
நான் கடந்த 12 வருடங்களாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இன்சுலின் ஊசியும் சில மாத்திரைகளையும் பாவிக்கின்றேன். அத்துடன் பிறசருக்கும் மருந்து எடுக்கின்றேன். உடல் வலி, சோர்வு, உற்சாகமின்மை போன்றவைகள் கூடிக் கொண்டே செல்கின்றன. இதிலிருந்து நிவாரணம் பெற உடற்பயிற்சி செய்யும் படி ஒரு சிலர் கூறுகின்றனர். எனது உடல் ஆரோக்கியம் இந்நிலையில் இருக்கும் போது உடற்பயிற்சி செய்யலாமா என ஆலோசனை கூறவும்.
.றபீக், மதுரங்குளி
பதில்: நீரிழிவு நோய் என்பது குருதியில் சாதாரணமாக இருக்கவேண்டிய சீனியின் அளவை விடவும் அதிகமாக இருக்கும் நிலையைக் குறிக்கும். இந்நோய் பல காரணங்களினால் ஏற்படுகின்ற போதிலும் உடற்பயிற்சியின்மை, சுறுசுறுப்பற்ற வாழ்க்கை நடைமுறை, ஆரோக்கியமற்ற உணவு வகைகளை உட்கொள்ளல் போன்றவைகளினால் ஏற்படுகின்றன. 

பொதுவாக தொடர்ந்தும் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு நாம் அடிக்கடி பெற்றோலை ஊற்றிக் கொண்டிருந்தால் பெற்றோல் டாங்கி நிறைந்து வெளியே கொட்டும் என்பது எம் எல்லோருக்கும் தெரியும். அத்துடன் தொடர்ந்து வாகனத்தை நிறுத்தி வைப்பதனாலும் வாகனங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
இதற்கு மாறாக வாகனம் ஓடும் போது பெற்றோவின் அளவு குறைவதோடு மீண்டும் மீண்டும் பெற்றோல் போட வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் வாகனத்தை பாவனைக்குட்படுத்தும்போது தொடர்ந்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விடவும் குறை வான பாதிப்புக்களே பாவனைக்குட்படுத்தப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு ஏற்படும்.
இதேபோன்றுதான் மனிதனும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடாமல் இருப்பதன் மூலமும், ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளும் போதும் குளுக்கோசின் அளவு கூடி நீரிழிவு நோயை ஏற்படுத்தும். எனவே உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றே உடற்பயிற்சியிலும் ஈடுபடு வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். வாகனம் ஓடும் போது எவ்வாறு பெற்றோல் பாவனைக்குட்படுத்தப்பட்டு குறைகின்றதோ அதே போன்று நாம் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது உடம்பில் சீனியின் அளவும் குறையும்.
ஆனால் நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சியில் ஈடுபடாமல் மாத்திரைகளையும், இன்சுலின் ஊசியையும் மாத்திரம் பாவிப்பதன் மூலம் மருந்தின் தாக்கத்திற்கு உட்படுத்தப்படுவது மாத்தி ரமன்றி பொருளாதாரக் கஷ்டத்திற்கும் முகம் கொடுக்கிறார்கள்.
எனவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதாயின் இயற்கை உணவுகளை அளவோடு உட்கொண்டு உடற்பயிற்சிகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
எனவே நீரிழிவு நோயாளிகள் முடியுமானவரையில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியம். ஆனாலும் இதை வாசித்துவிட்டு உடனடியாக உடற்பயிற்சியில் ஈடுபடாமல் வைத்தியர் ஒருவரை நாடி உங்களது உடல் நிலைக்கேற்ற உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடம்பில் சீனியின் அளவைக் கட்டுப்படுத்த முடியுமாக இருப்பதோடு, கொலஸ்ரோலின் அளவு குறைதல் குருதிச் சுற்றோட்டத் தொகுதியைப் பலப்படுத்தல், மூட்டுக்களுக்கு உறுதியைக் கொடுத்தல், இன்சுலினின் தொழிற்பாட்டைச் சீர்செய்தல், உடல் நிறைகுறைதல், இருதயம் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புக்களின் தொழிற்பாட்டைச் சீர்செய்தல், நரம்புத் தொகுதி புத்துயிர்ப்படைதல் போன்றவைகளின் மூலம் உடம்பின் ஆரோக்கியத்திற்கும் உறுதிப்பாட்டிற்குமான பல நன்மைகள் ஏற்படுகின்றன.
மருத்துவ ஆராய்ச்சியொன்றின்படி தொடர்ச்சியான உடற்பயிற்சி ஒருவரினது மனநலத்திற்கும் முக்கிய பங்கையளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அத்துடன் நீரிழிவு நோயுடன் கண், இருதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு நோய்கள் இருப்பவர்கள் வைத்தியர்களின் ஆலோசனையுடனும் வழிகாட்டலுடனும் உடற்பயிற்சி செய்வது முக்கியம். உங்களது நோயின் தன்மைக்கு ஏற்ப எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனவும் எந்நேரத்தில் உடற் பயிற்சி செய்ய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்குவார்கள். இவ்வாறு நீரிழிவு நோயாளிகள் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் போது ஆகக் குறைந்தது 2 கிழமைக்கு ஒரு முறையாவது உங்களது வைத்தியரைச் சந்தித்து மாத்திரைகளின் அளவைக் குறைப்பது , பற்றி கலந்தாலோசிக்க வேண்டும். அத்துடன் தினமும் உங்களது குருதியில் சீனியின் அளவையும் பரீட்சித்துப் பார்ப்பது மிக மிக முக்கியமாகும்.
அத்துடன் உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பிக்கும் போதே கடினமாகவும் தொடர்ச்சியாக நீண்ட நேரம் மேற்கொள்ளவும் கூடாது. இதன் மூலம் சுவாசக் கஷ்டம், மூட்டு மற்றும் தசைகளுக்குப் பாதிப்பு, நெஞ்சு வலி போன்றவைகள் ஏற்படலாம். முதல் 510 நிமிடங்களுக்கு கை கால்களை மெது வாக அசைத்து உடம்பின் உஷ்ணத்தைப் படிப்படியாகக் கூட்டக்கூடிய உடற்பயிற்சியில் (Warm up exercise) ஈடுபட்ட பின்பே தீவிர உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும். அதேபோன்று உடற்பயிற் சியை நிறுத்தும் போதும் படிப்படியாக வேகத்தைக் குறைக்க வேண்டும். உடற் பயிற்சி செய்து கொண்டிருக்கையில் அசாதாரண குறிகுணங்கள் ஏற்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்தி விட்டு வைத்தியர் ஒருவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.
இங்கு கேள்வி அனுப்பியிருப்பவரும் நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதனால் உடற்ப யிற்சியை ஆரம்பிக்க முன் வைத்தியர் ஒருவரைக் கலந்தாலோசிப்பதே மேல் உங்களுக்கு அதிகூடிய இரத்த அழுத்த நோயும் இருப்பதனால் இருதய நோய் வைத்திய நிபுணர் ஒருவரினது ஆலோசனையைப் பெறுவது சிறந்தது.
இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது நீரிழிவு நோயின் எதிரிதான் சமபோசணையுள்ள இயற்கை உணவும் உடற்பயிற்சியும். எனவே எமது எதிரியான நீரிழிவு நோயை சமபோசணையுள்ள உணவு வகைகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வெற்றி கொள்வோம்.
DR.NASEEM
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments