போர் நிறுத்தம்,மேலும் நீடிக்கப்படுமா?

போர் நிறுத்தம்,மேலும் நீடிக்கப்படுமா?

மத்திய கிழக்கு யுத்தமும் பாலஸ்தீனின் எதிர்காலமும்!(16)

சுமார் 23 லட்சம் மக்கள் வசிக்கும் காஸா பகுதி 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் கொண்டது. இது மத்தியதரைக் கடல், இஸ்ரேல் மற்றும் எகிப்தால் சூழப்பட்டுள்ளது.

1967 போரின்போது  காஸாவை இஸ்ரேல்    கைப்பற்றியது. பின்னர்,  2005ல்  இஸ்ரேல் அங்கிருந்த தனது படைகளையும், குடியேறியிருந்த சுமார் 7,000 தனது மக்களையும் திரும்ப அழைத்துக் கொண்டது.

அதன் பிறகு, அப்போதைய ஆளும் பாலத்தீன ஆணையகப் படைகளை வெளியேற்றிய ஹமாஸ் அமைப்பானது, காஸாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஆளத் தொடங்கியது.

அப்போதிருந்து, இஸ்ரேல் மற்றும் எகிப்து தமது பாதுகாப்புக் காரணங்களுக்காக, காஸாவிற்கு உள்ளேயும், வெளியேயும் பொருட்கள் மற்றும் மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்தி வந்ததுடன் காஸா மக்களுக்கு பல்வேறு கொடுமைகளையும்  செய்து வந்தது.

இஸ்ரேல்  இராணுவத்தால் தமது மக்கள் படும் கொடுமைகள் தாங்காமல், காஸாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ், 2023 அக்டோபர் 7ம் திகதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாது, இஸ்ரேலுக்குள் ஊடுருவி, 240 இஸ்ரேலியர்களையும், அங்கிருந்த வெளிநாட்டவர்களயும்  பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றது; இதனால் உலக நாடுகள் ஒருசேர அதிர்ந்தன.

இதனையடுத்து ஹமாஸின் காஸா நிலப்பகுதி மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது. காஸாவிலிருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டுமெனவும் இஸ்ரேல்  கட்டளை பிறப்பித்தது.

இஸ்ரேல் வான்படைகள் தொடர்ந்து குண்டுகள் வீசி காஸாவின் பெரும்பகுதிகளை  தரைமட்டமாக்கி, மின்சாரம், தண்ணீர், எரிவாயு, உணவுப் பொருட்களின் விநியோகத்தையும் நிறுத்தியது.

குண்டுத் தாக்கத்திலிருந்து தப்பிக்க பலர் மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்தபோது,மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் குண்டு வீசியது.

இப்போது, இஸ்ரேல் இராணுவத்திற்கும், ஹமாஸ் போராளிகளுக்குமிடையில் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் எச்சரிக்கையைக் கூடப் புறக்கணித்த இஸ்ரேல், தான்தோன்றித் தனமாக செயற்பட்டு வருவதாக முழு சர்வதேசமும் குற்றம்சாட்டிவரும் நிலையில்,சுமார் ஒன்றரை மாதத் தாக்குதல்களுக்கு பிறகு,ஹமாஸ் அமைப்பினரிடமுள்ள தனது பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கை ஒரே இலக்காகக் கொண்டு நான்கு நாள் போர் நிறுத்தத்தத்தை, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தில்  நவம்பர், 24ம் திகதி அறிவித்தது. இன்று ஏழாவது நாளாகியும், போர் நிறுத்தம் அமுலிலிருந்து வருகின்றமை மகிழ்சி தரும் நிகழ்வாகும்!

இதுவரை 19 வெளிநாட்டினர் உட்பட 50 இஸ்ரேலியர்களுடன், 69 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும்,  இஸ்ரேலிய சிறைகளிலிருந்த 150 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இராணுவமும் விடுதலை செய்துள்ளன.

ஒப்பந்தத்தின் படி, இரு தரப்பும் பணயக்கைதிகளை   செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக  விடுவித்து வருகின்றன. 

காஸாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அவ்வப்போது வெளிவந்து விடுகிற நிலையில், இஸ்ரேலுக்குள் என்னதான் நடக்கின்றது என்பதை சர்வதேசம் அறிந்துகொள்ள முடியாத நிலையில், அங்கு ஊடகத்துறைக்கான கட்டுப்பாடு மிகவும் இறுக்கமாக நிலவி வருகின்றது. அதனையும் மீறி, சில செய்திகள் கசிந்த வண்ணமுமாக இருக்கின்றன. 

அமெரிக்க சுதந்திர ஊடகங்களின்படி, டெல் அவிவ் உட்பட பல நகரங்களில் வாழ்வோர் நாள் முழுவதும் வீட்டுக்கும், பங்கருக்குமாக மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருப்பதைப்போல் அந்நாட்டு மக்களுக்குப் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

காஸாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பணயக்கைதிகளை கத்தார் மத்தியஸ்தத்தில், மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டபோது, தாயும் மகளும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதனை இஸ்ரேலிய ஊடகங்கள் உறுதி செய்த பின்னர், யொச்செவ்ட் லிவ்சிட்ஸ் என்ற வயோதி பெண்ணையும், நுரிட் கூப்பர் என்ற 79 வயது பெண்மணியையும் ஹமாஸ் விடுதலை செய்யும்போது, எவ்வித பதற்றமுமின்றிக் காணப்படும் இரு பெண்களுக்கும் ஹமாஸ் அமைப்பினர்  குளிர்பானம் வழங்குவதை ஹமாஸ் வெளியிட்ட வீடியோக்களில் காணமுடிந்ததோடு, விடுதலை செய்யப்பட்ட 85 வயது பெண்மணி, தான் விடுதலையாகும் வேளை ஹமாஸ் போராளியுடன் விருந்தாளிகளின் பிரியாவிடை போன்று சகஜமான முறையில்  கைகுலுக்குவதைக் காண்பிக்கும் வீடியோக்கள் பல வெளியாயின. அந்த பெண்மணிகள்  சமாதானத்தை வலியுறுத்துவதையும், செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைப்பதற்காக  ஹமாஸ் உறுப்பினர்கள் அவர்களை அழைத்து செல்வதையும் அதன் பின்னர் அவர்கள்எகிப்தின் ரபா  எல்லையூடாக விடுதலை செய்யப்பட்ட பின்னர் அம்பியூலன்ஸ்களுக்குள் ஏற்றப்படுவதையும் எகிப்திய தொலைக்காட்சிகள் காண்பித்தன.

ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட பிணைக்கைதிகளை  விடுதலை செய்யும் காணொளிகளைப் பார்க்கும்போது,  ஹமாஸ் போராளிகள் நடந்து கொள்ளும் முறை சர்வதேசத்தை வியக்க வைத்துள்ளது! ஒரு விருந்தாளியை அனுப்புவது போன்று பணையக்கைதிகள் கையசைத்தும், நெற்றியில் முத்தமிட்டும் விடைபெறும் காட்சிகள்  ஹமாஸ் அவர்களை நல்ல முறையில் நடத்தியிருக்கின்றது என்ற நிஜத்தை சர்வதேசத்துக்கும் வெளிக்காட்டியுள்ளது.

விடுவிக்கப்பட்ட  பிணைக்கைதிகளுக்கு மருத்துவசோதனை தேவையில்லை என்ற நிராகரிப்பு ஒன்றே, ஹமாஸ் பணயக்கைதிகளை நல்ல முறையில் நடத்தியுள்ளமைக்கான இன்னுமொரு சான்றாகு.

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்க பட்ட ஒரு இஸ்ரேலியப் பணையக்கைதி, ஹமாஸ் வீரரின் தலையை முத்தமிட்டு விடைபெறும் உருக்கமான காட்சி இப்போது இணையத்தளங்களில் வலம் வருகின்றன.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமிடையிலான போர் நிறுத்தம் நீடிக்கப்படலாம் என்ற நம்பிக்கை உள்ள நிலையில், புதிய ஒப்பந்தம் குறித்து கத்தாரில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post