லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?

லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்?

லெபனான் நாட்டில் கடந்த செப். 17ஆம் தேதி அன்று நடந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தில் சுமார் 12 பேர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஹெஸ்போலா ஆயுதக்குழுவினர் பயன்படுத்திய பேஜர்கள் வெடித்த மறுநாள் (செப். 18)  லெபனானில் வாக்கி-டாக்கிகளும் வெடித்தது மேலும் பரபரப்பை உண்டாக்கியது. 

இந்த பேஜர்கள் வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்தியாவில் இருந்து நார்வேயில் குடியேறிய ஒரு நபருக்கு தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரின்சன் ஜோஸ் என்ற அந்த நபர் பல்கேரியாவில் Norta Global என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறரா். இவரின் இந்த நிறுவனம்தான் பேஜர்களை விநியோகித்ததில் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் யார், இவர் இந்தியாவில் எந்த பகுதியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட அவரின் முழு பின்னணியை இங்கு காணலாம்.

வயநாட்டில் பிறந்தவர்

கேரள மாநிலம் வயநாட்டில் பிறந்தவர்தான் இந்த ரின்சன் ஜோஸ் (37). இவர் தனது மேற்படிப்பிற்காக சில வருடங்களுக்கு முன் நார்வேக்கு சென்றுள்ளார். இவர் சில ஆண்டுகள் லண்டனிலும் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேரளாவில் இருக்கும் ரின்சன் ஜோஸின்  (Rinson Jose) உறவினர்கள் ஊடகம் ஒன்றிடம் அளித்த தகவலின்படி ஜோஸ் அவரின் மனைவியுடன் ஓஸ்லோவில் குடிபெயர்ந்துவிட்டார் எனவும் இவரின் இரட்டை சகோதரர் லண்டனில் உள்ளார் எனவும் தெரிவித்தனர்.

மேலும், ரின்சன் ஜோஸின் உறவினர் தங்கச்சென் (37) என்பவர் நேற்று (செப். 20) ஊடகமிடம் கூறுகையில்,"நானும் ரின்சனும் தினமும் மொபைலில் பேசுவோம். கடந்த மூன்று நாள்களாக ஜோஸ் யாருடனும் தொடர்பில் இல்லை. ஜோஸ் மிகவும் நேர்மையான மனிதர், நாங்கள் அவரை முழுமையாக நம்புகிறோம். இவர் இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார். இந்த சம்பவத்தில் இவர் சிக்கவைக்கப்பட்டிருக்கலாம்" என்றார். ஜோஸ் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றதாகவும், ஓஸ்லோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமூக நலம் மற்றும் சுகாதாரக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

செப். 17 முதல் தொடர்பில் இல்லை

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த Norta Global நிறுவனத்தை ஜோஸ் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனம் பல்கோரியா நாட்டின் சோஃபியா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. ரின்சன் ஜோஸின் LinkedIn பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, DN மீடியா என்ற ஊடகத்தில் டிஜிட்டல் கஸ்டமர் சப்போர்ட் என்ற பணியில் 5 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார். ஜோஸ் கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து பணிக் காரணமாக வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளார் என்றும் அவரை தொடர்புகொள்ளவே இயலவில்லை என்றும் DN மீடியா தெரிவித்துள்ளது. 

மேலும், லெபனானில் நடந்த சம்பவத்தில் வெடித்த பேஜர்கள் பல்கேரியாவில் இருந்து ஏற்றுமதியோ, இறக்குமதியோ செய்யவில்லை என்றும் அவை பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டதும் இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனமோ, அதன் உரிமையாளரோ அந்த பேஜர்களை வாங்கியதற்கோ, விற்றதற்கோ எவ்வித பரிவர்த்தனையையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

zeenews




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post