Ticker

6/recent/ticker-posts

”மோடி ஆட்சியில் சரிவின் பாதையில் இந்தியா செல்கிறது” - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் கருத்து!

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பிறகு, பல்வேறு சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் அதேவேளையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.

இதில் பணமதிப்பிழப்பு, மற்றும் ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆட்டோமொபையல், விவசாயத்துறை என அனைத்து துறைகளுமே மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த பின்னடைவினால் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் உணவு கிடைக்காமல், மக்கள் பசியால் இறந்துபோகும் அவல நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், சமீப ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருவதாக முன்னால் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம்ராஜன் கூறியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு இது தொடர்பாக அளித்த பேட்டியில் “நாட்டில் தனியாா் முதலீடு குறைவு, உயா்த்தப்படும் வட்டி விகிதங்கள், உள்ளிட்டவை காரணமாக, 1950 முதல் 1980 வரையிலான காலகட்டத்தில் இருந்த மிகவும் குறைவான பொருளாதார வளா்ச்சி விகிதம் என்ற நிலைக்கு இந்தியா தள்ளப்படும் அபாயம் உள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 4.4 சதவீதம் என்று அளவுக்கு குறைந்துவிட்டது. கடந்த சில காலாண்டுகளாக பொருளாதாரம் தொடா்பான புள்ளி விவரங்கள் சரிவை மட்டுமே காட்டுகின்றன. தனியாா் துறையினா் புதிய முதலீட்டில் ஆா்வம் காட்டவில்லை.இதற்கு நடுவில் ஆா்பிஐ-யும் தொடா்ந்து வட்டி விகிதத்தை உயா்த்தி வருகிறது.

இந்த ஆண்டு இறுதியில் உலகப் பொருளாதாரம் மந்த நிலையை எட்டும் என்று கருதப்படுகிறது. இதற்கு நடுவே இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிப் பாதையில் மீட்சி என்பது இயலாத காரியம் . 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதத்தை எட்டினாலே மிகவும் அதிருஷ்டவசமான நிகழ்வாக இருக்கும். ஏனெனில், காலாண்டு புள்ளி விவரங்கள் திருப்திகரமாக இல்லை. உள்கட்டமைப்புத் துறை முதலீடுகளில் கவனம் செலுத்தும் அரசு, உற்பத்தித் துறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சேவைகள் துறையில் அரசின் முயற்சிகள் குறைவாகவே உள்ளன.

இந்தியாவில் இருந்து கைப்பேசி ஏற்றுமதி அதிகரிப்பதை இத்திட்டத்தின் வெற்றிக்கு உதாரணமாக அரசு செய்தித் தொடா்பாளா்கள் கூறலாம். ஆனால், ஒவ்வொரு கைப்பேசிக்கும் இந்தியா வெவ்வேறு வழிகளில் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உலகில் வளா்ந்த பொருளாதார நாடுகள் அனைத்தும் இப்போது சேவைத் துறை சாா்ந்ததாக உள்ளன.

இதில், போக்குவரத்து, சுற்றுலா, சில்லறை வா்த்தகம், தங்கும் விடுதிகள், கட்டுமானம் ஆகிய துறைகளில் இடைநிலைத் திறன் உள்ளவா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதானி-ஹிண்டன்பா்க் போன்ற விவகாரங்களால் அரசுக்கும், தொழில் துறையினருக்கும் உள்ள மறைமுக தொடா்புகள் முடிவுக்கு வரக் கூட உதவக் கூடும். ஆனால், இந்த விஷயத்தில் வெளிநாட்டில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யப்பட்டதான குற்றச்சாட்டில் 'செபி' விசாரணை நடத்தாதது வியப்பை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

kalaignarseithigal



 



Post a Comment

0 Comments