"ஒரு மனிதனாக சென்னையை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது".. வாசிம் அக்ரம் உருக்கமான பேச்சு!

"ஒரு மனிதனாக சென்னையை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது".. வாசிம் அக்ரம் உருக்கமான பேச்சு!


கிரிக்கெட் தெரிந்த எல்லோருக்கும் வாசிம் அக்ரம் என்பவரை தெரியாமல் இருக்க வாய்பே இல்லை. தனது வேகப்பந்து வீச்சால் உலகம் முழுவதும் பிரபலமானவர். பாகிஸ்தான் அணிக்காகப் பல வெற்றிகள் தேடிக் கொடுத்துள்ளார் வாசிம் அக்ரம். இவருக்குப் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக அதிகம் நேசிக்கும் நாடாக இந்தியாதான் இருக்கும். அதிலும் சென்னை அவரது வாழ்வில் மறக்க முடியாத இடமாக உள்ளது.

இந்நிலையில் 'சுல்தான்' என்ற பெயரில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2009ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாசிம் அக்ரம், " 2009ம் ஆண்டு மனைவியுடன் சிங்கப்பூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
அப்போது திடீரென எனது மனைவி மயக்கமடைந்தார். எங்களிடம் இந்தியாவிற்கான விசா இல்ல. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நான் அழுதேன். அப்போது அங்கிருந்த விமான நிலைய அதிகாரிகள் என்னை அடையாளம் கண்டுகொண்டனர்.

பின்னர் விசா பிரச்சனையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என கூறி அனுப்பிவைத்தனர். ஒரு மனிதனாக அந்த நாளையும் சென்னையையும் என்னால் மறக்கவே முடியாது.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு மாரடைப்பால் சிகிச்சை பெற்றுவந்த மனைவி ஹீமா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த உருக்கமான பேச்சை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post