வேண்டாம் மதுபானம்!

வேண்டாம் மதுபானம்!


எனது சகோதரர் பல வருடங்களாக மதுபானத்திற்கு அடிமையாகியதன் விளைவாகப் பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளார். இதன் காரணமாக அடிக்கடி குடும்பப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இப்பழக்கத்தைக் கைவிடும்படி கேட்டால் தனக்குப் பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அதை மறப்பதற்காகத்தான் குடிப்பதாகவும் கூறுகிறார். இவரை மதுப் பழக்கத்திலிருந்து எவ்வாறு விடுவிக்கலாம்.
தாஜுன் நிஸா

 


பதில் மதுபானம் என்பது சைத்தானியச் செயலைத் தூண்டுவதற்கான
ஆரம்பப் பொருளாகும். அதுமட்டுமின்றி உடல்,பொருள் - சமூக ரீதியான பல பாதிப்புகளை உண்டாக்கக்கூடியது.

ஒருவர் பெற்றோலில் கலப்படம் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேள்விப்பட்டால் தனது வாகனத்திற்கு அப்பெற்றோலை எக்காரணம் கொண்டும் செலுத்தமாட்டார் என்பதை நாம் எல் லோரும் நன்கு அறிவோம். காரணம் வாகனத்திற்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம். 

ஆனால் அதே மனிதன் மதுபானத்தை அருந்துவதன் மூலம் தனது உடல், உள், பொருளாதார, சமூகரீதியாகப் பாதிக்கப்பட்டு பல குடும்பப் பிரச்சினைகளுக்கு உள்ளாகி சமூகத்தில் தனது கெளரவத்தையும் இழந்து மீள முடியாத துயரத்தில் வீழ்ந்து அல்லாஹ்வினது அதிருப்தியையும் பெற்று மறு உலகிலும் சுவர்க்கத்தை நெருங்கக் கூட முடியாது என்பதையும் எண்ணாமல் இருப்பது தான் ஒரு ஆச்சரியமான விடயமாகும்.

இதன் காரணமாகத்தான் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் மது அருந்துவதை முற்றாகத் தடை செய்தது. இன்று கூட பெரும்பாலான முஸ்லிம்கள் மதுபானம் என்றாலே மிரண்டு ஓடுவதற்கும் காரணம் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாகாமல் இருப்பதற்கே ஆகும்.

ஒருவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு சூழ்நிலைதான் முக்கிய காரணம். மற்றுமொரு சாரார் பல பிரச்சினைகளுக்கு உட்பட்டு அப்பிரச்சினைகளை மறப்பதற்காக மதுபானம் அருந்துகின்றோம் என்ற ஒரு அடிப்படையில்லாத காரணத்தைக் கூறுகிறார்கள். 

ஒருவர் சூழ்நிலை காரணமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகுவாரென்றால் அது அவருடைய ஈமானின் பலவீனத்தையே காட்டும். ஈமான் உறுதியாக இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் தான் ஒரு முஸ்லிம் எனவும் மது முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்ட ஒரு பானமாகும் என்ற மன உறுதியுடன் இருந்தால் மது அருந்துவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அத்துடன் அக்குறிப்பிட்ட சூழ்நிலையில் இருக்கும் மது அருந்துபவர்களையும் அது சிந்திக்கத் தூண்டும். இதன் மூலம் ஒருவர் மதுப்பாவனையிலிருந்து விடுபட்டால் அதன் நன்மை எமக்கு கிடைக்குமா? 

இதே போன்று தனக்கு ஏற்பட்டடுள்ள பிரச்சினைகளை மறப்பதற்காக வேண்டி மது அருந்துவதாக ஒரு சிலர் கூறுகிறார்கள். இதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடையாது. மாறாக பிரச்சினைகள் பல பிரச்சினை களை ஏற்படுத்தும் என்பதே உண்மை.

அத்துடன் பிரச்சினைகளை மறப்பதற்கு மதுபானம் மாத்திரம்தானா உலகில் கிடைக்கக்கூடிய ஒரேயொரு தீர்வு என்ற கேள்வியை தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய முறைகளைக் கையாள வேண்டுமே தவிர நான் மேலே குறிப்பிட்டுள்ள பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மதுபானத்தை அருந்தி தற்காலிக நிவாரணம் பெறுவது மனித சிந்தனைக்கு அற்பாற்பட்ட ஒரு விடயமாகும். மேலும் மதுபானம் அருந்திய ஒருவர் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்ட சரித்திரமே கிடையாது.

மது அருந்துவதன் மூலம் அதிக இதயத்துடிப்பு, அதிக குருதி அழுத்தம், விட்டமின் குறைபாடு, குடற்புண், அதிக கோபம் போன்றவைகள் ஆரம்பத்தில் ஏற்படலாம்.

தொடர்ச்சியாக மதுபானம் அருந்தும் போது ஈரல், மூளை, நரம்புத் தொகுதி, சிறுநீரகம், இரைப்பை போன்ற உறுப்புகளுக்குப் பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றன. மதுபானம் குடலில் இருந்து உடம்புக்குத் தேவையான புரதங்கள், கொழுப்பு, விட்டமின்கள் போன்றவைகள் எமது உடம்புக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கின்றன. அத்துடன் மீள முடியாத ஈரல் அழுகல் நோய்க்கும் ஆளாவார். இதன் விளைவாக பசியின்மை , வாந்தி, வயிற்று நோவு, உடல் மஞ்சள் நிறமடைதல், ஞாபக மறதி போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டு இறுதியில் இரத்த வாந்தி ஏற்பட்டு உயிர் நீங்கும். 

உடம்புக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை அகற்றுவது ஈரல்தான். ஆனால் மதுபானத்தில் காணப்படுகின்ற நச்சுப் பொருட்களை ஈரல் அழிக்காது. மாறாக மதுபானம் தான் ஈரலை அழிக்கின்றது. 

மதுபானம் இருதயத் தசைகளையும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது. இதன் இறுதி விளைவாக இருதயம் சரிவரத் தொழிற்பட முடியாத நிலை ஏற்பட்டு இருதயம் செயலிழக்கும் நிலை ஏற்படும். மேலும் தொடர்ந்தும் மதுபானம் அருந்தும் போது குருதியில், காணப்படக்கூடிய குளுக்கோசின் அளவு குறையும் என்பதும் ஒரு முக்கிய விடயமாகும்.

அத்துடன் தொடர்ச்சியாக மது அருந்தும் போது காலப்போக்கில் ஆண்மைச் சக்தி குறைவடைந்து பல குடும்பப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகின்றன. அண்மைய ஆராய்ச்சியொன்றின்படி மது அருந்துபவர்கள் மூலம் பிறக்கக் கூடிய குழந்தைகளும் எதிர்காலத்தில் மதுபானப் பழக்கத்திற்கு இலகுவில் ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பிறக்கும் பிள்ளைகள் மந்தபுத்தி உடையவர்களாகவும் அதிதீவிர கட்டுக்கடங்காத செயற்பாடுகளை உடையவர்களாகவும் கற்றல் திறன் அற்றவர்களாகவும் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நரம்புத் தொகுதியையும் மதுபானம் பாதிப்பதனால் நரம்புத் தளர்ச்சி, கால் கைகளில் விறைப்பு, கிரகித்தலில் பின்னடைவு போன்றவைகள் ஏற்பட்டு இறுதியில் டிமென்சியா (Dementia) எனப்படும் பூரண ஞாபக மறதி நோய் ஏற்படும். மேலும் சமிபாட்டுக் குழாய், இரைப்பை, ஈரல், பெருங்குடல் போன்ற உறுப்புக்களில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாகின்றன. 

எமது இளம் சந்ததியினர் ஹெரோயினுக்கு அடிமைப்பட்டுள்ளதைப் போன்றே மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளனர். எனது 25 வருடகால மருத்துவத் தொழிலில் நான் கண்ட ஒரு உண்மை தான் வெளிச்சத்திற்கு வராத இளம் வாலிபர்களின் மதுபானப்பழக்கம். இவர்களிடம் மதுவின் தாக்கங்களைப் பற்றிக் கூறும் போது தாங்கள் உடம்புக்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத பியர், வைன் போன்றவைகளைப் பாவிப்பதாகவே கூறுகிறார்கள். ஆனால் பியர், வைன் போன்றவைகளில் அற்ககோலின் செறிவு ஏனைய மதுபானங்களை விடக் குறைவாக இருந்தாலும் கூட தொடர்ச்சியாகவும் அதிகமாகவும் பாவிக்கும்போது மதுபானங்களினால் ஏற்படும் அதே தாக்கங் களையே இவையும் ஏற்படுத்துகின்றன. மற்றும் ஒரு சிலர் தாங்கள் பல வருடங்களாக மதுபானம் பாவித்தும் உடம்புக்கு எதுவிதமான தாக்கங்களும் ஏற்படவில்லை எனக் கூறுகின்றார்கள். ஆனால் மதுப்பாவனையினால் உடம்பில் ஏற்படுகின்ற தாக்கங்களின் அறிகுறிகள் காலம் பிந்தியோ அல்லது மதுப் பழக்கத்தைக் கைவிட்டு பல வருடங்களின் பின்போ ஏற்படலாம் என்பது முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டிய விடயமாகும்.

ஒரு இஸ்லாமியத் தோற்றமுடைய வயோதிபர் ஒருவர் அரசாங்க வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு வந்தவுடன் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட நோய் நிர்ணய அட்டையுடன் ப்ரசர் பார்ப்பதற்காக வேண்டி என்னிடம் வந்தபோது நோய் நிர்ணய அட்டையை பார்த்து விட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். காரணம் மதுபானம் அருந்தியதன் காரணமாக ஈரல் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்பு அவரைக் கேட்டபோது தான் இளம் வயதில் அதிகளவு மது பானம் அருந்தியதாக குறிப்பிட்டார். இதிலிருந்து நாம் கற்க வேண்டிய ஒரு முக்கியமான விடயம்தான் மதுபானம் அருந்துவதால் பல வருடங்கள் சென்று கூட மீள முடியாத நோய்கள் ஏற்படும் என்பதாகும். 

எனவே இஸ்லாமிய நோக்கிலும், மருத்துவ மற்றும் பொருளாதார ரீதியாகவும் வாழ்க்கையில் பல பின்னடைவுகளையும் இழப்புக்களையும் ஏற்படுத்தக்கூடிய மதுப் பழக்கத்திற்கு அடிமையாகாமல், இருப்பதற்காகவும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பவர்களை மீட்பதற்காகவும் ஒரு நிலையான திட்டத்தை வகுக்க வேண்டும்.

இங்கு கேள்வி அனுப்பியிருக்கும் சகோதரர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சகோதரனை மீட்பதற்குரிய ஆலோசனைகளைத் தருமாறு வேண்டியுள்ளார். 

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிப்பது என்பது வைத்தியர்களினால் மாத்திரம் அடைய முடியாத ஒரு இலக்காகும். இதற்காக வேண்டி வைத்தியர்களின் பங்களிப்பை போன்றே மார்க்க அறிஞர்கள், மனநலவியலாளர்கள், சமூக நலவியலாளர்கள் போன்றோர்களும் உள்ளடக்கப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்தி மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதன் மூலமே இந்த இலக்கை அடைய வேண்டும். 

சில இஸ்லாமிய இயக்கங்கள் போதைப்பொருளுக்கு அடிமையான முஸ்லிம் வாலிபர்களைப் பற்றிய மதிப்பீடுகளைச் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன. இவ்வறிக்கையினை அடிப்படையாக வைத்து ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து இவர்களை மீட்பதற்குரிய வழிவகைகளை மேற் கொள்வதே காலத்தின் தேவை. 

இஸ்லாமிய அறிஞர்கள் இவ்விடயத்தில் பாரிய பங்களிப்பைச் செய்யலாம் என்பதே எனது கருத்து. எமது உடம்பிற்குள் செல்லுகின்ற மதுபானம் தவிர்ந்த சகல நச்சுப் பொருட்களையும் அழிப்பது ஈரல்தான். ஆனால் மதுபானத்திலுள்ள நச்சுப்பொருட்களினால் ஈரல் அழிக்கப்படுகின்றது எனவும் இதன் காரணமாகத்தான் இஸ்லாம் இன்றைக்கு ஏறக்குறைய 1400 வருடங்களுக்கு முன்பே மதுபானத்தை தடைசெய்தது என்ற செய்தியை மக்களுக்குச் கொண்டு சேர்த்ததில் இஸ்லாமிய அறிஞர்களது பங்கு மிகமுக்கிய மாகும்.

அத்துடன் மருத்துவர்கள் மதுப்பழக்கத்தினால் உடம்புக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும், மனநலவியலாளர்கள் உளரீதியாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும், சமூகநலவியலாளர்கள் சமூக உறவில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் தனது பிள்ளைகளின் மனநல விருத்தியில் ஏற்படக் கூடிய பாதிப்புக்களையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சை மேற்கொள்ளும் போது போசாக்கு நிறைந்த உணவுகள், விட்டமின்கள், பழவகைகள், மரக்கறி வகைகள், தானிய வகைகள் போன்றவற்றை உட்கொள்வதோடு, இறைச்சி வகைகள், அதிக கொழுப்புக் கூடிய, பொரித்த உணவு வகைகள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். 

உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் முக்கியமாகும். மதுப்பழக்கத்தை விடும்போது முதல்வாரத்தில் தூக்கமின்மை, அதிக வியர்வை , அதிக நாடித்துடிப்பு, தெளிவற்ற பார்வை, சுயநினைவற்ற நடமாட்டம் போன்றவைகள் ஏற்படும் இரண்டாவது வாரத்திலிருந்து இவ் அறிகுறிகள் குறைய ஆரம்பிக்கும்.

இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக இஸ்லாமிய இயக்கங்களுக்குப் பொறுப்பாக இருக்கக் கூடியவர்களுக்கு ஒரு செய்தியாக ஒன்றைக்கூற விரும்புகிறேன். அதாவது மதுப்பாவனைக்கு அடிமையாகியுள்ள எமது சகோதரர்களை மீட்பதிற்குரிய நிரந்தரமான வேலைத்திட்டமொன்றை வகுத்து அவர்களை மீட்டெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் மதுப்பாவனையற்ற சமுதாயமொன்றை உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ் எமது முயற்சிக்கு அல்லாஹ்வின் உதவியும் கிட்டும்.

DR.NASEEM


 



Post a Comment

Previous Post Next Post