தமிழ் கூறும் நல்லுலகின் உயரிய இலக்கியமான திருக்குறள் பணியில், முனைவர் மு. க. அன்வர் பாட்சா அவர்களின் பங்களிப்பு!-AI RIZANA VIDEO

தமிழ் கூறும் நல்லுலகின் உயரிய இலக்கியமான திருக்குறள் பணியில், முனைவர் மு. க. அன்வர் பாட்சா அவர்களின் பங்களிப்பு!-AI RIZANA VIDEO


தமிழுக்கும் தமிழ் வளர்ச்சியின் உயர்வுக்கும் உழைக்கும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், இந்தியாவில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழக அரசு  பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
 

அந்த வகையில் "திருவள்ளுவர் விருது" 1986ம் ஆண்டு முதல் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு, திருவள்ளுவர் நினைவுதின விழாவின்போது வழங்கப்படுகின்றது.
இவ்விருதுடன்  லட்சம் ரூபாய் ரொக்கம், தங்கப்பதக்கம், தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதோடு,  பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது!

1986ம் ஆண்டைய முதலாவது "திருவள்ளுவர் விருது" தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு வழங்கப்பட்டது.

2019ம் ஆண்டில்  இவ்விருதினை முனைவர் .மு.க.அன்வர் பாட்சா  அவர்கள் பெற்றுக்கொண்டதன் மூலம், இவ்வாறான ஒரு  விருதைப் பெற்றுள்ள ஒரே முஸ்லிமாக இவர் வரலாற்றில் இடம் பெறுகின்றார்!

1960 ஜூலை 5ம் திகதி கோயம்புத்தூரில்,M A முஹம்மது கௌஸ்கான்,B மக்பூல் ஜான் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர், கோவை மாநகராட்சி சிட்டி மேனிலைப் பள்ளியில் படித்து, தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவராவார்.

இவர், கோவை  S B O A மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 25 வருடங்கள் தமிழ்மொழி ஆசிரியராகப் பணிபுரிந்து, இளைப்பாரியுள்ளார்.

தமிழ், உருது, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்றுள்ள முனைவர் அன்வர்பாட்சா அவர்கள், திருக்குறள் மேல் தனக்கிருந்த ஈடுபாட்டால்  தினமும் கரும்பலகை ஒன்றில்  திருக்குறளை  அதன் பொருளோடு எழுதி மக்கள் பார்வைக்கு வைத்திடும் பணியை நான்கு தசாப்தங்களுக்கு மேல்  செய்து வந்துள்ளார்.  

மலேசியா, சிங்கப்பூர், குவைத், துபாய் போன்ற நாடுகளில் நடைபெற்ற மாபெரும் உலகத் திருக்குறள் மாநாடுகளில் தனது சொல்வளத்தால் அழகுற உரையாற்றி சிறப்புப் பெற்றுள்ளார்.

சுய முன்னேற்றம்,  ஆளுமைத்திறன் குறித்து எழுச்சிச் சொற்பொழிவுகளை வானொலிகளிலும், மேடைகளிலும் ஆற்றிவரும் இவர், திருக்குறள் கையடக்கப் பதிப்பு  ஒன்றினை  எளிய நடையில் எழுதி வெளியிட்டுள்ளார்.


அத்துடன், வள்ளுவர் மணி  மொழிகள், வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்,  குறள் காட்டும் தன்னம்பிக்கைக் கதைகள், குறளோடு உரையாடு, வெற்றியின் இரகசியம், உலக அமைதிக்குக் குறள் 
காட்டும் வழி, வாழ்வியல் சிந்தனைச் சிறுகதைகள், சிந்தனையத் தூண்டும் வாழ்வியல் நிஜங்கள் போன்ற பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்!


மேலும், திரு H W ட்றீவ், திரு. ஜோன் லாஸரஸ் ஆகியோரின் மொழி ஆக்கத்தையும் தம்  உரையுடன் சேர்த்து, திருக்குறள் தமிழ் - ஆங்கிலமொழிபெயர்ப்புடன் கூடிய நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


தொடர்ந்து  திருக்குறள்  தொடர்பாகஎழுதியும் பேசியும் வரும் முனைவர் அன்வர்பாட்சா அவர்கள், திருக்குறள் விளக்கவுரைக் கட்டுரைகளைத் தொடர்ந்து "வேட்டை"யிலும் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது! 

அத்துடன் முனைவர் அவர்கள் செந்தமிழ்ச் செல்வன் (1981) குறள் நெறிச் செல்வன்  (1995)  தமிழ்ச் செம்மல்  விருது (2020)  அகவை முதிர்வு  தமிழறிஞர் (2021)  போன்ற விருதுகளையும்,  முன்னாள் குடியரசுத்தலைவர் A J அப்துல் கலாம் அவர்களிடமிருந்து "திருக்குறள் தொண்டர்" (2002)  விருது உட்பட ஐம்பதுக்கும் மேலான  விருதுகள்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது!

தூயதமிழில்  திருக்குறள்கருத்துக்களை  மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் கொண்டு செல்லும் பணியைச் செய்துவரும் முனைவர் அன்வர் பாட்சா அவர்கள், இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் எவரும்  திருக்குறளுக்கு உரையோ, தனி நூலோ  எழுதவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்துள்ளமை மகிழ்ச்சியைத் தருகின்றது!

இவரின்  "திருக்குறள் பணி"
தொடர வாழ்த்துக்கள்!

செம்மைத்துளியான்


 



1 Comments

  1. ஜஸாக்கல்லாக் கைர் மை டியர் ஹாஜியார்... நவீன தொழில்நுட்ப கட்டமைப்பின் அடிப்படையில் வேட்டையின் செம்மாந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்... அன்புடன் உங்கள் திருக்குறள் முரசு முனைவர் அன்வர்பாட்சா...

    ReplyDelete
Previous Post Next Post