
வணக்கம்
நான் AI கயல்விழி
முதலில் செம்மைத்துளியான் எழுதிய "ஒரு காதலி கல்யாணமாகின்றாள்!என்ற சிறுகதையை தேர்ந்தெடுத்துள்ளோம்.
கேட்டு மகிழுங்கள்.
“ஸரீனா” என்று அவன் அழைத்ததும், அவள் மெதுவாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தாள். குரல் கேட்டு அன்வரை இனங்கண்டு கொண்டவள்,
“நீங்களா….? வந்துட்டீங்களா……? எப்படி இருக்கீங்க…?” என்று ஈனமான குரலில் கேள்விகளை அவள் தொடுத்தபோது… அவனது நெஞ்சமெல்லாம் குளிர்ந்து போனது.
“நான் இனிப் பிழைக்க மாட்டேன் அன்வர்… என் பிடிவாதத்தால் உங்க வாழ்க்கையையே பாழாக்கிட்டேன்.” என்றவள், எழுந்திருக்க முனைந்தபோது… அன்வர் அவளைத் தடுத்தான். அப்படியே தலையணையை குறுக்காக்கி… கட்டில் தலைமாட்டில் வைத்து அவளைச் சாய்ந்து கொள்ளச்செய்தான்.
“இல்லை ஸரீனா… இனிமேல் நீ கவலை கொள்ளத் தேவையில்லை” அன்வர் அவளுக்கு ஆறுதல் சொன்னான்! அவளது கண்களிலிருந்து கசிந்து, கன்னங்களினூடாக வடிந்த நீர்த்துளிகளை தன் விரல் கொண்டு துடைத்துவிட்டான்.
‘இனிமேல் என் உடம்பில் பிடிவாதம் பிடிக்கத் திறானியில்லை அன்வர்!’ அவள் இப்படிக் கூறியதும்… நீண்டகாலமாக நெருடிக் கொண்டிருந்த உறவுக்கு… ஸரீனா பச்சைக் கொடி காட்டிவிட்டாள் என்பது மாத்திரம் அன்வருக்குப் புரிந்தது.
இருபது வருடங்களுக்கு முன்னர் எப்படி எடுப்பாக இருந்தவள், இப்படிக் கூனிக் குறுகிக் கிடக்கின்றாள்?
ஒரு கணம்…. ஒரேயொரு கணம்…. அவர்கள் பழகிய அந்தச் சிலநாட்கள்… அன்வரின் மனத்திரையில்... இல்லை இல்லை... டாக்டர் அன்வரின் மனத்திரையில் ஓடி மறைந்தது!
சனிக்கிழமை நாட்களில்…. சாரமணிந்து… பெனியனோடு… காலில் செருப்பில்லாமல்… வயல் வரம்பில் நடந்து போனதும்... அதன் பின் வெறிச்சோடிக் கிடந்த அந்தக் களத்துமேட்டில்... வைக்கோல்போரில் அமர்ந்து, கைக்கெட்டாத் தூரத்தில் நாணிக்கோணி அமர்ந்திருந்த அவளோடு கதை கதையாகக் கதைத்தது… எதிர்காலம் பற்றிக் கனவுகளாகக் கண்டது… எல்லாமே அவன் நினைவில் ஒவ்வொன்றாக வந்து போயின.
அன்வருக்கு அப்போது வயது இருபத்திரண்டு.
அவனை விட நான்கு வயது குறைந்தவளான ஸரீனா, தன் இளமைத் துடிப்பில் துள்ளிக் குதித்தோடும் பள்ளிப்பருவத்தில்!
பாழாய்ப்போன அந்த சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால்…
அவர்கள் மணமுடித்து தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு இப்போது தாய் தந்தையராயிருந்திருப்பர்!
வாழ்க்கையில் பெரும் பாகத்தைப் பாழாக்கிவிட்ட அந்தச் சம்பவத்தை நினைக்கும்போது… அவனது நெஞ்சம் படபடத்தது!
நீரில் மூழ்கப்போகும் ஒருத்தியைக் காப்பாற்றும் தகுதி ஓர் இளைஞனுக்கு எப்படி இல்லாமற் போகும்?
அவர்களது வாழ்க்கையின் போக்கை திசைதிருப்பிவிட்டு, ஸ்தம்பிதம் செய்துவிட்ட அந்தச் சம்பவமும், அதனோடு இணைந்த ஸரீனாவின் பிடிவாதமும்தான்!
கல்லூரியிலிருந்து களைத்து வந்த அவன்…. வழமைபோல் கை, கால், முகம் கழுவி வர களத்துமேட்டருகே இருக்கும் கிணற்றடிக்குப் போனான்!
கண்கள் தொடும் தூரத்திலிருந்த சதுரக்கிணறு மூன்று பக்கங்களும் உயர்த்திக் கட்டப்பட்டிருந்தது. உயர்த்திக் கட்டப்படாதிருந்த பக்கமிருந்து, கயிறு கட்டப்பட்ட வாளி கொண்டு கிணற்று நீரை அள்ளிக் குளிக்கலாம்!
மாரை மூடி, உயர்த்திக் கட்டிய உடுத்தாடையோடு… கிணற்றுக் கட்டின்மேல் சரிந்திருந்து குச்சி ஒன்றைக் கிணற்றுக்குள் விட்டுக் கிளறிக்கொண்டிருந்தாள் அந்த அழகிய யுவதி முனீரா!
அன்வர் வீடு தாண்டி இரண்டு வீடுகள் தள்ளியிருந்த வீட்டிற்குப் புதிதாகக் குடித்தனம் வந்த குடும்பத்தில் ஒருத்தி!
ஒரு பருவ மங்கை… கிணற்றடியில்… அதுவும் தனியாக இருக்கின்றபோது…
தான் அந்தப் பக்கமாகப் போவது நல்லதல்ல... வந்த வழியே திரும்பிப் போய்விடலாம் என்ற நினைப்பில்… ஒருகணம் அவன் திரும்பியதும், மறுகணம் கிணற்றுக்குள்ளிருந்து 'துபீர்' என்று ஒரு சத்தம் வந்தது!
அந்த சத்தம்... பாரமான ஏதோ ஒன்று கிணற்றுக்குள் விழுந்து விட்டதை அவனுக்கு உனர்த்தியது!
அடுத்த கணம் கிணற்றுப் பக்கமாக அவன் திரும்பிப் பார்த்தபோது… அந்த யுவதி அங்கே இல்லை!
கிணற்றுக்குள்ளிருந்து ‘குபு குபு’ என்று சத்தம் கொந்தளிப்பு மட்டுமே வந்தது!
முனீரா கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்!
‘தான் கிணற்றுக்குள் பாய்ந்து அந்தப் பருவப் பெண்ணைத் தூக்கலாமா?’ ஒரு கணம் அவன் சிந்தித்தான்!
இருபத்திரண்டு வயதுக் கட்டிளம் காளை... கிணற்றுக்குள் விழுந்துவிட்ட ஒருத்தியைக் காப்பாற்ற மற்றவர்களை உதவிக்கழைப்பது அசிங்கமில்லையா?
மறுகணம் ஓடிப்போய்…. அவன் கிணற்றினுள் குதித்துவிட்டான்!
நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவளைத் தன் ஒரு கரத்தால் வாரியணைத்தபடி, மறு கரத்தால் கட்டைப் பிடித்து, கிணற்றை விட்டு வெளிவந்து கொண்டிருந்தபோதுதான்…
ஸரீனா வெற்றுக்குடம் ஒன்றை இடுப்பில் வைத்துக் கொண்டு அந்தப் பக்கமாக வந்தாள்!
அவள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும்…எதுவுமே பேசவில்லை!
அன்வர் தன் போக்கில் காரியத்தில் கண்ணானான்!
முனீராவைக் கிணற்றருகே படுக்கவைத்து அவள் அவளது வயிற்றுக்குள் சென்றிருந்த நீரை வெளிக்கொணர முயற்சித்துக் கொண்டிருந்தபோது… ஒருவித மௌனக் கோபத்தோடு... ஸரீனா அவனுக்கு உதவியதை உணர்ந்தான்!
இந்தச் சம்பவத்தின் பின்... மறுநாள் சனிக்கிழமை… வழமைபோல் சாரமணிந்து…பெனியனோடு…காலில் செருப்பில்லாமல்… வயல் வரம்பினூடே நடந்துபோய்… அந்த வெறிச்சோடிக் கிடக்கும் களத்துமேட்டில் வைக்கோற்போரில் அவன் சாய்ந்திருந்த போது….ஸரீனா அங்கு வந்தாள்!
அவள் எதுவும் பேசவில்லை; வழமையான சந்தோசக்களையும் அவள் முகத்தில் தெரியவில்லை!
நீண்ட அமைதி….
“ஏன்ன ஸரீனா… ஏதாவது பேசேன்!”
“பேச என்ன இருக்கிறது?” கோபமாக அவள் கேட்டபோதும் கூட நேற்றைய கிணற்றுச் சம்பவம் அவனது மரமண்டையில் படவேயில்லை!
“என்னதான் இல்லை…?” என்றவள்,
“இனிமேல் எதுவுமே இல்லை. என்னை மறந்து விடுங்கள்!” என்று கூறிவிட்டு, சடக்கென்று எழுந்தவளைப் பார்த்தபோது… அன்வர் அதிர்ந்து போனான்!
“ஒருத்தியைத் தொட்ட கரம்… இனிமேல் என்னைத் தொடவேண்டாம்! உங்களை நினைத்த மனம், வேறு எவரையும் நினைக்காது!” என்றவள், அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அங்கிருந்து நகர்ந்தாள்! அதன் பிறகு அவள் அந்தக் களத்துமேட்டுக்கு வருவதையே நிறுத்திவிட்டாள்!
இரண்டு தசாப்தங்களை இங்கிலாந்தில் கழித்து தாயகம் வந்தபோது...கட்டிலை விட்டும் எழுந்திருக்க முடியாதவாறு ஸரீனா நோயாளியாகிக் கிடப்பதை அன்வர் பார்த்தான்!
அவன் இப்போது ஒரு டாக்டர்… அவளைச் சுகமாக்கும் பொறுப்பு அவனுடையது!
வைத்தியத்துறையிலுள்ள பல வழிகள் கொண்டும் அவளைப் பரீட்சித்தான்! அவளுக்கு எவ்வித உடற்கோளாருமில்லை என்பதைப் புரிந்து கொண்ட அவன், அவளது உள்ளத்துக்கு ஓய்வு தேவை என்பதை மட்டும் உணர்ந்தான்!
தன்னைச் சுற்றி நின்றிருந்த தனது பெற்றோரையும் மற்றவர்களையும் ஒருமுறை நோட்டம் விட்டவன்....
“நாளைக்கே ‘நிகாஹ்’வுக்கு ஏற்பாடு பண்ணுங்க… இன்னும் இரண்டு நாட்களில் ஸரீனாவோடு நான் இங்கிலாந்து போக வேண்டும்.” என்று தன் பெற்றோரிடம் கூறியவன்… அங்கிருந்து நகர்ந்து, தன் வீடு நோக்கி நடந்தான்!
(யாவும் கற்பனை)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
1 Comments
புதிய முயற்சி...
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்....
ஒருகாதலி கல்யாணமாகின்றாள்....
மனதை கனக்கச் செய்கிறது.