மகாராஷ்டிராவின் அகமத்நகரில் ஆறு நபர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஒரு தலித் நபர், தான் உள்பட நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறுநீர் கழித்ததாகவும், அவர்கள் எச்சில் துப்பிய காலணிகளை நக்கச் சொன்னதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சில ஆடுகள் மற்றும் புறாக்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் சேர்ந்து அந்த நபரும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவர்களை அடித்து மரத்தில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ சமூகளவில் சீற்றத்தையும் அரசியல் சர்ச்சையையும் தூண்டியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக ஹரேகான் கிராமத்தில் நேற்று (ஆக. 27) கடையடைப்பு நடத்தப்பட்டது.
கடுமையான தாக்குதல்
"என் கால்களில் கயிறை வைத்து கட்டி தலைகீழாகத் தொங்கவிடப்பட்டேன். என்னுடன் மூன்று சிறுவர்கள் இருந்தனர். அவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர். நாங்கள் அவர்களின் அண்டை வீட்டார்கள். நாங்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியை (மஹர்) சேர்ந்தவர்கள். அவர்கள் கோபமடைந்து, எங்கள் மீது சிறுநீர் கழிக்கிறார்கள். அவர்கள் எச்சில் துப்பிய காலணிகளை நக்கும்படி எங்களிடம் கூறினார்கள்" என்று பாதிக்கப்பட்ட நபரான ஷுபம் மகதே கூறினார். பின்னர் அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
20 வயதான அந்த இளைஞர் தன்னைத் தாக்கிய பப்பு பார்கே, ராஜு போர்கே, யுவராஜ் கலண்டே மற்றும் நானா பாட்டீல் என்று அடையாளம் காட்டியுள்ளார். அந்த நபர்கள் வந்து தன்னை யுவராஜ் கலண்டேவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் ஆடைகளை கழற்றி அடித்ததாகவும் அவர் கூறினார். இந்த தாக்குதலின் வீடியோ பரவலாக பரவியதை அடுத்து நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கைது செய்துள்ளனர். மீதமுள்ளவர்கள் தப்பியோடி உள்ளனர்.
ஒருவர் கைது
"பிரிவு 307, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள குற்றவாளிகளைத் தேடி வருகின்றோம். பாதிக்கப்பட்டவர் புறா மற்றும் ஆடுகளைத் திருடியதாக தாக்குதல் நடத்தியவர்களால் சந்தேகிக்கப்பட்டுள்ளார். அவர் மஹர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது" என்று மூத்த போலீஸ் அதிகாரி ஸ்வாதி போர் கூறினார்.
பெயர் குறிப்பிடப்படாத ஒரு போலீஸ் அதிகாரி தரப்பில், "இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பழங்குடியினர் (தடுப்பு) பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 364 (கடத்தல்) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
இந்தச் சம்பவத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மனிதநேயத்தின் மீதான கறை என்று கூறியுள்ளது. "இதுபோன்ற சம்பவங்கள் பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக பரப்பும் வெறுப்பின் விளைவாகும்" என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்துள்ளார். தலித்துகளின் சுயமரியாதையை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே குற்றம் சாட்டியுள்ளார்.
SOURCE:zeenews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இந்தியா