காசாவில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம்..! - இந்தியா ஆதரவாக வாக்களிப்பு...

காசாவில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. சபையில் தீர்மானம்..! - இந்தியா ஆதரவாக வாக்களிப்பு...

காசாவில் உடனடியாக போரை நிறுத்துவதற்கு, இந்தியா உள்ளிட்ட 153 நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆரம்பத்தில் காசா மீது வான் வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், பின்னர் கடல் மற்றும் தரைவழி தாக்குதல்களையும் விரிவுப்படுத்தியது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான உக்ரமான போரால், நொடிக்கு நொடிக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக காசாவில் மட்டும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில், 70 சதவிகிதம் பேர், குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியிலும், நோய் தொற்று ஏற்படும் அபாயத்திலும் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கல் எனவும், அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.  இதற்கு, இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அதே சமயம், அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. உக்ரைன், அர்ஜென்டினா, ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகின. இறுதியாக 193 உறுப்பினர்கள் கொண்ட அவையில், 153 நாடுகளின் ஆதரவுடன் போர் நிறுத்தத்திற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா நிற்கும் சூழலில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், செயல்வடிவம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது.

news18


 



Post a Comment

Previous Post Next Post