Ticker

6/recent/ticker-posts

Ad Code



"அறிவு சார்ந்த சமூகத்துக்கு வாசிப்பின் முக்கித்துவம்".-(VIDEO AI RIZANA)

“அறிவு” எனும் சொல் அளவற்ற அகலமும் ஆளமும் கொண்டது. முழு உலகமும் படைக்கப்பட்ட நாளில் இருந்து உலகம் முற்றாக அழியும் காலம் வரைக்குமான இறந்தகால வாழ்வு, நிகழ்கால வாழ்வு, எதிர்கால வாழ்வு பற்றிய தெளிவை உலகத்தாருக்கு ஊட்டுவது அறிவு. அப்படிப்பட்ட அறிவு சார்ந்த சமூகம்தான் மனித வளம்.

 

அன்பு, அடக்கம், பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தன்னைப் போல் பிறரை நேசித்தல்… முதலான உலகம் தொலைத்துவிட்டுத் தேடித் தவிக்கும் மனித விழுமியப் பண்புகளை மீளப் பெற்றுக் கொள்ளும் சமூகம்தான் ”அறிவு சார்ந்த சமூகம்“. அதன் உருவாக்கத்திற்கு வாசிப்பு என்பது மிகமிக அவசியமே.

வாசிப்பவன் தான் வாசித்தறிந்த பல நூற்றாண்டு அனுபவங்களை ஒன்றோடொன்று உரசிப் பார்க்கின்றான். சிந்திக்கின்றான் தெளிவு காண்கின்றான்.  The Hundred எனும் நூலின் ஆசிரியர் உலகின் உன்னதமான நூறு மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அந்த நூறுபேரில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலலைஹிவஸல்லம் அவர்களை முதலிடத்தில் வைத்துப் பார்க்கின்றார். முழு உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட பெருமானாரை ஒரு வாசகன் 

தன் விரிவான வாசிப்பின் மூலம் முதன்மைப் படுத்தி நிரூபிக்கின்றான். இங்கு “சமய சகிப்புத் தன்மை” எனும் விழுமியம் விழித்துக் கொள்கின்றது.

அறிவு சார்ந்த மனித வளத்தைக் கட்டியெழுப்ப, அதனை உலகம் பெற்றுக்கொள்ள உடலியல், உளவியல், அறிவியல்… எனப் பல துறைகள் ஒன்று சேர வேண்டும். உடலியல் ரீதியில் எப்படிப்பட்ட பலசாலியாக மனிதன் விருத்தி பெற்றாலும், அவனது அறிவுக் கண்கள் திறக்காத வரையில் மனிம் நிறைந்த உலகை நாம் காண முடியாது. 

இன்று முழு உலகமும் தேடுவது அறிவு சார்ந்த சமூகத்தைத்தான். இதனை  உருவாக்கும் செயற்றிட்டத்தில் முன்னுரிமை பெறும் செயல் வாசிப்பு என்றால் மிகையில்லை. 

எளிமையானதும், இலகுவானதும், எல்லோராலும் முடியுமானதுமான ஒரு வழிமுறைதான் வாசிப்பாகும்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்னென்ப வாழும் உயிர்க்கு”

உயிர்வாழும் மனிதனின் இரு கண்களில் ஒன்றான எழுத்துக்கள் வாசிப்பின் மூல வளமாகும். இதனால்தான் குழந்தைகள் பிள்ளைகளாகும் போதே பாடசாலைக்கு அனுப்புகின்றோம். 

வரிவடிவங்களின் உதவியுடன் வாசித்து வாசித்துக் கற்று உலகினை உணர்ந்து கொள்கின்றான் பிள்ளை. ஒருவன் வாசித்து அறிந்து கொண்ட விடயங்கள் பல தலைமுறைகளுக்குப் பயன்படக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் அவை எழுத்துருவில் இருப்பதுதான். உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து வேதங்களும் விளக்கங்களும் எழுத்துருவாக்கப்பட்டுள்ளன. 

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் புதையுண்டு போன கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்களை எல்லாம் வாசித்து அறிதன் மூலம்தான் முன்னோர் வரலாறுகளை முடிந்தவரை அறிந்துகொள்கின்றோம். ”அறிவு சார்ந்த சமூகமாகவும்” அடையாளம் காணப்படுகின்றோம்.

“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என ஆசிரியரை கௌரவிப்பதிலிருந்தே “அறிவு சார்ந்த சமூகத்துக்கு” வாசிப்பின் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

பாடசாலைக் கல்வியின் பெரும் பகுதி வாசிப்புடன் தொடர்புடையதாக இருப்பதையும் அனைவரும் உணர வேண்டும். அறிவைத் தேடிக் கொள்ளத்தான் இன்று வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, அசையும் படம், கணினி… எனப் பல இலத்திரனியல் ஊடங்கள் புறப்பட்டிருக்கையில் ஏன் வெறும் வாசிப்பை நம்பி இருக்க வேண்டும் என பலர் கூறக் கேட்கின்றோம்.

 மேற்கூறப்பட்ட சாதனங்கள் அனைத்தும் எழுத்துக்களும் வாசிப்பும் இன்றி எதனை உணர்த்திவிட முடியாது என்பதனையும் இவர்கள் உணர வேண்டும்.

அறிவு சார்ந்த சமூகத்திற்கு பல வகையான மொழியறிவும் வாசிப்பும் ஒரு புறமிருக்க எமது அன்றாட சாதாரண வாழ்க்கைக்கே பல சித்திரங்கள், குறியீடுகள், நிறங்களை  வாசித்து அறிய வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். பொது இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளின் நிறங்களைக் கூட அவதானித்து களிவுப் பொருட்களை தரம்பிரித்து அகற்றுவதும் வாசிப்புத்தான். வீதிக் குறியீடுகளில் முன்னால் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை, பேருந்து நிறுத்துமிடம்,  பாதசாரிகள் கடவை, யானைகள் நடமாட்டம் உள்ள இடம்… இப்படிப் பல விடயங்களை சித்திரங்களாகவும், குறியீடுகளாகவும் வாசிக்கின்றோம். 

நாம் கடைகளில் வாங்கும் பொருட் கொள்கலன்களில் அவற்றின் விலை, உற்பற்தித் திகதி, காலாவதித் திகதி, நஞ்சுகள், உடையக் கூடியவை… இப்படி எத்தனை வாசிப்புக்கள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் எனும் பழமொழியானது வாசிப்புப் பழக்கம் இல்லாதவன் பாதிக் குருடன் எனப் பறைசாற்றுகின்றது. ஆயிரக் கணக்கான எழுத்தாளர்கள் கோடானகோடி விடயங்களை எழுதிக் குவித்துள்ளனர். அரசியல் முதல் அடுப்பங்கரை வரை, செல்வந்தர் முதல் சேரிவாசி வரை, பண்டிதர் முதல் பாமரர் வரை உள்ள சங்கதிகள் அனைத்துப் புதுமையும் பழைமையும் கலந்து எழுத்து வடிவில் எழுத்து வடிவில் மிளிர்கின்றன.

 இவற்யெல்லாம் ஆர்வத்தோடு வாசித்து அறிவதன் மூலம் நாம் அனைவரும் அறிவு பூர்வமான சமூகமாக மாறலாம். மனித விழுமியம் பிறழாத மனிதனாக வாழலாம். பல பொதுத் தகைமைப் பரீட்சைகளில் உயர் புள்ளிகளைப் பெற்று உள்ளீர்ப்புச் செய்யப்படுபவர்களில் பலர் நிரந்தர வாசிப்பாளர்களாக இருப்பதும் அவதானத்துக்குரியதாக இருக்கின்றது.

ஒரு பள்ளிச் சிறுவனின் வாசிப்பானது அவனது மொழி விருத்தியையும் பாட அடைவையும்  மேம்படுத்தும். ஒரு தாயின் வாசிப்பானது சிந்த பண்புகளைக் கொண்ட அறிவார்ந்த பிள்ளைகளை உருவாக்கும். ஒரு எழுத்தாளனது வாசிப்பு அவனது கற்பனா சக்தியையும் தேடலையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும். ஒரு ஆசிரியனின் வாசிப்பு அறிவு சார்ந்த, தொழிற்றகைமைகளைக் கொண்ட மேம்பாடுடைய மனித வளம் நிறைந்த உலகையே கட்டியெழுப்பும்.

அன்று முதல் இன்று வரையுள்ள எழுத்து வடிவங்கள் அனைத்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு கலங்கரை விளக்குகளாக வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. எந்த நாட்டில், எந்த இனத்தில், எந்த வேதத்தில், எந்த மொழியில் பிறந்தாலும் அனைத்து வேதங்களையும் வாசித்தறிந்து தனக்கும் பிறருக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொண்ட பலர் எம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். 

இனிமேலும் வாழத்தான் போகின்றார்கள்.

முழு உலகினதும் புவியியல், அரசியல், குடியியல், வானியல், கணிதம், விஞ்ஞானம், சட்டம், வைத்தியம், தொழிந்நுட்பங்கள், சூழல் அபிவிருத்தியென ஆய கலைகள் அறுபத்து நான்கும் வாசிப்பின் பயனாகப் பெறப்பட்டுள்ளன.

ஒரு நூலகத்தில் பல வகையான நூல்கள் இருக்கலாம். பத்திரிகைகளில் பல வகையான செய்திகள் வெளியிடப்படலாம். மனிதர்கள் எனும் புத்தி ஜீவிகள் தமக்குத் தேவையானவை, பொருத்தமானவற்றை இனங்கண்டு எடுப்பதை எடுத்துக் கொண்டு கழிப்பவற்றைக் கழித்து வாசித்தறியும் திறனைப் பெற வேண்டும். இதை விடுத்து இந்த நூல் சரியில்லை, அந்தப் பத்திரிகை பயனில்லை, அந்த நூலகப்பக்கமே செல்லக் கூடாது என ஒதுக்கி விடக் கூடாது.

“குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
எனும் வள்ளுவன் வழியில் தக்கவற்றை எடுக்க வேண்டும்.

வாசிப்பு என்பது வாழ் நாள்   செயற்பாடு. “பாடை ஏறினும் ஏடது கைவிடேல்“ என்பது அறிவு சார்ந்த சமூகத்திற்கான மகுட வாசம். அறிவுப் பசி கொண்டவர்களுக்கும் பல்துறைத் தேவை உடையோருக்கும் வாசிப்பு என்பது தெவிட்டாத தேனாமிர்தம். 

சிறுகதைகள், தொடர்கதைகள், கவிதைகள், காவியங்கள், நாவல்கள், ஈரடி, நாலடி, சித்திரம், துணுக்கு, செய்யுள், விடுகதை, குறுக்கெழுத்து, சுருக்கெழுத்து… என வாழ்வியலின் அனைத்து விடயங்களையும் விளக்கக் கூடிய விரிந்து செல்லும் பரந்த படைப்புலகம் எழுத்துலகம். அது அறிவு சார்ந்த வாசிப்பு உலகின் ஆணி வேர், முதுகெலும்பு. வாசிப்புலகில் சஞ்சரிப்பவன் சிந்திக்கின்றான், சீர்தூக்கிப் பார்க்கின்றான், ரசிக்கின்றான், சிரிக்கின்றான், நயக்கின்றான், அறிந்து கொள்கின்றான், அடுத்தவனுக்கு அறிவு ஊட்டுகின்றான், ஈற்றில் வாசிப்பவன் எழுதுகின்றான், எழுதுகின்றவனும் வாசிக்கின்றான். 

மொத்தத்தில் வாசிப்பு அறிவு சார்ந்த சமூகத்திற்கு அசைக்க முடியாத அத்திவாரமாகி மனிதனை மனம் நிறைந்தவனாக வாழச் செய்கின்றது.

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்அவையல்ல நல்ல மரம் – சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்.

திருமதி ஷஹ்பானா ஷரிபுத்தீன் BEd.

குறிப்பு;
("அறிவு சார்ந்த சமூகத்துக்கு வாசிப்பின் முக்கித்துவம்"கட்டுரையை அனுப்பியவர் 
எம்.எச்.எம்.நியாஸ் 
தலைவர்,மீடியா லிங்க்)  


 



Post a Comment

0 Comments