மன்னிச்சுடுங்க உண்மையா அந்த அர்த்தத்தில் செய்யல.. யுவி, ரெய்னா சார்பிலும் மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்

மன்னிச்சுடுங்க உண்மையா அந்த அர்த்தத்தில் செய்யல.. யுவி, ரெய்னா சார்பிலும் மன்னிப்பு கேட்ட ஹர்பஜன்


இங்கிலாந்தில் நடைபெற்ற 2024 உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ்  டி20 கிரிக்கெட் தொடரில் யுவராஜ் சிங் தலைமையிலான  இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையில் வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில்  இந்தியா சாம்பியன்ஸ் தோற்கடித்தது. அதனால் 2007  டி20 உலகக் கோப்பை போல இம்முறை யுவராஜ் தலைமையிலான  இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து அசத்தியது. 

அந்த நிலையில் ஃபைனல் முடிந்ததும் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அந்த வெற்றியை வித்தியாசமாக கொண்டாடினார். குறிப்பாக அறைக் கதவை திறந்து கொண்டு ஒவ்வொருவராக சப்பாணி போல் நொண்டி நொண்டி நடந்து வருவதைப் போன்ற ஜாலியான வீடியோவை எடுத்து அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். ஆனால் அந்த வீடியோ தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் மாற்றுத்திறனாளிகளை கிண்டலடித்து ஏளனம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இந்தியாவின் மாற்றுத்திறனாளி பேட்மிட்டன் வீராங்கனை மானசி ஜோசி அந்த 3 பேரையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து தேசிய மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மீது காவல்துறையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் யார் மனதையும் தாங்கள் புண்படுத்துவதற்காக அப்படி செய்யவில்லை என ஹர்பஜன் சிங் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் ஓய்வு பெற்ற தாங்கள் 13 நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் அசதியை உணர்ந்ததாக ஹர்பஜன் கூறியுள்ளார். அதை ஜாலியாக வெளிப்படுத்தும் வகையிலேயே அப்படி வீடியோ எடுத்து வெளியிட்டதாக ஹர்பஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால் அது யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பையை வென்ற பின் நாங்கள் வெளியிட்ட வீடியோ மீது புகார் செய்யும் நபர்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை”

“நாங்கள் ஒவ்வொரு தனி நபர்களையும் பிரிவினரையும் மதிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து 15 நாட்கள் கிரிக்கெட்டில் விளையாடினோம். அதனால் எங்களுடைய சோர்வான உடலை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த வீடியோவை வெளியிட்டோம். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதை செய்யவில்லை. அதையும் தாண்டி நாங்கள் தவறு செய்ததாக உணர்ந்தால் அதற்காக அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். தயவு செய்து இதை இங்கேயே நிறுத்தி முன்னோக்கி செல்லுங்கள். மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக இருங்கள். அனைவரிடமும் அன்பு” என்று கூறியுள்ளார்.

crictamil



 



Post a Comment

Previous Post Next Post