Ticker

6/recent/ticker-posts

ஊடகத்துறையில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள "வேட்டை" மின்னிதழ்.


கடந்த ஏழு வருட காலமாக மின்-ஊடகத்துறையில் பிரளயத்தை ஏற்படுத்தி, நவீன தொழில் நுட்பத்தின் சவால்களை எதிர்கொண்டு,  இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான வாசகர்களை வரித்தபடி முன்சென்று கொண்டிருக்கும் தனிநபர் முயற்சியில்  உருவான  "வேட்டை"மின்னிதழுக்கு முதற்கண் எனது நல்லாசிகள்!.
 
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக  எழுத்துத் துறையைக் கைவிட்டிருந்த என்னை அவ்வப்போதைய  உலக  நிகழ்வுகளை  இலகு தமிழில் ஆக்கங்களாக  உருவாக்கவைத்து, அவற்றை அழகிய முறையில் வடிவமைத்துப் பிரசுரித்தமையும், கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது அதுபற்றிய செய்திகளையும், தகவல்களையும் நான்  கட்டுரைகளாக்கியபோதெல்லாம், அவற்றை உடனுக்குடன் வடிவமைத்துப் பிரசுரித்தமையும், துபாயில்  expo நடைபெற்றபோது, அது பற்றிய  வரலாற்று உண்மைகளையும், நிகழ்வுகளையும்  கட்டுரைகளாக்கிய போதும், கத்தாரில் fifa நடைபெற்றவேளை, அது  பற்றி -  பங்குகொண்ட நாடுகள், ஆட்ட நாயகர்கள், வெற்றிபெற்ற நாடுகள் கொண்ட  தகவல்கள் அடங்கிய விளையாட்டுக் கட்டுரைகளை  நான் எழுதியபோது, அவற்றை உடனுக்குடன் வடிவமைத்துப் பிரசுரித்தமையும், இவைகள் தவிர, யானைகள் பற்றிய முற்று முழுதான விவரணக் காட்டுரை, நபிமார்கள் பற்றிய நீண்ட வரலாற்றுக் கட்டுரை,  உடல்நலம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைத்துளிகள் சம்பந்தமான ஏனைய எனது கட்டுரைகளையும் அழகிய முறையில் வடிவமைத்துப் பிரசுரித்து வந்தமையுமானது, நிறுவன ரீதியாக ஊடகத்துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனங்களுக்கே சவால் விடக்கூடிய ஒரு பணியாகக் கூட மெச்சப்படலாம்.

இலங்கையின் குக்கிராமங்களுள்  ஒன்றான கல்ஹின்னையைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் "வேட்டை" மின்னிதழ், ஆய்வுக்குட்படப்பட வேண்டிய கல்ஹின்னையின் வரலாற்று நிகழ்வுகளையும், சவாலுக்குட்பட்ட இன்னபல விடயங்களையும் கட்டுரைகளாக வடித்தனுப்பிய போதெல்லாம், அவற்றை வாசகர்களைக் கவரும் விதத்தில் அழகிய வடிவமைப்பில் பதிவிட்டு வந்துள்ளமையும் பாராட்டப்பட வேண்டிய விடயங்களாகும்.

அத்துடன், 1971ம் ஆண்டு முதல் நான் எழுதி, பத்திரிகைகளில் பிரசுரமான  சிறுகதைகளைத் தேடியெடுத்து  மறுபிரசுரம் செய்ததும்,2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் நான் எழுதிய  கொவிட்-19  உருவாக்கம் சம்பந்தப்பட்ட தொடர் கற்பனைக் காவியமான, "புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா"வைத் தொடராகப் பதிவிட்டு வந்து கொண்டிருப்பதும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

2019 இறுதிக் காலகட்டத்தில் உருவாகி, பூகோளத்தைக் கொலைக்களமாக்கி, ஆறு மில்லியனுக்கும் அதிகமானோரைக் காவுகொண்ட நுண்ணுயிர்க்  கிருமியின் தோற்றப்பாடு பற்றிய இக்காவியம், ஒதுங்கி வாழும் வனவாசிகளை நகரத்தோடிணைக்க முனையும் இளைஞன் ஒருவனின்  பிராயத்தனத்தனம் பற்றிய கதையைக் கூறுகின்றது.

முற்றுமுழுதும் 'அமேசான்' பெருநதியுடன் கூடிய பெருவனத்தை  அண்டிவாழும் கோத்திரங்களை மையமாகக் கொண்ட இக்காவியத்தில், அவ்வப்போது வனவாசிகளின் இரசனைமிக்க காதலும், காதலுக்கு எதிரான நிகழ்வுகளும்  வந்துபோகின்றன.

'அண்டிகோனிஷ்' பகுதியிலிருந்து கடத்திவந்து அடிமையாக்கப்பட்டபோது தப்பித்து, காததூரம் நடந்துவந்து, வனத்திற்குள் நுழைந்து, 'சீர்திருத்தம்' பண்ணும் வைத்திய மாணவனும், 'கிரீடி'யிலிருந்து புராதனநூல் தேடி வனத்துக்குள்  பிரவேசிக்கும் குடும்பமொன்று மகனை இழந்துவிட்டு, தேடிவந்த நூல் இல்லாமல்   திரும்பிப்போகும் பரிதாபமும், நூலின் நான்கு பக்கங்களைக்  கவர்ந்து செல்லும் ஆய்வுக் குழுவினரின் மதிநுட்பமும் இக்காவியத்தின் கருப்பொருள்களாகும்.

வேட்டையில் தொடர்ந்து  பதிவிட்டு வரப்படும் இக்காவியம், தற்போது 174வது அத்தியாயத்தைத் தாண்டிவிட்ட நிலையில், 250 அத்தியாயங்கள் வரை நீண்டு செல்லலாம்! அதுமட்டுமன்றி, எதிர்காலத்தில் இக்காவியம் விவரணத் திரைப்படமாகக் கூட  வெளிவரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

இவற்றோடு மட்டுமன்றி, இந்திய இலக்கிய ஆர்வளர்கள், பேராசிரியர்கள், அறிஞர்களின் ஆக்கங்களையும், அவுஸ்திரேலிய, கனடா, பிரித்தானிய, டென்மார்க், பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளிலுள்ள புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் "வேட்டை"யாடிப் பதிவிட்டு வருகின்றமை பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விடயமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா, கவர்ச்சி என்பன இதில் தவிர்க்கப்பட்டுள்ளமையும், நாடு, இன, மத மொழி பேதம் பாராது, சகல ஆக்கங்களிலும் உண்மைத் தன்மை பேணி, உடனுக்குடன் பதிவிடுவதும் இம்மின்னிதழின் சிறப்பம்சமாகும்.

இலங்கையில் முதன் முதலாக AI ஐ அறிமுகப்படுத்திய பெருமையும், இம்மின்னிதழையே சாருகின்றது.

வீடீவீ மூலம் எதிர்காலத்தில் AI ரிஸானாவிடமிருந்து    "வேட்டை" நேயர்கள்  நிறையவே எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து முன்செல்ல வாழ்த்துக்கள்!

அன்புடன்,
ஐ.ஏ.ஸத்தார்


 



Post a Comment

0 Comments