புயல் இல்லை... சூறாவளி இல்லை... நெல்லை, தூத்துக்குடியை அலற வைத்த மழை ஏன் தெரியுமா?

புயல் இல்லை... சூறாவளி இல்லை... நெல்லை, தூத்துக்குடியை அலற வைத்த மழை ஏன் தெரியுமா?


1992 ஆம் ஆண்டு பெருவெள்ளம் நெல்லையை புரட்டிப்போட்ட நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகு அதைவிட பன்மடங்கு அதிகமாக, தற்போது நெல்லை மாவட்டத்தையே மிரள வைத்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் கதி கலங்கியுள்ளனர்.

புயல் இல்லை, சூறாவளிக் காற்று இல்லை, காற்றழுத்த தாழ்வு நிலை கூட இல்லை… ஆனாலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியுள்ளது அதி கனமழை. இதற்கு காரணம் காலநிலை மாற்றம்தான். இப்படியான திடீர் மழை இனி அடிக்கடி வரலாம் என வானிலை ஆய்வு மைய இயக்குநரே தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் 2K கிட்ஸ்கள் பார்த்திராத இந்த மழையால் திரும்பும் திசையெங்கும் தண்ணீர்… தண்ணீர்… தண்ணீர்…நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து அதிக அளவு திறக்கப்பட்ட நீருடன், காட்டாற்று வெள்ளமும் சேர்ந்ததால், தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

குறிப்பாக நெல்லையையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் சீறிப் பாய்கிறது.

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையையும் ஆக்கிரமித்த தாமிரபரணி ஆற்று நீர் பாய்ந்தது. ஆட்சியர் வளாகத்திற்குள் பாய்ந்த நீர், அலுவலக வாயிலை எட்டிப்பார்த்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

ஆட்சியர் அலுவலக வளாகம் அருகேயுள்ள கொக்கிரகுளம் பகுதி முழுவதும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. பல வீடுகளின் தரைத்தளம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. ஏராளமான வீடுகளில் ஆள் உயரத்திற்கு மேல் தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். கருப்பந்துறையில் வீடுகளின் கதவுகளே தெரியாத அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் 7 முதல் 10 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது. அங்குள்ள கடைகளுக்குள்ளும் நீர் புகுந்தது. பேருந்து நிலைய வளாகத்திற்குள் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதேபோல, நெல்லை ரயில் நிலையத்தில், நடைமேடை வரை நீர்தேங்கியது. ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஆறுபோல் தண்ணீர் பாய்ந்தோடியது. இதனால் நெல்லை ரயில் நிலையத்தில் சேவைகள் முற்றிலும் முடங்கின. நெல்லை வழியாக செல்லும் பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

மலைப் பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட இடங்களில் பெய்த அதிகனமழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்ட நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன. மலைப் பகுதிகளில் விண்ணைப் பிளந்தது போல கொட்டிய மழையால் மணிமுத்தாறு அருவியே தெரியாத அளவுக்கு தண்ணீர் சீறிப்பாய்ந்தது.

news18



 



Post a Comment

Previous Post Next Post