Ticker

6/recent/ticker-posts

டிவிகளின் அழிவை குறிக்கிறதா ஆப்பிள் நிறுவன கண்டுபிடிப்பு? சந்தேகத்தை கிளப்பிய ஆனந்த் மஹிந்திரா


அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் சமீபத்தில் நடந்த உலக டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பொருட்கள் மற்றும் மென் பொருட்களை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அறிமுகப்படுத்தினார். 

 

இந்த நிகழ்ச்சியின் மிக முக்கிய அறிவிப்பாக உலகளவில் கவனம் ஈர்த்துள்ள Vision Pro என்ற கண்ணாடி போன்று அணியும் ஹெட்செட் அறிமுகப்படுத்தப்பட்டது. மெய்நிகர் உலகத்தை மெருகூட்டி காண்பிக்க இந்த விஷன் புரோ கண்ணாடி உதவுகிறது.
கண்ணை மறைத்தபடி அணிந்துகொள்ளும் வகையில் இந்த கண்ணாடி போன்ற ஹெட்செட் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மினி தியேட்டரே உங்கள் கண்களுக்கு மட்டும் கண்ணாடிக்குள் தெரிந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு டெக் அதிசயத்தை இந்த Vision Pro கொண்டுவருகிறது. அதாவது ஒரு 100 அடி நீள ஸ்கிரீனில் படம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு திரை அனுபவத்தை இது கொடுக்கும். வீடியோ கேம் விளையாடுவோருக்கும், திரைப்படங்களை பார்க்க விரும்புவோருக்கும் புதுவித அனுபவத்தை விஷன் புரோ தரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண கேமரா, 4K தொழில்நுட்பத்தில் படம் பார்க்கும் அனுபவத்தை இந்த கருவி தரும் என்று கூறப்பட்டுள்ளது.

கண், தலை, கைகளின் அசைவுகள், குரல் வழியாகவும் இந்த கண்ணாடியை கட்டுப்படுத்த இயலும் வகையில் Augmented Reality தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த விஷன் புரோ ஹெட்செட் இந்திய மதிப்பில் 2,90,000 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்செட் அடுத்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிலும், பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனம், கூகுள் கிளாஸ் என்ற பெயரில் கிட்டத்தட்ட இதேபோன்ற தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தியது, அது தோல்வியடைந்ததன் காரணமாக அந்நிறுவனம் அதன் தயாரிப்பை நிறுத்தியது. ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் ஹெட்செட் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஹெட்செட் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில், இதுகுறித்து மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் தனது கருத்தை ட்விட்டர் தளத்தில் வெளிபடுத்தியுள்ளார். பெரிய திரை கொண்ட டிவிகளின் அழிவை இந்த கண்டுபிடிப்பு குறிக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ‘சாம்சங் மற்றும் சோனி போன்ற முன்னனி நிறுவனங்கள் இதற்கு என்ன பதிலைத் திட்டமிடுகின்றன என அறிய ஆர்வமாக உள்ளது; மேலும் திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் பொது திரையில் பார்ப்படுவது என்னவாகும்? தற்போது இவையாவும் அறைக்குள் ஹெட்செட்களை அணிந்திருக்கும் ஜாம்பிகளால் ரீப்ளேஸ் செய்யப்படுமா’ என ஆனந்த் மஹிந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

news18


 



Post a Comment

0 Comments