(நபி வழியில் தொழுகை)
அறிமுகம்:
இஸ்லாம் அறிமுகப்படுத்திய வணக்கங்களுள் தொழுகை தலையாயது. ஏனைய வணக்கங்கள் பூமியில் வைத்து கடமையாக்கப்பட்டிருக்க தொழுகையானது நபிகளாரின் மிஃராஜ் பயணத்தின் போது வானுலகில் வைத்து கடமையாக்கப்பட்டதே தொழுகையின் முக்கியத்துவத்தையும் மகிமையையும் உணர்த்தப் போதுமானது.
ஒரு முஸ்லிமின் எந்த அமலாயினும் அது அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் இரண்டு முன் நிபந்தனைகள் அவசியம் என அறிஞர்கள் குறிப்பிடுவர் :
1-‘அல்லாஹ்வுக்காக” என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுதல் (இஹ்லாஸ்)
2- நபிகளார் காட்டித்தந்த முறைப்பிரகாரம் நிறைவேற்றுதல் (இத்திபாஉஸ் ஸுன்னா)
இவ்விரண்டு நிபந்தனைகளில் எது விடுபட்டாலும் நாம் நிறைவேற்றும் எந்த அமலும் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தொழுகையை அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு நிறைவேற்றுவது எத்தனை முக்கியத்துவமோ அதற்காக நாம் எவ்வளவு கரிசனை செலுத்துகிறோமோ அதே அளவு நபியவர்கள் தொழுத முறை பற்றி அறிந்து அதன்படி தொழுவதற்கு கரிசனை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுமையில் நமது தொழுகைகள் நிராகரிக்கப்பட்டுவிடும்.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம் யாதெனில் இஹ்லாஸ் எனப்படும் தூய எண்ணத்திற்கு சமூகத்தில் வழங்கப்படும் முக்கியத்துவம் நபிவழியில் தொழுவதற்கோ அது பற்றி அறிவதற்கோ வழங்கப்படுவதில்லை.
தொழும் முறையை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே நபியவர்கள் ஸஹாபாக்கள் பார்த்திருக்க புனித மஸ்ஜிதுந் நபவியின் மிம்பரில் ஏறி நின்று தொழுதுகாட்டிவிட்டு
‘நான் இவ்வாறு செய்ததற்கு காரணம் என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதும் தொழும் முறையை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுமாகும்” என்று கூறினார்கள் (புஹாரி முஸ்லிம்).
மற்றொரு தடவை நபியவர்கள் கூறினார்கள் : ‘நான் தொழுவதை நீங்கள் எவ்வாறு கண்டீர்களோ அவ்வாறே தொழுதுகொள்ளுங்கள்” (புஹாரி).
நபிகளார் தொழுத முறையை மிக நுணுக்கமாக அவதானித்த ஸஹாபாக்கள் எந்தவொன்றையும் மறைக்காமல் அவர்கள் தொழுத முறை பற்றி நூற்றுக் கணக்கான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். அவை அனைத்தும் ஹதீஸ் நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருந்தும் முஸ்லிம்களில் பலர் நபி தொழுத முறை பற்றி அறியாமல் பரம்பரரை பரம்பரையாக தமது பெற்றோரும் மற்றோரும் தொழுது வந்ததையே ஆதாரமாக கொண்டு செயற்பட்டு வருகிறார்கள்.ஈருலக வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபிகளாரை பின்பற்றி தொழுவது பற்றி கரிசனையற்றிருக்கிறார்கள்.
இந்நிலை மறுமையில் கைசேதத்தையே கொண்டு வரும். எனவேதான் நபிகளார் தொழுத முறை பற்றி ஹதீஸ் நூல்களில் கூறப்பட்டுள்ள ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை ஒன்று திரட்டி இத்தொடர் எழுதப்படுகிறது. இதற்காக முற்கால மற்றும் தற்கால இமாம்கள், அறிஞர்கள் முக்கியமாக இமாம் நவவி (ரஹ்), ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்),ஷெய்க் அல்பானி (ரஹ்), ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்), ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்), ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான்,ஷெய்க் ஆதில் பின் யூஸுப் அல் அஸ்ஸாஸி போன்றோரின் நூல்கள் உசாத்துணை நூல்களாக கொள்ளப்பட்டுள்ளன.
மிக முக்கியமாக குறிப்பிடுவதாயின் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஹதீஸ்துறை மேதை இமாம் நாஸிருத்தீன் அல்பானி (றஹ்) அவர்கள் தொகுத்து வெளியிட்ட ‘ஸிபது ஸலாதிந் நபி’ என்ற நூல் தற்காலத்தில் சர்வதேசம் முழுவதும் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய நூல்.நான்கு பெரும் தொகுதிகளாக வெளியிடப்பட்ட அந்நூல் நபிகளாரின் தொழுகை முறையை ஆரம்ப தக்பீர் தொடக்கம் ஸலாம் கொடுக்கும் வரையான அனைத்து நடைமுறைகளும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஸஹாபாக்கள் மற்றும் இமாம்களின் கூற்றுகளின் ஒளியில் பகுப்பாய்வு செய்யப்பட்டு மிக விரிவாக எழுதப்பட்ட மிக அருமையான நூல். பின்னர் அது இமாம் அவர்களினாலேயே சுருக்கி சிறு நூலாகவும் வெளியிடப்பட்டது. அந்த நூலின் ஒழுங்கைப் பேணியே எனது இந்த நூலை நான் தொகுத்துள்ளேன். அதே நேரம் இந்நூலின் பல இடங்களில் வேறு பல அறிஞர்களின் கருத்துகள்,ஆய்வுகளையும் ஒப்புநோக்கி ஆதார வலுக்கூடிய கருத்தாக தோன்றிய கருத்துகளை இதில் இணைத்துள்ளேன். தமது ஆய்வுகள் மூலம் இச்சமூகத்துக்கு மாபெரும் பணிபுரிந்த அத்தனை இமாம்கள்,அறிஞர்களுக்கும் வல்ல அல்லாஹ் தனது பேரருளை மறுமைநாள் வரை தருவானாக.
இத் தொடர் மூலம்; நமது தொழுகையை நபிவழிக்கேற்ப திருத்தியமைக்க முடியும். ‘நான் நபியை பின்பற்றுகிறேன்”என்ற அளவற்ற மகிழ்ச்சியையும் திருப்தியையும் அது நமக்கு தரும்.
(தொடரும்)
ARM.ரிஸ்வான் (ஷர்க்கி)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments