Ticker

6/recent/ticker-posts

அல் அஸ்லாப் நம் முன்னோர் நினைவு மன்றத்தின் நான்காம் நிகழ்வு பற்றிய ஒரு கண்ணோட்டம்.


அல் அஸ்லாப் நம் முன்னோர் நினைவு மன்றத்தின் நான்காம் நிகழ்வு 24-01-2026 அன்று 
கொழும்பு தபாலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறுவதாகவும் அதில் கலாநிதி ஜாயா பற்றிய ஒரு உரையை நிகழ்த்த வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தேன்.

அதன் தலைவராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த சகோதரர் MHM நியாஸ் அவர்கள்   நன்றாகப்  பேசுவீர்கள்தானே, தயார்தானே என்றெல்லாம் பல தடவை கேட்டு விட்டார். 
எனினும் எனது மனப்பதிவோ வழமையான நிகழ்வுகளைப் போல முன்னோர்கள் பற்றிய வரலாற்றில் ஆர்வமுள்ள ஒருசிலர் கலந்து கொள்வார்கள்,பேச்சாளர்கள் உரை நிகழ்த்த, வருகை கொண்டிருந்துவிட்டு கலைந்து செல்வார்கள், என்பதாகவே இருந்தது.

ஆனால் விழா மண்டபத்துக்குள் நுழையும் போதே எனது கருத்தோட்டம் படிப்படியாக கரையத் தொடங்கியது.

அன்றைய விழா நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்குவதாக போடப்பட்டிருந்தது.

அந்த நேரத்திற்குள்ளேயே ஐம்பதுக்கு மேற்பட்டோர் வந்திருந்தனர்.சில நிமிடங்களுக்குள் படபடவென கல்விமான்களும் ஆசிரியர்கள்,மாணவர்கள்,சமூக ஆர்வலர்கள் என ஆசனங்கள் நிறைந்து கொண்டிருந்தது.

ஊடகவியலாளர்கள் பலர் அங்குமிங்கும் கழன்றுக் கொண்டிருந்தார்கள்.

மேடையை நோக்கினேன் மிகப்பெரிய திரை,காட்சிகளு க்கான ஒத்திகையில் சலனப்பட்டுக் கொண்டிருந்தது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் மூத்தோர்கள் மட்டுமே இருப்பார்கள் என பார்த்திருந்த எனக்கு சிறுவர் முதற்கொண்டு இளைஞர்கள் வரையில் தத்தமக்கு வகுக்கப்பட்ட பணிகளோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். வியந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

சரியாக 10.35 இற்கு அதன் தலைவர் MHM நியாஸ் அவர்கள் தலைமை உரையாற்றுவார்கள் என கம்பீரமான தொனியில் வானொலி அறிவிப்பாளர் அஹமட் என் நஸீர் முழங்க நியாஸ் அவர்கள் மேடையில் "இந்த முன்னோர்கள் நினைவு மன்றம் என்னுடைய தனி முயற்சியல்ல ஐந்து விரல்களும் வெவ்வேறு வடிவம்.ஆனால் ஏதேனும் ஒன்றை செயலாற்ற முனையும்போது அவை ஒரே மட்டத்துக்கு ஒற்றுமையாகி வந்து விடுகின்றன.

அதுபோல இயங்கியதால்தான் இன்று வெற்றிகரமாக நான்காவது நிகழ்வுக்குள் வந்து நிற்கிறோம். 

இன்னும் தொடர்வோம்.அன்னாரின் பெயர்களில் "ஸூரா பாத்திஹா"வை ஓதி பிரார்த்தித்துக்   கொள்ளுங்கள்" என அருமையாகப் பேசி முடிக்க, தொடக்க நிகழ்வாக தேசிய கீதமும் மன்றத்தின் கீதமும் இசைக்கப்பட அனைவரும் எழுந்து புத்துணர்ச்சியுடன் நின்றோம்.

சிங்கக் கொடி பறக்கும் இலங்கை மண்ணில் இஸ்லாமியர்களின் பங்கு எத்தனை பெரியது,என்பதை மன்றத்தின் கீதம்,

"முன்னோரை நாம் மதிப்போம்
எந்நாளுமே போற்றுவோம் (ii)
அன்னார்கள் பேர் சொல்லும்
பொன்னான சேவைகள்
ஜன்னாவில் சேரட்டுமே
உயர் ஜன்னாவில் சேரட்டுமே.."

என கல்ஹின்னை பஹ்மி ஹலீம்தீனின் வரிகளில் காட்சிப்படங்களாக விரிய கண்ணீர் பொல 
பொலவென கொட்டத் தொடங்கியது.

பல மேடைகள் கண்ட எனக்குள் அன்றைய நாள் நான் 
பேசத் தயாராகியிருந்த கலாநிதி ஜாயா மிக உயரமாகத் தெரிந்தார்.

அனைவர் மனங்களும் எம் முன்னோர்கள் எத்தனை மதிப்புக்குரியவர்கள் என்ற உணர்வு மேலிட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றத்தின் தேசிய அமைப்பாளர் M.Z.அஹ்மட் முனவ்வர் நிகழ்வின் அறிமுக உரையை அழகு தமிழில் ஆரம்பித்தார்.

அன்றைய விழாவின் பிரதம அதிதியாக முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பெளசி அவர்கள் கலந்து கொள்வதாகவும் நிகழ்வின் இடையில் வந்து இணைந்து கொள்வார் என அறிவித்துவிட்டு இந்நிகழ்வு இறையருளால் மூன்று விழாக்களை கண்டுவிட்டது.

இன்ஷா அல்லாஹ் இறுதி மூச்சிருக்கும்வரை முன்னெடுத்துச் செல்வோம் எனும் 
அவரது உறுதியில் நாமும் இணைந்து கொண்டோம்.

இந்நிகழ்ச்சியில் மர்ஹும் ஜஸ்டிஸ் அக்பர்.கலாநிதி ஜாயா,அரசியல் தலைவர் Dr. A.C.S ஹமீட் ஆகியோர்களின் உரைகளைக் கேட்க அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

முன்வரிசையில் அமர்ந்திருந்த எனது ஆசனத்தை யாரோ தட்டுவதை உணர்ந்து பின்னால் திரும்பினேன். ஒரு வயதானவர் என்னைப் பார்த்து புன்னகைத்தபடி "நீங்கள்தான் ஜாயாவைப் பற்றி பேசப் போகிறீர்களா, நான் ஜாயாவின் பேரன்.ஓமர் ஜாயா என்றார்" ஏக்கத்தின் சுவடுகள் அந்த வார்த்தைகளில் படிந்திருந்தது.

எனக்கு பதிலே வரவில்லை.தலையை மட்டும்  அசைத்தேன்.

உரைகள் ஆரம்பமாயின.

எம் நாட்டின் நீதித் துறையையே புரட்டிப் போட்ட முஸ்லிம்களின் முதல் நீதியரசர் மர்ஹும் ஜஸ்டிஸ் அக்பர் பற்றிய உரையை,அஷ்ஷெய்க் மாஹிர் T.D. ரம்மன் அவர்கள் சிங்கள மொழியில் மிக அமைதியாக நிதானமாக முன்வைத்தார்.

பேராதனைப் பல்கலைக்கழக உருவாக்கம்.அக்பர் பாலம்,அக்பர் விடுதி.அக்பர் வீதி Akbar Town என அன்னாரின் பணிகள் எத்தனை ஆழமாக இந்த சமூகத்தில் மட்டுமல்ல கேட்டிருந்தோர் மனங்களையும் ஊடுருவிச் சென்றிருககுமென்பதை சபையின் அமைதி உணர்த்தியது.

கல்விமான் ஜாயா பற்றியது,எனக்கான சந்தர்ப்பம்.

இப்படியொரு ஆத்மார்த்தமான சபை நடுவே ஆயத்தப்படுத்திய பேச்சை சரியாக 
முன்வைத்து விடுவேனா என்ற அச்சம் எனக்குள் முதன் முறையாக எழுந்தது.

எதிர்பார்த்த நேரமும் வந்தேவிட்டது.

என் உரையின் இடைக்கிடையே கேட்ட கைத்தட்டல்கள் நான் நன்றாகவே பேசுகிறேன் என்ற உற்சாகத்தை தர அழகாக பேசி முடித்து இறங்கி வந்தேன். 

ஆசனத்திலிருந்து எழுந்தோடி வந்த அவர் பேரர் கண்ணீர் சிந்தி அழுதார்.

மலாய் கலாசாரம் பிரதிபலிக்கும் ஆடைகளில் பல மூத்தோர்கள் எனைச் சூழ்ந்து வந்து முகம் மலர்ந்து வாழ்த்தினார்கள்.

தன்னை ஜாயாவின் மாணவர்களில் ஒருவராக அடையாளப்படுத்திய முதியவர் ஒருவர்,"அவரைப் பற்றி பேச இன்னும் நிறைய விசயம் இருக்கு மகள்" என்றார்.

அடுத்த உரையை,அறிவிப்பாளர் மேடைக்கு என அழைத்தார்.பெருந்தலைவர் அரசியலில்  முஸ்லிம்களுக்கு என்றொரு பாதையை வகுத்துக் காட்டியவர்.A.C.S.ஹமீட் அவர்களைப் பற்றி கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானப் பீட பேராசிரியர் கலாநிதி மொஹமட் செரீப் அனீஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.

"இந்நாட்டு அரசியலில் அதிக காலம் வெளிவிவகார அமைச்சராகவும் சுமார் 92 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பிரயாணம் மேற்கொண்ட புகழையும் கொண்டவர்,இவர் தரையில் வாழ்ந்ததைவிட ஆகாயத்தில் பறந்ததுதான் அதிகம் என குறிப்பிட்டார்.

அக்குரணை ஹாரிஸ்பத்துவ மண்தந்த தவப்புதல்வன், 40 வருடங்களுக்கு மேலான அரசியல் வாழ்வில் ஒரு முறையேனும் தோற்கடிக்கப்படாத வெற்றியாளராக வலம் வந்தவர்.இன மத பேதமின்றி "சிங்கள ஹமீட்" என அழைக்கப்படுமளவுக்கு சகோதர சமூகத்தவர் களின் மனங்களை வென்றிருந்தவர் என சிறப்பான தொரு உரையை பேராசிரியர் அனீஸ் முன்வைக்க  நாமோ அப்படியே உறைந்து போயிருந்த வேளை" ஏ.சி.எஸ் என்பது மூன்றெழுத்து மந்திரம் அதில் மறைந்திருப்பது இராஜதந்திரம்" என்ற கல்ஹின்னை பெளமி ஹலீம்தீன் குரல்வழியே வந்த அசரீரி கேட்டு அண்ணாந்து பார்க்க கூடவே அவரது வரிகளிலான பாடல் 

"அக்குரணை மண்ணின் 
அற்புத ஆளுமையே 
ஹரிஸ்பத்துவயின் 
அரசியல் ஆதவனே" 

என A.C.S ஹமீட் அவர்களின் அரசியல் நிகழ்வுப் படங்களுடன் ஒலித்த அந்த பாடல் வந்திருந்தோர் மனங்களை நிறைத்தது. தொடர்ந்து A.C.S.ஹமீட் அவர்களது மருமகனும் INSIGHT கல்வி நிறுவனத்தின் அதிபரும் அன்றைய விழாவின் கௌரவ அதிதியுமாக கலந்து கொண்ட ஸியாத் முஹம்மத் அவர்கள் தழுதழுத்த குரலில் தன் மாமனாரின் அரசியல் வாழ்வு பற்றி பேச,பார்வையாளராக அமர்ந்திருந்த அவரது சகோதரி டாக்டர் மரீனா ரிபாய் அவர்கள் தன் மாமனார் பற்றிய நினைவலைகளில் மெளனமாக பிரார்த்திக்  கொண்டிருந்தார்கள்.

அரங்கத்திலிருந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு முதன் முறையாக 
நம் முன்னோடித் தலைவர்கள் இப்படியெல்லாம் சமூகத்திற்காக உருகியிருக்கிறார்களே என்பது தெரிவாக  விளங்கியிருக்கும்.நிச்சயமாக இந்நிகழ்வு அவர்களில் ஒரு அதிர்வலைகளைத்  தோற்றுவித்திருக்கும் என மனதார நம்புகிறேன்.

இங்கு பாலஸ்தீனில் மறைந்த ஸஹீதுகளுக்காகவும் zihan,Iqra சகோதரிகள் பாடிய பாடலும் அனைவரையும் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகளை தொய்வின்றி அற்புதமாக தொகுத்து வழங்கிக கொண்டிருந்தார் அஹமட் என்.நஸீர். "இதோ இன்றைய விழாவில் பேசப்பட்ட பெருந்தலைவர்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய சிறு சஞ்சிகை இப்போது வெளியிட்டு வைக்கப்படுகிறது" என முழங்க,திரையில் அழகாக பொதியிடப்பட்ட அச்சஞ்சிகை தவழ்ந்து வர அதனை கற்றிக் கட்டியிருந்த சிவப்பு பட்டுநூல் ஒரு கத்தரியால்  வெட்டப்படும் கண்கவரும் காட்சி அனைவரையும் 
கவர்ந்தது.

வந்திருந்த முக்கிய விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சஞ்சிகைகள் கையளிக்கப்பட்டதோடு, வந்திருந்த அனைவருக்குமே இலவசமாக பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு தலைவர்கள் பற்றிப் பேசும்போதும் சஞ்சிகை வெளியீட்டின் போதும் அவர் பற்றிய நிகழ்வுகளும் அறிய புகைப்படங்களும் தகவல்களும் திரையில் தோன்றிக் கொண்டேயிருந்தமை பார்ப்போரையும் கேட்போரையும் உள்ளார்ந்து நெகிழச் செய்திருக்கும் என்பதில் ஐயமேயில்லை.

இந்தளவுக்கு தொழிநுட்ப சாகசங்களை திரைக்குப் பின்னாலிருந்து  நிகழ்த்திக் கொண்டிருந்த சகோதரர் சினாஸ் மன்சூர் அவர்களை நிகழ்வின் இறுதியில் நான் தேடி பாராட்டியபோது அவர் சொன்னார் "நன்றி ஆனால் என்னை இந்தளவு மின்னலைப் போல செயலாற்றும் நுணுக்கங்களை தந்தவர் யார் தெரியுமா?,இந்த மன்றத்தின் தலைவர் முதிர்ந்த இளைஞர் நியாஸ் அவர்கள்தான்" என்றார்.அவர் என்னைவிட வேகமாக இருக்கிறாரே என பிரமித்துக்கூறினார்.

கையிலிருந்த சஞ்சிகையைப் புரட்டினேன். நீதியரசர் மர்ஹும் ஜஸ்டிஸ் அக்பரின் கட்டுரையை அல் அஸ்லாப் ஆலோசனைக் குழு உறப்பினர் Mass Lamin 
usup LLB(UK) ACIS (UK) எழுதியிருக்க, A.C.S.ஹமீட் பற்றிய கட்டுரையை பிரபல ஊடகவியலாளர் Latheef Farook அவர்களும் கலாநிதி ஜாயாவின் கட்டுரையை T.K.Asoor (Att -at Law) ஆலியோர் எழுதியிருந்தனர்.

வரலாற்றுப் பூர்வமான முகப்பட்டையுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நூலின் அடுத்த பக்கத்தில் மதிப்புக்குரிய ஆலோசனைக்குழுவினரின் புகைப்படங்களும் விபரங்களும் . 
1) Prof. (Dr) S.M.M.Mazahir 
2) Zareena Abdul Azeez LLB(Hons)UK
3)Mass Lamin usup LLB (UK) ACIS (UK) 
4) Prof. Fareena Ruzaik 
5) Latheef Farook (Journalist) என அவர்களது பதவி பட்டங்களோடு காணப்பட்டது. 

உள்ளே அல் அஸ்லாப் நம் முன்னோர் நினைவு மன்றத்தை உருவாக்குவதற்கான தூய்மையான நோக்கத்தை இப்படி குறிப்பிட்டிருந்தார்கள்.

"மனிதனுக்கு நன்றி சொல்லாதவன் அல்லாஹ்வுக்கும் நன்றி சொல்லாதவன் ஆகிவிடுகிறான்"

அல்லாஹ்வின் நம்பிக்கையுடன் நற்செயல்கள் செய்வோம்.(Let us do good deed with faith in Allah) முன்னோர்களின் மகத்துவத்தை பின்னோர்கள் அறியச் செய்யவும்,நன்றியுடன் அவர்களை நினைவு கூறவும், உருவானதே"அல் அஸ்லாப் நம் முன்னோர் நினைவு மன்றம்" என அற்புதமாக அவர்தம் குறிக்கோளை முன் வைத்து வாழ்நாள் பிரார்த்தனையை, கல்ஹின்னை நயீம் (வேட்டை) அவரின் வரிகளில் இப்படி பறைசாற்றியிருந்தார்கள்.

"நேற்றைய பெருமைக்கும்,நாளைய நம்பிக்கைக்கும் இடையில் ஒரு  பாலம் அமைப்போம்.ஏனெனில், வேரில்லாத மரம் வாடிவிடும்.ஆனால் சரியான பாதையில் செல்லும் கற்ற இளம் தலைமுறை தனது அடிப்படையில் நிலைத்துவிடும்." என்பதாக.
எனது வாழ்நாளில் இம்மைக்கும் மறுமைக்குமான வெற்றியை நோக்கிய ஒரு மாபெரும் விழாவில் கலந்து கொண்ட மனத்திருப்தியோடு அத்தனை பேருக்கும் பிரார்த்தித்தவளாக விடைபெற்றுக் கொண்டேன்.

எழுத்தாக்கம் 
மாத்தளை ஜெஸீமா ஹமீட்
30-01-2026.



 


Post a Comment

0 Comments