
துபாயின் முக்கியமான அடையாள சின்னமாக, புர்ஜ் கலிஃபா திகழ்கிறது. வானுயர்ந்த இந்த கட்டிடத்தில் ஒரு வீடாவது வாங்கிவிடமாட்டோமா என பல கோடீஸ்வரர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய பணக்காரர்களும் கூட புர்ஜ் கலிஃபாவில் உள்ள குடியிருப்புகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இங்கு மொத்தமுள்ள 900 குடியிருப்புகளில் 150 குடியிருப்புகள் இந்தியர்களுக்கு சொந்தமாக உள்ளது. மேலும் புர்ஜ் கலிஃபாவில் அதிக குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருப்பவரும் கூட இந்தியர்தான். அவர் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் மெக்கானிக்காக இருந்து இன்று பிரபல தொழிலதிபராக இருக்கும் ஜார்ஜ் நீரம்பரம்பில் பற்றியே இன்று பார்க்கப் போகிறோம்.
இந்தியாவின் எழில் மிகுந்த கேரள மாநிலத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஜார்ஜ். பள்ளிக்குப் போவதற்கு கூட அவரது வீட்டில் பணம் இல்லாத காரணத்தால் சிறு வயதிலேயே வேலைக்கு செல்ல தொடங்கினார். அவர் வயதையொத்த குழந்தைகள் எல்லாம் சந்தோஷமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, குடும்பத்தை காப்பாற்ற இவர் வேலைக்குச் சென்றார். 11 வயதிலேயே தனது தந்தைக்கு உதவியாக விவசாயத்தில் ஈடுபட்ட ஜார்ஜ், பணம், புகழ், வசதி அனைத்தும் கிடைப்பதற்கு முன்பு வரை மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். 1976-ம் ஆண்டு ஜார்ஜின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான வருடமாகும், அதள பாதாளத்திலிருந்த அவரது வாழ்க்கை வானளவிற்கு உயர காரணமாக இருந்தது இந்த வருடம்தான். அப்போதுதான் மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன.
ஷார்ஜாவிற்கு வந்த ஜார்ஜ், இங்கு நிலவும் கடுமையான பாலைவன வெயில் ஏசி தொழிக்கு உகந்ததாக இருக்கும் என யோசித்தார். தனது யோசனையை அப்படியே தொழிலாக மாற்றி, அதில் வெற்றியும் கண்டு, இன்று GEO குழும நிறுவனங்கள் என்ற பெயரில் தொழில் சாம்ராஜ்ஜியத்தையே வளர்தெடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், வளைகுடா நாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய தொழிலதிபராகவும் திகழ்கிறார். புர்ஜ் கலிஃபாவில் உள்ள விலை உயர்ந்த குடியிருப்புகளை வாங்குவதற்கு ஜார்ஜிற்கு முதலில் எப்படி ஆர்வம் வந்தது? இதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றுள்ளது.
உன்னால் எல்லாம் புர்ஜ் கலிஃபாவிற்குள் நுழையக் கூட முடியாது என அவரது உறவினர் ஒருவர் ஜார்ஜை கிண்டல் செய்துள்ளார். அதை முறியடிக்க நினைத்த ஜார்ஜ், முதலில் 2010-ம் ஆண்டு அக்கட்டிடத்தில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்தார். பின்னர் அங்கிருந்த 22 குடியிருப்புகளை வாங்குவதற்கு அதுவே தொடக்கமாக இருந்தது. தனது ஆடம்பரத்தை மற்றவர்கள் முன் காண்பிக்க அவர் என்றுமே கூச்சப்பட்டதில்லை. உதாரணமாக, அவரது வீட்டின் சுவர், தரை, மேற்கூரை போன்ற பகுதிகள் அனைத்தும் தங்க முலாமில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்னும் புர்ஜ் கலிஃபாவில் காலியாக இருக்கக் கூடிய இடங்களை சொந்தமாக வாங்குவதற்கு தயாராக இருக்கிறார் ஜார்ஜ்.
Source:news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments