
கருப்பி’, ‘ஏலியன்’... என 5-ம் வகுப்பு படிக்கும்போதே உருவகேலி, கிண்டல்களுக்கு ஆளானவர் தான் இந்தச் சிறுமி. தன்னை நோக்கி வீசப்பட்ட ‘ஏளன’ அம்புகளுக்கு ‘வெற்றி’ எனும் பேராயுதம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். கிண்டல் செய்தவர்களை கொண்டாட வைத்து ’Best Revenge’-க்கு உதாரணமாக திகழ்கிறார். யார் அவர்? அவரிடமிருந்து நமக்கான ‘Take Away’ என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுமி துளசிமதி முருகேசனுக்கு தனக்கு எதிரான கேலியும், கிண்டலும் மனதளவில் காயப்படுத்தவே செய்தன. ஆனால், அவரது தந்தை முருகேசன் கொடுத்த தைரியமும், வைராக்கியமும் தான் அவரை உயர்ந்த இடத்தை நோக்கி நகர வைத்தது. தினந்தோறும் காலை 5 மணிக்கு தனது குழந்தைகளை மைதானத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் கொண்டவர் முருகேசன்.
மாற்றுத்திறனாளியான தனது மகன் பேட்மிண்டன் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பது தான் அதற்கான முக்கிய காரணம். தொடர் பயிற்சியால் மாவட்ட அளவில் வெற்றி பெறுகிறார் துளசிமதி. வெற்றிபெற்ற கையோடு பள்ளிக்கு திரும்பும் துளசிமதிக்கு எல்லாமே புதிதாக இருக்கிறது. காரணம் அவரை கிண்டல் செய்த நண்பர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஆச்சரியத்துடன் அவருக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. அதாவது, ‘கேலி கிண்டலுக்கு பதில் கொடுக்கவேண்டும், அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், வெற்றி தான் பிரதானம்’ என்பதை அந்த நொடியில் புரிந்துகொண்டார் துளசிமதி.
பேட்மிண்டன் விளையாட்டில் 5-ம் வகுப்பில் தொடங்கிய துளசிமதியின் மாவட்ட அளவிலான வெற்றி, மாநில, தேசிய அளவில் விரிவடைந்தது. எந்த இடத்திலும் முடங்கிவிடாமல் தொடர் தேடலால் முன்னேறிக் கொண்டே இருந்தார். அதனால் விளைந்த பலன் தான் இந்தியாவுக்கு அவர் தேடிக் கொடுத்த பெருமிதம். ஆம், பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதன்பிறகு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கம், இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் என 3 பதக்கங்களுடன் இந்தியா திரும்பினார் துளசிமதி. விமான நிலையமே விழாக்கோலம் பூண்டது. மக்கள் சூழ்ந்து கொண்டு இந்தியாவின் மகளை வரவேற்றார்கள். அந்தக் கூட்டத்திலிருந்து துளசிமதியின் தந்தைக்கு அதைவிட பெருமை மிகு தருணம் இருக்க முடியாது.
உன்னால் முடியாது என்று முகத்துக்கு நேராக பேசிய அத்தனை பேருக்கும், என்னால் என்ன செய்ய முடியும் என்பதை பாராலிம்பிக் வரை சென்று பதக்கம் வென்று பதிலடி கொடுத்திருக்கிறார் துளசிமதி. ‘Success is the Best Revenge’ என்பதற்கான சமகால உதாரணம் துளசிமதி முருகேசன்!
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments