கன்னத்தில் அறையும் சிகிச்சை.. உயிரிழந்த பெண்.. சிக்கிய போலி மருத்துவர்

கன்னத்தில் அறையும் சிகிச்சை.. உயிரிழந்த பெண்.. சிக்கிய போலி மருத்துவர்

எந்தவித பயிற்சியும் இல்லாமல் தங்கள் அனுபவத்தின் மூலமாக மட்டுமே மருத்துவம் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதுமே அதிகமாக உள்ளதை பார்க்க முடிகிறது. இப்படிதான் இங்கிலாந்தில் ஒருவர் “உடலில் அறையும்” சிகிச்சை எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீரும் என பயிற்சி வகுப்பு நடத்தியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு இவர் நடத்திய மருத்துவ பயிற்சி வகுப்பிற்கு வயதான பெண் ஒருவர் சென்றுள்ளார்.

டேனியல் கார் என பெயருள்ள அந்தப் பெண், 2014-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி “உடலில் அறையும்” சிகிச்சை வகுப்பை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்ததும் இறந்து போயுள்ளார். 71 வயதாகும் இந்தப் பெண்மணி, டைப்-1 டயாபடீஸ் நோய்க்கு மாற்று சிகிச்சை தேடி இங்கு வந்திருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்து தற்போது அந்த ‘போலி’ மருத்துவரை கைது செய்துள்ளது இங்கிலாந்து காவல்துறை.

பைதா லஜின் (Paida Lajin) எனக் கூறப்படும் இந்த சிகிச்சை சீனாவின் மருத்துவ முறையாகும். இந்த சிகிச்சையில் நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது. இதன் மூலம் நோயாளியின் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற முடியுமாம். இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தியவர் ஹோன்சீ ஜியாவோ என்பவர். இவர் Heal Yourself Naturally Now என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் பைதா லஜின் சிகிச்சையின் பயன்களையும் இந்த சிகிச்சையின் மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றி ரத்த ஓட்டத்தை எப்படி அதிகரிக்கலாம் எனவும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சையில் நோயாளிகள் தங்கள் உடலின் பல்வேறு பகுதிகளை கைகளால் கடுமையாக அறைந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இணைப்பு பகுதிகள் மற்றும் தலை. சரி எவ்வுளவு வேகமாக அடிக்க வேண்டும்? தோல் சிவந்து போகும் அளவிற்கு அல்லது சிராய்ப்பு ஏற்படும் அளவிற்கு அடிக்க வேண்டும்.

சீன மருத்துவமான “ஷா”-வில் அசுத்தமான ரத்தங்களை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும் என நம்பப்படுகிறது. இதனடிப்படையிலேயே பைதா லஜின் சிகிச்சை செயல்படுகிறது. இந்த சிகிச்சையின் போது நோயாளிகள் மேஜையில் அல்லது தரையில் படுத்தபடியோ அல்லது சுவரில் அல்லது கதவில் சாய்ந்து கொண்டோ உடலில் பலமாக அடிக்க வேண்டும். இதன் மூலம் அசுத்த ரத்தம் வெளியேறி உடலை குணப்படுத்துவதாக நம்புகிறார்கள். ஆனால் இப்படிச் செய்வதால் ரத்த நாளங்கள் உடைவதோடு சருமத்தில் காயம் தான் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பைதா லஜின் சிகிச்சை முறை ஆசியாவில் உள்ள சீன சமூகத்தினரிடைய இன்றும் பிரபலமாக உள்ளது. பைதா லஜின் சிகிச்சையை வளர்த்தெடுப்பதற்காக சீனா, ஹாங்காங், தைவான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார் ஜியாவோ. மேலும் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மருத்துவமனையிலும் இந்த சிகிச்சை குறித்து விளம்பரம் செய்துள்ளார்.

இவரது சிகிச்சைக்கு அறிவியல் ரீதியாகவோ மருத்துவ ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை. மேலும் பைதா லஜின் சிகிச்சை சளி, உடல் வலி, அல்சைமர், பக்கவாதம், முடக்குவாதம், புற்றுநோய், ஆட்டிஸம், சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களின் அறிகுறிகளை குணப்படுத்தக் கூடியது என ஜியாவோ கூறியதற்காக பல மருத்துவர்கள் அவரை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post