சீனி நோயாளிகள் நோன்பு நோற்கலாமா?

சீனி நோயாளிகள் நோன்பு நோற்கலாமா?



நான் இரண்டு வருட காலமாக சீனி நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து பாவித்து கொண்டிருக்கின்றேன், சீனி நோயுடையவர்கள் நோன்பு நோற்கலாமா? அவ்வாறாயின் மருந்துகள் எவ்வாறு பாவிப்பது? தயது செய்து சரியான பதிலை தரவும்,
சியான் முகமட், நாவலப்பிட்டி,

ஆரோக்கியம் எமது உடம்பின் தொழிற்பாட்டுக்கு ஏற்றாற்போல் ஓய்வு எடுப்பதிலும் தங்கியுள்ளது. இந்த ஓய்வு தூக்கத்தின் மூலமும் நோன்பின் மூலமும் எமது உடல் உறுப்புக்களுக்கு கிடைக்கின்றன. தூக்கத்தின் மூலம் எமது உடம்பில் உள்ள அனேகமான உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. நரம்புத்தொகுதி, தசைத்தொகுதி, எலும்புத்தொகுதிகள் பூரண ஓய்வைப் பெறுகின்றன. அத்துடன் சுவாசத்தொகுதியும் குருதிச்சுற்றோட்டத் தொகுதியும் அதன் தொழிற்பாடுகளை தூக்கத்தில் குறிப்பிடத்தக்களவு குறைத்து ஓய்வு பெறுகின்றன. எமது வாழ்க்கைச் சக்கரத்தில் தூக்கம் என்பது தினமும் ஏற்படக்கூடிய ஒரு விடயம் என்பதால் மேற்குறிப்பிட்ட உறுப்புக்கள் தினமும் ஓய்வு பெறுகின்றன.

ஆனால் மேற்குறிப்பிட்ட உடல் உறுப்புக்களை போலன்றி நாம் விழித்திருக்கும் போதும் தூங்கும் போதும் ஓய்வு பெறாது 24 மணி நேரமும் தொழிற்பட்டுக் கொண்டிருப்பது எமது சமிபாட்டு தொகுதியாகும். மனிதனுடைய பலத் தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. எனவே தான் தூக்கத்தை கடமையாக்க அல்லாஹ் நோன்பை கடமையாக்கி வருடத்திற்கு 30 நாட்கள் சமிபாட்டுத் தொகுதிக்கு ஓய்வை கொடுப்பதற்கான அமைப்பை ஏற்படுத்தியுள்ளான். ஆனால் நாம் நோன்புக்காலத்தில் உட்கொள்ளக்கூடிய உணவு வகைகளை உற்று நோக்கினால் நோன்பின் மூலம் எமது உடம்புக்கு தேவையான ஆத்மீக புத்துயிர்ப்பையும் சமிபாட்டுத் தொகுதிக்குத் தேவையான ஓய்வையும் சரிவரக் கொடுக்கின்றோமா என்பதை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய ஒரு விடயமாகும்.

நோன்பின் மூலம் எமக்கு இவ்வுலகில் பல நன்மைகள் உண்டு. நோன்பு பல நோய்கள் வராமல் தடுப்பதோடு பல நோய்களுக்கு ஒரு நிவாரணியாகவும் அமைந்துள்ளது. அத்துடன் உடம்புக்கு கேடுவிளைவிக்கக் கூடிய பழக்க வழக் கங்களை கைவிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

நோன்பு ஒரு நச்சு நீக்கியாகவும் தொழிற்படுகின்றது. எனவே நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகளிலும் சுவாசிக்க கூடிய காற்றிலும் இருக்கக் கூடிய நச்சுப்பொருட்கள் உடம்பிலிருந்து வெளியேறுகின்றன. அத்துடன் எமது உடம்பில் தேங்கியிருக்கக் கூடிய அதிக கொழுப்பு குளுக்கோஸ் போன்றவைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் வராமல் தடுப்பு மருந்தாக செயல்படுகின்றது. மேலும் புகைத்தல் மதுபானம் அருந்துதல் போன்ற பழக்கமுடையவர்களுக்கு அதை கைவிடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் அமைகின்றது. 

மேலும் பல் நோய்களுக்கு நிவார ணியாகவும் உள்ளது. அதிக குருதி அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய்கள், மூட்டுவாதம் அதிக உடற்பருமன் போன்ற நோய் நிலைகளில் அதிக நன்மை தரக்கூடியது.

இன்று அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள வைத்தியர்கள் கூட நோன்பின் மருத்துவ குணங்களை உணர்ந்து நோயாளிகளுக்கு நோன்பு நோற்கும்படி ஆலோசனை வழங்குகிறார்கள். 

நோன்பு நோற்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதாக நிரூபித்துள்ளார்கள். இதற்கு மாறாக எம்மில் சிலர் நோயை காரணமாக வைத்து நோன்பு நோற்காமல் இருப்பது ஒரு கவலைக்குரிய விடயமாகும்.

நோன்பு காலத்தில் நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள்தான் மருந்துகள் எவ்வாறு பாவிப்பது என்பது. ஒருசில மருந்துகள் ஒரு நாளைக்கு 1 வேளையும் மற்றும் ஒரு சில மருந்துகள் 2 வேளையும் அல்லது 3 வேளையும் பாவிப்பதற்காக சிபார்சு செய்யப்படுகின்றன.

இதில் தினமும் 1 வேளை பாவிக்கக்கூடிய மருந்துகளாயின் நோன்பு திறந்தவுடன் பாவிப்பது நல்லது. இரண்டு வேளை மருந்துகள் நோன்பு ஆரம்பிக்கும் வேளையிலும் திறக்கும் போதும் பாவிக்கலாம்.

தினமும் 3 வேளை பாவிக்கக்கூடிய மருந்துகளாயின் நீங்கள் உங்கள் வைத்தியரை கலந்தாலோசித்தால் மூன்று வேளை பாவிக்கக்கூடிய மாத்திரைகளுக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட 24 மணித்தியாலமும் உடம்பில் தொழிற்படக்கூடிய 'Sustain release எனப்படும் மாத்திரையை சிபார்சு செய்வார்கள்.

உதாரணமாக நீரிழிவு நோயாளர் ஒருவர் Metformin எனப்படும் மாத்திரையை 3 நேரம் பாவிப்பவராயின் Sustain release metformin ஒரு நாளைக்கு 1 முறை எடுப்பதன் மூலம் குருதியில் சீனியின் அளவை எதுவிதப் பிரச்சினை யுமின்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இதேபோன்று ஏனைய நோயாளர்களுக்கும் Sustain release மாத்திரைகள் உண்டு. நீரிழிவு நோயாளர்கள் இன் சுலின் ஊசி போடுபவர்களாக இருந்தால் நோன்பு நோற்கும் போது இன்சுலின் அளவை குறைத்து பாவிக்கும்படி எகிப்திய வைத்தியர் ஒருவரினால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

எனவே நீங்களும் உங்கள் வைத்தியரை கலந்தாலோசித்து இது விடயமாக முடிவு செய்யலாம்.

மேலும் நோன்பு காலத்தில் இரத்த பரிசோதனைகள் தேவைப்படின் இரத்தம் கொடுக்கலாமா என்ற சந்தேகம் அனேகருக்கு உண்டு. நோன்பு காலத்தில் உணவு பானங்கள் இரத்தம் போன்றவற்றை உடலினுள் உட்செலுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதே தவிர உடல் நலத்தை அறிந்து கொள்வதற்காக வேண்டி இரத்தம் வெளியே எடுப்பது தடை செய்யப்படவில்லை. எனவே நோன்பு நோற்றிருக்கும் போது இரத்த பரிசோதனைக்காக வேண்டி இரத்தம் கொடுக்கலாம். இதுவே உலமாக்களினது கருத்தாகும்.

இங்கு கேள்வி கேட்டிருக்கும் சகோதரரும் தனது நீரிழிவு நோய்க்கு பாவிக்கும் மாத்திரைகள் உங்கள் வைத்தியரிடம் கலந்தாலோசித்து 1 வேளை பாவிக்கக்கூடிய மாத்திரைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக உங்களில் யாராவது நோயை காரணமாக கொண்டு நோன்பு நோற்காமல் இருக்காது நோன்பே அருமருந்து என எண்ணி நோன்பு நோற்கும்படி வேண்டுகின்றேன்.

ஆனால் குடற்புண் தீவிர குருதிச்சோகை நோய் போன்ற ஒருசில நோய்களுக்கு விதிவிலக்கு உண்டு. எனவே நோயினால் பீடிக்கப்பட்டிருப்பவர்கள் முஸ்லிம் வைத்தியர் ஒருவரை கலந்தாலோசித்து இது விடயமாக முடிவு செய்யலாம்.

DR.NASEEM



 



Post a Comment

Previous Post Next Post