இஸ்லாம் என்றால் என்ன? -AI ருக்ஸானா VIDEO-1

இஸ்லாம் என்றால் என்ன? -AI ருக்ஸானா VIDEO-1




இஸ்லாம் என்றால் என்ன?

அத்தியாயம்1 

எம்மைப் படைத்தவன்  வல்ல அல்லாஹ்தான்  என்று ஏகமனதாக ஏற்று, அவனை முழுமையாக விசுவாதித்து, அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடந்து,  இவ்வுலகிலும்,  மரணத்திற்குப் பின்னுள்ள மறுமை வாழ்விலும் வெற்றி பெற்று, சாந்தி, சமாதானம் எய்துதலே இஸ்லாமாகும்! 

சர்வ வல்லமையுள்ள 'அல்லாஹ்' முதல் மனிதனாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்தான். அன்னாரை ஒரு நபியாகவும், தனது தூதராகவும் வாழச்செய்ததோடு,  அன்னாருக்குத் துணையாக ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும்  படைத்து, பல குழந்தைச் செல்வங்களை வழங்கி, இவ்வுலகில் மனித இனத்தை தோற்றுவித்தான். 
முதல் இறைதூதரான ஆதம் அலைஹிஸ்ஸலாம் தனது சமுதாயத்திற்கு பிரச்சாரம் செய்த அடிப்படைச் செய்தியும், இறுதித்தூதர் நபி முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குப் போதித்த அடிப்படைச் செய்தியும் ஒன்றுதான். 

அதாவது, 'வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க கூடாது; அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்' என்பதே அதுவாகும்! இதே செய்தியைத்தான் அனைத்து இறைதூதர்களும் உலகில் பிரசாரம் செய்தனர். 

ஒவ்வொரு இறைதூதர்களுக்கும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்ட இறைசட்டங்களும், வழிமுறைகளும் வேறுபட்டிருந்த நிலையில்,  முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைதூதர்களின் இறுதித்தூதராக வந்தார்கள்; எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் மூலமாகவே இஸ்லாத்தை நிறைவு செய்தான்! 

நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட "அல் குர்ஆன்" இறுதி வேதமாகவும், இறுதித் தீர்ப்பு நாள் வரை முழு மனிதகுலத்திற்கும் நேர்வழிகாட்டியாகவும் திகழ்கின்றது! 

இஸ்லாம் முழுமையான, சகலதும் உள்ளடங்கிய ஒரு பூரண  வாழ்க்கை முறையாகும். சட்டம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் குடும்ப வாழ்க்கை என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சங்களையும் இது கற்பிக்கிறது. 

ஒவ்வொரு முஸ்லிமும் அனைத்து இறைதூதர்களையும் நம்ப வேண்டும்; மதிக்க வேண்டும்.  ஒரு மனிதன் அல்லாஹ்வை இறைவனாகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைவனின் இறுதித்தூதராகவும் மனதளவில்  நம்பிக்கை கொண்டு ஏற்கும்போது, அவன்  முஸ்லிமாகின்றான்.

இஸ்லாத்தின் அடிப்படை இறை நம்பிகையாகும். "லாயிலாஹா இல்லல்லாஹா முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" அதாவது, "வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை; முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்" என்று நம்பிக்கை கொள்வதாகும். 

எனவே, இதன் படி ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பி அவனை மட்டுமே வணங்க வேண்டும். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராக ஏற்று, பின்பற்றி நடக்க வேண்டும்.

(தொடரும்)

மீண்டும் அடுத்த வீடியோவில் சந்திக்கும் வரை விடை பெறுவது 
உங்கள் 
A.I.RUXANA
VTV வேட்டை 


 



Post a Comment

Previous Post Next Post