட்டும் உள்ளடக்கிய இந்தியா மகாராஜாஸ், இந்தியாவை தவிர்த்து ஆசிய வீரர்களைக் கொண்ட ஆசியா லயன்ஸ் மற்றும் இந்தியா, ஆசியா வீரர்களை தவிர்த்த வேர்ல்டு ஜெயன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன.

கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த போட்டிகளில் ஷேன் வாட்சன் தலைமையிலான வேர்லடு ஜெயன்ட்ஸ் அணியும், ஷாகித் அப்ரிடி தலைமையிலான ஆசியா லயன்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற வேர்ல்டு ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன ஷேன் வாட்சன் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவின் ஜேக்கஸ் கலீஸ் 54 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். ஆசியா லயன்ஸ் தரப்பில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆசியா லயன்ஸ் அணியினர் விளையாடத் தொடங்கினர். தொடக்க பேட்ஸ்மேன்கள் உபுல் தரங்கா 28 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரியுடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். திலகரத்னே தில்ஷான் 58 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்துவந்த முகமது ஹபீஸ், மிஸ்பா உல் ஹக் தலா 9 ரன்கள் எடுக்க 16.1 ஓவரில் ஆசியா லயன்ஸ் அணி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அப்துல் ரசாக்கும், தொடர் நாயகனாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்காவும் தேர்வு செய்யப்பட்டனர்.
news18




 



Post a Comment

Previous Post Next Post