
ஜம்மீயத்துல் உலமாவின் தலைவர், நாட்டிலுள்ள ஏனைய உலமாக்களுக்கு அறிவுரை வழங்கும் ஒரு காணொளியில் இந்த நாட்டில் 9000 உலமாக்கள் உள்ளதாக ஒப்புக் கொண்டிருந்தார். தாங்கள் பதவியில் இருக்கும் 23 வருடங்களின் பின்பாவது இந்த நாட்டில் 9000 ஆயிரம் உலமாக்கள் இருக்கின்றார்கள் என்பதை இன்றாவது விளங்கிக் கொண்ட உங்களுக்கு முதலில் நன்றிகள் கோடி.
இலங்கையில் உலமாக்களுக்கு என ஒரு தனியான தலைமைத்துவம் இருந்தும், இதுவரையில் இலங்கையில் ஒரு உலமாவுக்கு இவ்வளவு சம்பளம் வழங்கப்பட வேண்டும். அவர்களின் உணவு தேவைகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட வேண்டும் என, எந்தவிதமான சட்டங்களையோ, சம்பள வரையறைகளையோ சுற்று நிரூபங்களையோ உலமா தலைமையகம் விதித்தது கிடையாது.
எமது நாட்டில் 9000 உலமாக்களை கொண்ட ஒரு சமூகம் உள்ளது என்பதை இன்றாவது விளங்கிக் கொண்டது பெரிய காரியம்.
இன்று எமது நாட்டில் உலமா சமூகம் என்பது ஒரு மூன்றாம் தர சமூகமாகவே நோக்கப்படுகின்றது. ஒரு பள்ளிவாசலில் ஒரு உலமாவுக்கு வழங்கப்படும் சம்பளம் பெரும்பாலான பள்ளிவாசல்களில் 50 ஆயிரங்கள் மட்டுமே. வேறு சில பள்ளி வாசகளில், சம்பளத்துக்கு மேலாக சாப்பாட்டுக்கு என தனியாக, சம்பளத்துடன் மேலதிகமாக 15 ஆயிரங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.
இன்று இலங்கை நாட்டை பொறுத்தவரையில், 15000 ஆயிரம் பணத்தால், ஒரு நாள் சாப்பாட்டுக்கு 500 ரூபாய் வீதம் ஒரு தனி மனிதன் மூன்று வேளை உணவை சாப்பிடலாமா ?
50 ஆயிரம் சம்பளத்துடன் ஒரு மனிதன் ஒரு குடும்பமாக வாழலாமா ?
இதைவிட 50 ஆயிரம் சம்பளங்கள் போதாது என ஒரு உலமா ஒரு பள்ளிவாசலில் இருந்து விலகிச் செல்வாராயின் 30 ஆயிரம் சம்பளத்திற்கு அடுத்த நாள் வேலைக்கு வருவதற்கு இன்னொரு உலமா காத்திருப்பார். இதுதான் இலங்கையில் உலமாக்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ள மதிப்பு.
அதைவிட, அவர் அல்லது அவரின் குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்படுவாறேயானால், அந்த மாதத்தில் அவர் அனுபவிக்கும் துன்பங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
அதையும் மீறி, தாங்க முடியாத சந்தர்ப்பத்தில் அவர் தன்மானத்தை மரியாதையை காற்றில் பறக்க விட்டு ஒரு சிலரிடம் கை நீட்ட வேண்டும்.
தன்மானத்தை அடகு வைத்து பள்ளிவாசலுக்கு வரும் ஜமாத்தார்கள்யிடம் அவ்வாறு உதவிகளைப் பெற்றுக் கொண்டால். பள்ளி நிர்வாகம் அவருக்கான விசாரணையை ஆரம்பிக்கும்.
அண்மையில் தெஹிவளை பிரதேசத்தில் தனது வீடு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர், ஒரு உலாமா பள்ளிவாசல் சங்கத்தில் தன் நிலையை சொல்லி உதவி கேட்டதற்கு, அந்தப் பள்ளிவாசல் நிர்வாகம் பாவம் அவரைக் கடுமையாக எச்சரித்தது.
அதையும் விட கேவலம் சில பள்ளிவாசல் உலமாக்கள் அடுத்த வேலை உணவுக்காக வீடு வீடாக பொறுப்புச் சாட்டப்பட்டு, அடுத்த வேலை உணவுக்காக உணவு தட்டை ஒரு பிச்சை பாத்திரம் போல் வீடு வீடாகச் சென்று கொடுக்க வேண்டும். கௌரவமாக வாழ வேண்டிய உலமா சமூகம் இது இலங்கையில் கேவலப்படும் ஒரு நிலை .
சில பள்ளிவாசல்களில் இரும்பினால் எழுதப்பட்ட, மனித உரிமையையும் மீறும் விதத்தில் இறுக்கமான சட்டங்கள்.
மதரஸாக்களில் உலமா படிப்பு என்ற போர்வையில் இவர்களின் குரல் நசுக்கப்படுகின்றதா ?
வாழும் உரிமைக்கு விளங்கிடப்படுகின்றதா ?
உண்மையில் இலங்கையில் சில பள்ளிவாசல்களில் பணிபுரியும் சங்கைமிக்க உலமாக்களின் நிலைமை பரிதாபம்.
சென்ற வருடம் கொழும்புப் பகுதி ஒன்றில் 18 வருடங்கள் கடமை புரிந்த ஒரு முஅதினார் தன் மகளின் திருமணத்திற்கு மூன்று மாதம் இருக்கும் நிலையில் வெறுங்கையுடன் பள்ளிவாசலில் இருந்து விரட்டப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் காசில் விளையாடினால் என்பதாகும்.ஒரு பேச்சுக்கு குற்றம் உண்மை என வைத்துக் கொண்டாலும், இந்த சமூகம் அந்த மனிதருக்கு கஷ்டம் இன்றி வாழ ஒரு வழி அமைத்துக் கொடுத்திருந்தால், மார்க்கத்தை கற்றறிந்த அவர், அவ்வாறு நடந்து கொண்டிருப்பாரா ?
குற்றம் அவர் செய்ததா ?,இந்த சமூகம் செய்ததா ?,
இதில் தண்டிக்கப்பட வேண்டியது அந்த உலமாவா ?
இந்த சமூகமா ?
அவர் கண்ணீருடன் வெளியே சென்ற கதையைச் சொல்லி எனது நண்பர் ஒருவர் இதே சமூக மயப்படுத்தும் படி வேண்டிக் கொண்டார். அதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. தலைவரின் இந்த காணொளி எனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை பெற்று தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
அநீதி இழைக்கப்பட்ட அந்த உலமாவுக்கு இதை முறையிட இடமில்லை. வாய்ப்பு வசதிகளும் இல்லை. உலமா தலைமையகம் பேரளவில் மட்டும் தான்.
தவிக்க விடப்பட்ட தன் நிலையை தட்டி கேட்க சட்டங்கள் இல்லை.
ஒரு அரச ஊழியருக்கு ஓய்வூதியம், ஏனைய கொடுப்பவர்கள் என இருக்கும் நிலையில், மக்களுக்காக தொழுகை நடத்த, மக்களை அதான் மூலம் ஐந்து நேரமும் பள்ளிவாசலுக்கு அழைக்கும், உலகிலேயே உயர்ந்த உத்தமான உத்தியோகத்தை செய்யும் உலமாக்களின் நிலைமையை இதுவே.
இதற்காக, இதை ஒரு நெறிப்படுத்த, ஒரு சம்பள வரையறையை அமைக்க, உலமாக்களின் தலைமையகம் பல தசாப்தங்களைக் கடந்தும் இதை கண்டு கொள்வதாக இல்லை.
காரணம் உலமாக்களின் தலைமையகத்தில் காலங் காலமாக நிலைத்திருப்பது ஒரு குழுவினர் மட்டுமே, அவர்களின் பொருளாதார நிலமை, அவர்கள் ஐந்து நட்சத்திர உலமாக்கள். வறிய உலமாக்களின் நிலை பற்றி அவர்கள் கனவிலும் அறிந்தது கிடையாது.
மன்னார், திருகோணமலை, மூதூர் போன்ற பிரதேசங்களில் ஒரு வீட்டில் இரண்டு மூன்று உலமாக்கள், காரணம் குறைந்த செலவில் அல்லது அரபு நாடுகளில் இலவசமாக படிக்கக் கூடிய ஒரு படிப்பு அதுவாகவே இருக்கின்றது.
நல்ல சிறந்த திறமை உடைய உலமாக்கள் ஆற்றில் இருந்து தோளில் மண் சுமந்து கஷ்டப்படுவதை கண்டிருக்கின்றேன்.
அவர்கள் 9000 உலமாக்களில் உள்ளவர்கள் தான்.
ஆனால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள் கூட தங்களது தலைமையகத்தை கண்ணால் கண்டிருக்க மாட்டார்கள். தலைமையாகத்தை வாழ்க்கையிலே கண்ணால் காணாமல், அதன் வாசற்படியை கூட மிதிக்காமல் மாண்டு போன உலமாக்களும் ஏராளம்.
சில மௌலவிமார்கள் தமது வயிற்று பிழைப்புக்காக ஒரு மதரஸாவைத் திறந்து, இலங்கையில் நாளா பக்கங்களில் இருந்தும் பணத்தை வசூலிக்கின்றனர். சில ஐந்து நட்சத்திர உலமாக்கள் உலகளாவிய ரீதியில் மதரசாவை காட்டி பணத்தை வசூலிக்கின்றனர்.
சில முன் வரிசையில் உள்ள உலமாக்களால் நடத்தப்படும் இந்த மதரஸாக்களில் எந்தவித தகுதிக்கான கட்டுப்பாடுகளும் இல்லை.
இவ்வாறான வயிற்றுப் பிழைப்புக்காக நடத்தப்படும் மதரஸாக்களில் படிக்கும் நிலை ? மாணவர்கள் உலமாக்களாக வெளியேறும் போது, நடு வீதியில் இறக்கி விடப்படுகின்றார்கள்.
நாட்டில் 3000 பள்ளிவாசல்கள் இருக்கும் நிலையில் 30 தாயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் உள்ளனர்.
ஒரு சமூகத்தில் மார்க்கத்தை கற்றறிந்த உலமாக்கள் அதிகமாக இருப்பது சிறந்ததே.
ஆனால் அவர்கள் நாளை உலமாக்களாக வெளியாகிய
நிலையில் உலமா தொழிலை நம்பி வாழாமல் அவர்களுக்கு ஒரு தொழில் கல்வி முறைமையை ஏற்படுத்த இந்த தலைமையாகத்தால் பல தசாப்தங்களாக முடியவில்லை.
ஒரு மதரஸாவில் மார்க்க அறிவுடன் சேர்த்து தொழில் கல்வியும் கற்பிக்கப்பட வேண்டும்!

- ஒரு தொலைபேசி திருத்தும் கல்வி,
- ஒரு வீட்டு மின்சாரச் சுற்று வேலை செய்யும் கல்வி,
- வியாபார முகாமைத்துவக் கல்வி,
- கணினி தரவுப் பதிவாளர்,
- மோட்டார் வாகனம் திருத்தும் தொழில்,
- குறைந்தபட்சம் ஒரு தட்சணாகவாவது தொழில்,
இவை குறைந்த செலவில் பயிற்றுவிக்க கூடிய தொழில் கல்விகள்.
இதற்கான பயிற்சிகள் ஒரு மதரசாவில் ஏற்படுத்தப் படுமேயானால் இந்த கேவலமான நிலைக்கு இந்த உலமாக்கள் தள்ளப்பட மாட்டார்கள்.
இதற்கு, சமூகத்தின் விழியை திறந்து வழியை காட்டிய, நல்ல மனிதர் நழீம் ஹாஜியார் அவர்கள் காட்டித் தந்த வழிமுறை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எந்த நழீமியும், எங்கும் இன்று சீரழியும் நிலையில் இல்லை.
உலமாக்களாக வெளிவரும் அவர்கள் ஏதோ ஒரு துறையில், வல்லுனர்களாக பயிற்றப்படுகின்றனர்.
(அந்த நல்ல மனிதரை அல்லாஹ் நாளை மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் ஒரு உயர்வான இடத்தில் வைக்கட்டும்)
தலைமையகத்துக்கு தலைவர் தெரிவின் போது வாக்களிக்கும் உரிமை பெற்ற 76 உலமாக்கள் பற்றிய கரிசனை மட்டுமே தலைமையகத்துக்கு காணப்படுகின்றது, அவர்களின் வாழ்க்கை தரங்கள், அவர்களின் இன்ப துன்பங்கள் மட்டுமே உலமாக்களின் பிரச்சனையாக கண்டு கொள்ளப்படுகின்றது.
தலைவர் தெரிவின் போது பொதுவாக சில உலமாக்கள் அழைக்கப்பட்டாலும், ஜனாதிபதியையும் விமர்சிக்க உரிமை உள்ள இந்த நாட்டில், ஜனாதிபதியின் வரவு செலவுகளையும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமான இந்த நாட்டில், தங்களின் கருத்தை சொல்வதற்கு கூட திறமையான உலமாக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
இன்று நாட்டில் மதரசாகளில் கொண்டு சேர்க்கப்படும் பிள்ளைகள் வறிய குடும்பத்தின் பிள்ளைகளே.
வரிய குடும்பத்தின் அந்த தலைவிதியை மாற்றி அமைப்பதற்கு கூட அந்தப் பிள்ளையின் எதிர்காலத்தால் முடியாமல் போகின்றது.
தலைமையகத்தில் இருப்பது ஐந்து நட்சத்திர உலமாக்கள்.
ரமலான் மாதம் வரும்போது,பொதுமக்களுக்கு தான் ரஹ்மத்து, மகுபிரத் இதுக்கும் மின்னனார். இந்த ஐந்து நட்சத்திர உலமாக்கள் இலங்கையில் இருக்க மாட்டார்கள். லண்டன் அமெரிக்கா பிரான்ஸ் சவுதி அரேபியா ஜப்பான் போன்ற நாடுகளுக்கு துனியாவை தேடி பறந்துவிடுவாள்கள்.
27 ஆம் இரவில் மலக்குகளுடன் சேர்ந்து இவர்களும் பூமிக்கு இறங்குவார்கள்.
கோடிக்கணக்கில் வசூல், இவர்களிடம் கோடிக்கணக்கான சொத்து.
கோடிக்கணக்கான வாகனங்கள். இரகசியமான முறையில் வியாபாரங்களில் கோடிக்கணக்கான முதலீடுகள். ஏழை எளிய மக்களுக்கு வந்து சேர வேண்டிய ஸதக்கா ஸக்காத்துக்களை முழு உலகமும் ஓடி ஒரு வலை விரித்து சுருட்டி விடுவார்கள்.
இவர்களின் நிலை இது என்பதால், வறுமையில் கண்ணீர் வடிக்கும் இந்த கஷ்டவாளிகள் அவர்கள் கண்ணில் தெரிவதில்லை.
அந்த துன்பக் கண்ணீரில் மூழ்கி, கண்ணீர் வடித்தே வாழ்ந்து கொண்டிருக்கும் உலமாக்களின் நிலை இதுதான். வாழும் காலமெல்லாம் அவர்களின் நிலை அதே நிலைதான்.
இவ்வாறு தொடர்ந்தும் 20-25 வருடங்களாக உலகைச் சுற்றி வளைத்து வலை வீசும் உலமாக்களே உலமாக்களின் தலைமை இடத்தில் உள்ளனர்.
இதில் முதலில் பல வருடங்களாக தொடர்ந்து எடுப்பவன் சிந்திக்க வேண்டும். அல்லது பல வருடங்களாக கொடுப்பவன் சிந்திக்க வேண்டும். கொடுப்பவனையும் ஒரு நொடிப்பதில் வாங்கும் பணம் எடுப்பவனிடம்.
இந்த விடயத்தில் மாற்று சமூகங்கள் சிந்தித்து விட்டன. இவ்வாறு செய்யும் அவர்களின் மதகுருக்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் கிழி கிழி என கிழித்து தொங்க விடுகின்றனர். எம் சமூகம் இன்னும் சிந்திக்கவில்லை.
இந்தப் பணத்தை பயன்படுத்தி உலமாக்களுக்கான ஒரு தொழில் பயிற்சி நிலையத்தை நிறுவி அவர்களுக்கு வாழ ஒரு வழி செய்யலாம். படிக்க வசதியற்ற திறமையான மாணவர்களை நல்ல படித்த தலைமுறைகளாக சமூகத்தில் உருவாக்கலாம்.
ஆனால் அவ்வாறு செய்ய அவர்களின் உலக மோகம் விடுவதில்லை.
வெந்நீரில் மிதக்கும் உலமாக்களுக்கு இவர்களின் வேதனை தெரிவதில்லை.இவர்களாலேயே இந்த உலமா சமூகம் விமர்சிக்கப்படுகின்றது.

உலமாக்களை விமர்சிக்கின்றார்கள், உலமாக்களை விமர்சிக்கின்றார்கள், என சமூக வலைத்தளங்களில் கொக்கரிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய இந்த ஐந்து நட்சத்திர உலமாக்கள் மட்டுமே.
பள்ளிவாசல்களில் கடமை புரிந்து, மக்களுக்காக தொழுகை நடத்தி, நாலு நல்லதை மக்களுக்கு, தன் நாவால் நவிழ்ந்து கொண்டிருக்கும் உலமாக்கள் ஒருபோதும் உலமாக்களை விமர்சிக்கின்றார்கள் என வானம் வெடிக்க ஓலமிடவில்லை.
மாளிகையில் வாழ்ந்துகொண்டு மண்ணறையை பற்றிப் பேசி, ஆளுக்கொரு பவுண்டேஷனாக அமைத்து, உலகில் வலை விரித்து வசூல் நடத்தி வாழும் இவர்களுக்கு வறுமையில் வெந்து கொண்டிருக்கும் வறிய உலமாக்களின் வேதனை தெரிவதில்லை.
எனவே மக்கள் உலமாக்களை விமர்சிக்க முக்கிய காரணம் இவர்களில் சிலரே.
எனவே இவர்களின் மீதே குற்றங்களை வைத்துக்கொண்டு, உலமாக்கள் விமர்சிக்கப்படுகின்றார்கள் என சமூகத்தின் மீது சுற்றும் விரல் நீட்டுவது நிறுத்தப்பட வேண்டும்.
தொடருமாயின் யார் யார் என்னென்ன நிலையில் இருந்தார்கள், அவர்களிடம் தற்போது உள்ள வாழ்க்கை வசதிகள் சொத்துக்கள் என்ன ? அவை எவ்வாறு சம்பாதித்துக் கொண்டார்கள் என்ற சகல விடயங்களும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்படும்.
அனைத்தையும் தெரிந்தே செய்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லிக் கொள்ளட்டும் என வாய்மூடி இருக்கின்றோம்.
மேலும் இன்று நமது நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சில உலமாக்கள் சட்டத்தரணிகளாக உள்ளனர். சில உலமாக்கள் வைத்தியர்களாக உள்ளனர்.
சில உலமாக்கள் பொறியியலாளர்களாக உள்ளனர். சில உலமாக்கள் கணினி துறையில் உச்சம் தொட்டர்களாக உள்ளனர்.
தலைமைத்துவம் மாற வேண்டும். உலமாக்களாக உள்ள சிறந்த கல்விமான்கள் அந்த இடத்தில் அமர வேண்டும். இதன் மூலம் சிறந்த ஒரு தலை முறை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என குரல் கொடுப்பது இதற்காகவே.
இது ஒரு சட்ட ரீதியான அமைப்பு. வெளிநாடுகளில் இருந்து எந்த அளவு நன்கொடைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்,சமூகத்திற்கான எந்த சிறந்த திட்டங்களையும் வழி நடத்த முடியும்.
இது போன்ற ஒரு சட்டத்தினால் கூட்டினைக்கப்பட்டு சட்ட அங்கீகாரத்தை நமக்கு நம் முன்னோர்கள் பெற்று தந்தது ஒரு சிலரின் வாழ்க்கை வசதிகளுக்காகவா ?
ஒரு முஸ்லிம் நாட்டில் கூட இல்லாத அளவு சட்டப்படி சலுகைகளை பெற்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு, துன்பப்படும் துரதிஷ்டவசமான சமூகமாக
இன்று இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு சிலரின் சுயநலமே தவிர வேறில்லை.
இந்த தலைமைத்துவத்தின் ஆயுள் இருக்கும் வரையில் இந்த தலைமைத்துவம் மாறாது. இந்த தலைமைத்துவம் மாண்ட பின்பாவது இந்த சமூகம் கண் திறக்கட்டும்
இந்த நாட்டில் 9000 ஆயிரம் உலமாக்களை கொண்ட ஒரு சமூகம் இருக்கின்றது என்பதை இன்றாவது விளங்கிக் கொண்ட தலைமையகத்துக்கும், இதை எழுதி, இதை சமூக மயப்படுத்த, வாய்ப்பளித்த வல்லவனுக்கு கோடி நன்றிகள்.
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments