பழக்கங்களை மாற்றிக் கொள்ள மூன்று வழிகள்!

பழக்கங்களை மாற்றிக் கொள்ள மூன்று வழிகள்!

தன் வாழ்நாளில் தனக்கு ஏற்பட்ட ஒரு பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சிலர் எண்ணுவார்கள். பொதுவாக அது அவரின் கெட்டப்பழக்கமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, மது அருந்துவது, புகையிலை எடுத்துக்கொள்வது போன்றவை. இது அவர்களின் வாழக்கையையே கேள்விக் குறியாக்கும். அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகப் பெரிய தொந்தரவாக இருக்கும். இதுபோன்ற கெட்டப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள சிலர் எண்ணுவார்கள்.

அதேபோல், அன்றாடம் ஒரே பழக்கத்தில் ஈடுபடுவது ஒரு கட்டத்தில் ஒருவிதமான சலிப்பை ஏற்படுத்தி, ‘ஐயோ! தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கை. இதிலிருந்து வெளியேறினால் போதும்’ என்பதுபோல் ஆகிவிடும். அதாவது எப்போதும் இருக்கும் வாழ்க்கையை விட்டு வெளியே வருவதற்கும் பழக்கங்களை மாற்றிக்கொள்வது உதவும்.

அன்றாடப் பழக்கத்திலிருந்து வெளியே வர மூன்று கட்டங்களைக் குறிப்பிடுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளர் சார்லஸ் டுஹிக்.

1. குறிப்பு

2. வழக்கம்

3. பலன்

குறிப்பு:

முதலில் நாம் இதுவரை என்னென்ன பழக்கங்களை வைத்திருந்தோம். அதில் எதெல்லாம் தேவையானது, மாற்றிக்கொள்ளக் கூடியது என்பதைக் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேபோல் அந்த பழக்கங்களில் எது நல்லவை? எது கெட்டவை? என்பதைப் பிரித்து வைத்துக்கொள்ளவும்.

உதாரணத்திற்கு, சிலர் தினமும் ஐந்து முறையாவது தேநீர் அருந்துவர். அதை நாம் குறைக்க வேண்டும் என்ற குறிப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாற்ற வேண்டிய பழக்கங்களை முதலில் கண்டுபிடித்து, அதை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதனைக் குறிப்பில் பதிவிட்டுக்கொள்ளவும்.

வழக்கம்:

எழுதி வைத்த அந்த குறிப்புகளை நாம் நடைமுறைப் படுத்துவதுதான் வழக்கம். தினமும் தவறாமல் அந்த குறிப்புகளைப் பார்த்து, பின்பற்றி அதனை வழக்கப் படுத்திக்கொள்ள வேண்டும்.

முதல் நாள் அது மிக மிகக் கடினமாகவே இருக்கும். உதாரணத்திற்கு, குறிப்பிட்ட நேரம் வந்தால் இப்போது காபி குடிக்க வேண்டுமே என்ற ஞாபகம் வந்துவிடும். பிறகு குடிக்கவில்லை என்றால் பித்துப் பிடிப்பதுபோல் ஆகிவிடும்.  அந்த சமயங்களில் நாம் வேறு ஏதாவது வேலையில் ஈடுபட வேண்டும். நாட்கள் செல்ல செல்ல காபி குடிக்காமலே இருப்பதே பழக்கமாகி விடும்.

பலன்:

வழக்கத்திற்குப் பின் பலன்தான். ஆனால், இந்த வழக்கத்திற்கும் பலனிற்கும் இடையே அதிக காலம் எடுக்கலாம். தினமும் மாலை நேரத்தில் பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொண்டால் சருமம் பளபளப்பாக ஆகும் என்று குறிப்பு எழுதியிருந்தால், சரியான நேரத்தில் தினமும் அதை எடுத்துக்கொண்ட பிறகு அதனுடைய பலன் தெரிய சில நாட்கள் ஆகவே செய்யும்.

இதுபோல்தான் ஒரு வழக்கத்தை நாம் தொடர்ந்து செய்தால் அதனுடைய பலன் தக்க சமயத்தில் கிடைக்கும். ஒருவேளை அதை பாதியில் விட்டுவிட்டால் அந்த பலன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மிக மிகத் தவறு.

பழக்கங்களை மாற்றிகொள்வதை பற்றி ஓப்ரா வின்ஃபிரே கூறியதாவது, “நம் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்றிக்கொள்ளாமல், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்ப்பார்க்க முடியாது.”

ஆம்! எப்போதும் தொடர்ந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள் ஒரு இடைவெளி விட வேண்டும். அந்த இடைவெளியில் சுற்றுலா செல்வதோ அல்லது குடும்பத்துடன் வேறு இடங்களுக்கோ செல்ல வேண்டும். அப்படி செய்வதால் நம் வழக்கத்திலிருந்து வெளிவந்து மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும்.

அதேபோல் நம் பழக்கங்களை நேரத்திற்கு ஏற்றார்போல் மாற்றுவதால் சில நன்மைகளும் உண்டு. சூழ்நிலை, காலம், இலக்கு, பொறுப்பு ஆகியவற்றிருக்கு ஏற்றவாரு பழக்கங்கள் மாறும். இலக்கு பெரிதாக இருந்தால் பழக்கங்களை பின்பற்றுவதும் சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த கடினமான பழக்கங்களைப் பின்பற்றி இலக்கை அடைந்த பிறகு மிகவும் ருசிகரமாக இருக்கும்.

kalkionline


 



Post a Comment

Previous Post Next Post