
யூதர்களுக்கும், அரேபியர்களுக்குமான யுத்தம் இன்று நேற்று தொடங்கியதல்ல; இந்த நூற்றாண்டில் தோன்றியதுமல்ல; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்ட இது, ஒரு சகோதர யுத்தமாகக் கருதப்படுகின்றது.
வரலாற்றுத் தடயங்களை நோக்கினால், இதற்கு முடிவு இருக்கும் என்பதற்கான எவ்வித அறிகுறியும் தென்படுவதாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.
உலகிலுள்ள முக்கிய மூன்று பழைமையான மதங்களின் புனிதத்தலங்கள் உள்ள இடமாக ஆயிரம் வருடங்களுக்கு முன் கன்ஆன் என்று அழைக்கப்பட்டுவந்த, பாலஸ்தீனிலுள்ள ஜெருசலம் கருதப்படுகின்றது.

ஜெருசலம்
பிறந்து வாழ்ந்த மண்ணை இழந்து பல ஆண்டுகளானாலும், இருக்கின்ற இடத்தில் கிடைக்கின்ற வாழ்க்கையை வாழ்ந்துவரும் அப்பாவிகள்தான் இந்தப் பாலஸ்தீன மக்கள்.
தம்முடைய முன்னோர்கள் வாழ்ந்ததாகக் கருதும் நிலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து குடிகொண்ட யூதர்கள், அங்கு காலாகாலமாக வாழ்ந்துவரும் அப்பாவிப் பாலஸ்தீனியர்களை விரட்டியடிப்பதில் எவ்வளவு முனைப்பாக இருக்கின்றார்கள் என்பதை நூற்றாண்டு காலமாக அங்கு நடைபெற்றுவரும் குழப்பங்கள் சான்றாகும்.
உலகின் அதிபுத்திசாலிகளான யூதர்கள் இன்றைய முக்கிய உலக மதங்களான இஸ்லாம், கிறிஸ்துவம், யூதம் ஆகிய மதங்களுக்கு விதை போட்டவர்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களே இந்த மதங்களுக்கெல்லாம் பிதாமகனாவார்கள். அவர் பற்றிய வரலாற்றுக் கதைகள் யூதர்களின் புனித நூலான தோராவிலும், கிறிஸ்துவர்களின் பழைய ஏற்பாட்டிலும், இஸ்லாமியர்களின் புனித குர்ஆனிலும் உள்ளன.
நூஹ் (அலை) அவர்களுடைய காலத்திற்கு 1263 ஆண்டுக்குப் பின், அன்னாரின் குமாரர் ஷாமின் ஐந்தாம் தலைமுறையில் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஹவ்ரான் எனும் கிராமத்தில் பிறந்து, 175 வயது வரை வாழ்ந்தார்கள் என்று வரலாறு குறிப்பிடுகின்றது.
அவர்களது இளமைக்காலத்தில், “நீங்கள் மனித குலத்தலைவர்!” என்று அல்லாஹ் அறிவித்து விடவில்லை; மூன்று பெரும் சோதனைகளின் முடிவுக்குப் பின்னரே அவர்களுக்கு இறைதூதர் பட்டம் வழங்கப்பட்டது.
இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியான சாரா வழியே குழந்தை பிறக்கவில்லை; இன்னொரு திருமணம் செய்து கொண்டால் பிறக்குமென்று, இறைவன் இப்ராஹீம் (அலை) அவர்களின் கனவில் வந்து கூறியுள்ளான்.
எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஆகார் என்பவரை இரண்டாம் தாரமாக, அன்னார் திருமணம் செய்துகொண்டதும், இறைநாட்டப்படி அவரது 90வது வயதில் ஒரு மகன் பிறக்கிறார்; அவர்தான் இஸ்மாயில் (அலை) அவர்கள்.
இப்போது முதல் மனைவி சாரா, "எனக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கள். நான் என்ன பாவம் செய்தேன் என்று இறைவனிடம் இறைஞ்சவே; இறைவனும் மனமிறங்கி, சாராவுக்கும் பிள்ளை வரத்தினைக் கொடுத்து விடுகின்றான்.
சாராவுக்குப் பிறந்த பிள்ளை இஷாக் (அலை) ஆவார்கள். இவர் கிடைக்கும்போது, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு வயது 120 தாண்டி விட்டது.
எப்படியோ சாராவுக்கும் குழந்தை பிறந்ததால் இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பம் சிறப்பாக வாழ்ந்துவந்து கொன்டிருந்தபோது, இறை நாட்டப்படி ஆகார், தன்னுடைய மகன் இஸ்மாயிலைத் தூக்கிக் கொண்டு எகிப்து நோக்கி நடையைக் கட்டினார்; இடைவழியில் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த நிகழ்வுகளில் ஒன்றினால்தான், "ஸம்ஸம்" நீர் கிடைத்தது.
கால ஓட்டத்தின் பின் மகன் இஸ்மாயீல் வளர்ந்துவர, இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவின் இறையில்லத்தை, மகனின் துணையுடன் புனர்நிர்மாணித்து, அங்கிருந்து
பணியாற்றிட மகனைப் பணித்தார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்களின் இரண்டாவது மனைவியான ஆகாரின் மகனான இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி தோன்றல்களே 'அரேபியர்கள்' என்றும், முதல் மனைவியான சாராவின் மகனான இஷ்ஹாக்கின் வழி வந்தவர்கள் 'யூதர்கள்' எனவும் வரலாற்றில் சொல்லப் படுகிறது.

ஆக, இஸ்ரேலியர்களான யூதர்களும் பாலஸ்தீனர்களான அரேபியர்களும் அண்ணன் தம்பி உறவினர்கள்; அரேபியர்களைப் போலவே யூதர்களும் 'சுன்னத்' என்ற சடங்கை செய்யக் கூடியவர்கள்; அதனால்தான் இருசாராருக்கும் இடையே ஒருவிதமான பிணைப்பு உள்ளதாகக் கூறப்படுகின்றது! இருந்தபோதிலும் வரலாற்று ரீதியாக அவர்களிடத்தில் பகைமை உணர்வு ஏற்பட்டுவிட்டது.
ஆனால், யூதரான ஏசு கிறிஸ்துவைப் பின்பற்றி உருவான கிறிஸ்தவத்தில் 'சுன்னத்' இல்லை என்பதிலிருந்து, இப்ராஹீம் (அலை) அவர்களின் கட்டளையை கிறிஸ்தவர்கள் ஏற்பதில்லை என்பது தெரிகின்றது.
இஷ்ஹாக்(அலை)அவர்களின் வழி வந்தவர்கள் வாழ்ந்த பூமிதான் பண்டைய காலத்தில் கன்ஆன் தேசம் என்றும், இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுகின்றது! இது காஸா, மேற்குக்கரை மற்றும் ஜெருசேலத்தை உள்ளடக்கிய பெரும் பகுதியாகும்.
அரேபியர்கள் அல்-அக்ஸா என்ற புகழ்மிக்க மசூதியை ஜெரூசலத்தில் கட்டினார்கள்; ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் கிப்லாவாக இருந்த, இங்கிருந்துதான் இறுதித்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் விண்ணுகம் சென்றார்கள்.
இதனால் புனித மக்கா, மதீனாவையடுத்து இஸ்லாமியர்களின் மூன்றாவது போற்றத்தக்க வழிபாட்டு தலமாக புனித அல்-அக்ஸா கொள்ளப்படுகின்றது.

அல்-அக்ஸா மசூதி
இங்குதான் தமது சொலோமன் கோயில் இருந்ததாகவும், அதனை இடித்து மசூதி கட்டப் பட்டுள்ளதாகவும் யூதர்கள் குற்றம் சுமத்தி வருவதோடு, அல்-அக்ஸாவை இல்லாமற் செய்வதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர்.
இந்த அல்-அக்ஸா மசூதிப் பகுதியில் உள்ள உடைந்திருக்கும் மேற்கு சுவரில், பல நூற்றாண்டுகளாக யூதர்கள் தலையை மோதி, கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சொலோமன் (Solomon) என்று இஸ்ரேலர்கள் குறிப்பிடுவது, சுலைமான் (அலை) அவர்களைத்தான். இவர் இறையருள் பெற்ற புனிதர்; இவருக்கு விலங்குகளுடன் பேசுதல், ஜின்களைக் கட்டுப்படுத்துதல் முதலிய ஆற்றல்களை இறைவன் கொடுத்திருந்தான்.
இவர் தாவூது (அலை) அவர்களின் மகனாவார். தாவூது (அலை) அவர்களுக்குப் பின்னர் இவரே பாலஸ்தீனத்தை ஆண்டு வந்தார்.
இவருக்குப் பின்னர் சில பரம்பரைகளையடுத்து, பாலஸ்தீனம் ரோமானியர் வசம் சென்றது. அதன் பின்னர், உதுமானியப் பேரரசுகள் பாலஸ்தீனைக் கைப்பற்றி ஆண்டு வந்தன.
முதல் உலகப் போருக்குப் பின் இப்பகுதி உதுமானியப் பேரரசிடமிருந்து, பிரித்தானியர் வசமாகியது.
பிரித்தானியர் காலப்பகுதியை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்ட, தமக்கென ஒரு நாடின்றி உலக முழுவதிலும் சிதறி வாழ்ந்த யூதர்கள், 1904ம் ஆண்டில் 'தியோடோர் ஹெர்ட்ஸ்' என்ற ஆஸ்திரிய நாட்டு யூதர் ஒருவர் அடித்தளமிட்டுச் சென்ற கொள்கையின் அடிப்படையில் சியோனிச சித்தாந்தத்தைச் செயல் படுத்தலாயினர்.

தனித்தாயகம் அமைக்க வேண்டுமென்ற அந்த சியோனிச சித்தாந்தமே பாலஸ்தீனப் பகுதிக்குள் 'இஸ்ரேல்' என்கின்ற நாடு உருவாக வழி வகுத்தது.
1945ல் இஸ்ரேல் உருவாகும்போது, பாலஸ்தீனில் மொத்தமாக 17,64,000 பேர்கள் இருந்தனர். இதில் முஸ்லிம்கள் 10,61,000 பேர், கிறிஸ்தவர்களும், ஏனையோருமாக 15,000 பேர்; யூதர்கள் வெறும் 5,500 பேர்களே வாழ்ந்துவந்த நிலையில், அவர்களுக்கான தனிநாட்டை ஐ.நா. மன்றத்தின் முன்னோடியாக உருவாக்கப்பட்ட, "சர்வதேச நாடுகள் லீக்" என்ற அமைப்பின் சிபாரிசில், பிரித்தானியா அங்கீகரித்தது புதுமையான ஒரு விடயமாகும். அதைவிடவும் புதுமையானதும், ஆச்சரியமானதுமான விடயம், 10,61,000 பேர்களுக்கான ஒரு நாட்டை ஐ.நா. வோ, பிரித்தானியாவோ கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதே.
உலக நாடுகளையும், நாட்டுமக்களையும், ஐக்கியப்படுத்தவென உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம், அன்றுமுதல் இன்றுவரை நாடுகளைப் பிரித்து வைப்பதன் மூலம், பகைமைகளை வளரச் செய்து, வேடிக்கை பார்ப்பதையும், வல்லரசுகளை வாழ வைப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளமை வருந்துதற்குரிய விடயமாகும்.
எது எப்படியோ குறைந்தளவு மக்கள் தொகை கொண்ட இஸ்ரேலர்கள் தமது இனத்தின் தொகையை அதிகரித்துக் கொள்வான் வேண்டி,
உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள் அழைத்து வந்து பாலஸ்தீனப் பகுதியில் குடியேற்றினர்.
இதன்படி யூத செல்வந்தர்கள், ஆரம்ப காலத்தில் பாலஸ்தீனத்தில் நிலங்களை விலை கொடுத்து வாங்கியபோதிலும், காலம்செல்ல அவர்கள் கொஞ்சம்கொஞ்சமாக பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து, யூதர்களின் குடியேற்றங்களை விரிவுபடுத்திக் கொண்டனர். இதுவே அங்கு ஆண்டாண்டு காலமாக முறுகல்நிலை ஏற்படக் காரணமாக இருந்தது.
யூதர்களின் இரண்டாயிரம் ஆண்டுக் கனவு,
1948 மே மாதம் 14ம் திகதி பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து பாலஸ்தீனம் விடுவிக்கப் பட்டபோது நனவானது, அவர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்கிக் கொண்டதும், ஐ.நா. மன்றத்தின் முன்னோடியாக உருவாக்கப்பட்ட, "சர்வதேச நாடுகள் லீக்" என்ற அமைப்பும், பிரித்தானியாவும் அதற்கு 'இஸ்ரேல்' எனப் பெயர் வைத்தன.
அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் என்பவர் இஸ்ரேலின் சுதந்திரத்தைப் பிரகடனம் செய்து, முதல் பிரதமரானார்.
இது மாதிரியே கிட்டதட்ட 4,500 சதுர மைல் பரப்பில் பாலஸ்தீன அரேபியர்களின் பகுதியை பாலஸ்தீன நாடாக மட்டுமே விட்டுச்சென்ற சர்வதேச நாடுகள் லீக்கோ, பிரித்தானியாவோ அல்லது ஏனைய உலக நாடுகளோ அதனை இதுவரை அங்கீகரிக்காததே இன்றுவரை நடைபெற்றுவரும் சகல குழப்பங்களுக்கும் முக்கிய காரணமாகும்.
இஸ்ரேல் தோன்றிய மறுநாளே தங்களின் இரண்டாயிரம் ஆண்டுக் கனவான தனிநாட்டை அடைந்த சந்தோசத்திலிருந்த வேளையில், இஸ்ரேல் என்கிற நாட்டையும் ஏற்க மறுத்த பாலஸ்தீனர்கள், சகோதர அரபு நாடுகளின் உதவியை நாடியதைக் கேள்வியுற்ற இஸ்ரேல் தன்னை யுத்தத்துக்குத் தயாராக்கிக் கொண்டது.
அந்த நேரத்தில் பாலஸ்தீனத்தில் சொல்லிக் கொள்ளும் படியாக தலைவர்கள் எவரும் இருக்கவில்லை. அதனால், இஸ்ரேலுடம் மல்லுக்கட்ட பாலஸ்தீனியர்கள், அரபு நாடுகளைத்தான் அழைத்தார்கள்! எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகளுடன் இஸ்ரேல் படை மோதியது.
அரபு நாடுகளுக்கு பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்கின்ற ஆசையைவிட, இஸ்ரேல் என்ற நாடு இருக்கக் கூடாது என்பதுதான் இலக்காக இருந்தது.
இஸ்ரேல் நோக்கி வந்த அரபுப் படைகளைக் கண்ட பிரதமர் குரியன், தயார் நிலையிலிருந்த தனது படைகளைப் பயன்படுத்திக்
கொண்டவராக அரபுப் படைகளை பார்த்து தொடை தட்டி நின்றார்!
போரின் துவக்கத்தில் சில மாதம் தன் நாட்டை தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்திய இஸ்ரேல், பின் மேலைத்தேய கூட்டுப்படைகளின் உதவியுடன், எதிர்த்தாக்குதலைத் தொடங்கியது.
அன்றைய அரபு நாடுகளில் எகிப்து மட்டுமே சண்டியன்; அவர்களிடம் மட்டுமே பெரிய ராணுவம் இருந்தது. மற்ற நாட்டுப் படைகள் வெறுமனே எண்ணிக்கைக்கு மட்டுமே வந்தன.
போர் தொடங்கி ஒரு வருடம் முடிந்தது. ஆனாலும் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. இப்போது பிறந்த நாடுதானே இஸ்ரேல், அதனால் பிரித்து மேய்ந்துவிடலாம் என்று நினைத்த அரபு நாட்டுப் படைகளுக்கு நாக்குத் தள்ளிவிட்டதால், ஆளைவிட்டால் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டார்கள்.
அதுவரைக்கும் யுத்தத்தை வேடிக்கை பார்த்த சர்வதேச நாடுகள் லீக், வரிந்து கட்டிக்கொண்டு, தலையிட ஆரம்பித்தது.
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் பாலஸ்தீனப் பகுதிகளில் எந்தெந்த நாடுகளின் படைகள் எங்கெங்கு நிலை கொண்டிருந்தனவோ அந்த இடங்கள், அந்தந்த நாட்டிற்கே சொந்தம் என சர்வதேச நாடுகள் லீக் அறிவித்தது.
முக்கியமாக மேற்கு ஜெருசலம்; இதுதான் அரேபியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றும் யூதர்களுக்குமான புண்ணிய பூமி! இங்குதான் அல் அக்ஸா மசூதி இருக்கிறது. இதுதான் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே முடிவில்லாத சகோதர யுத்தம் நடைபெறக் காரணமாக இருந்து வருகிறது.
பண்டைய கன்ஆன் தேசத்தில் உருவான சகோதரத்துவ பங்காளிச் சண்டை பலநூறு ஆண்டுகள் கடந்தும், பல போர்கள் நடந்தும் இன்று வரை முடியாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு யார் காரணம்?.

இந்தப்போர் எப்போது முடியும் என்பதை வல்ல இறைவனால் மட்டுமே நிர்ணயிக்க முடியும், அதுவரைக்கும் இன்னொரு பதிவில் சாந்திக்கும் வரைக்கும் பாலஸ்தீன மண்ணின் அமைதிக்காகப் பிரார்த்திப்போம்!.
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments