மின்னல் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்ற சிறுவன்

மின்னல் தாக்கியதில் கோமா நிலைக்குச் சென்ற சிறுவன்

மலேசியாவில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தபோது மாது ஒருவரும் அவருடைய இரு மகன்களும் வீட்டிற்கு நடந்து சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் எட்டு வயதுச் சிறுவனின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது என அம்மாநிலக் காவல்துறை தெரிவித்தது.

அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதான திருவாட்டி நூர் லெலாவதி அபு பக்கரும் அவருடைய இளைய மகனான எட்டு வயது முகம்மது அஜிசுல் ஜாபரும் அண்டை வீட்டாரின் வீட்டிற்கு நடந்து சென்றபோது இந்தத் துயரச்சம்பவம் நிகழ்ந்தது எனக் காவல்துறை கூறியது.

திருவாட்டி நூரின் மூத்த மகனை அழைத்துவர அவர்கள் இருவரும் அங்கு சென்றதாகக் கூறப்பட்டது.

அவர்கள் மூவரும் மரங்களால் சூழப்பட்ட பாதையில் நடந்து கொண்டிருந்தபோது ​​திருவாட்டி நூர் ஒரு கனமான பொருளால் தாக்கப்பட்டதுபோல் உணர்ந்ததாக மலாய் நாளிதழான ஹரியான் மெட்ரோ தெரிவித்தது.

“நான் மிகவும் வெப்பமாக உணர்ந்தேன். எனக்கு வலிப்பு ஏற்பட்டது. நான் மயக்கமடைவதற்கு முன்பு என் மூத்த மகன் என்னை அழைக்கும் குரல் எனக்குக் கேட்டது. அப்போது திரும்பிப் பார்த்தபோது இளைய மகன் மயங்கிக் கிடப்பதை நான் கண்டேன்,” என திருவாட்டி நூர் அந்நாளிதழிடம் கூறினார்.

“என் மூத்த மகனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. அவன் உதவிக்கு மற்றவர்களை அழைத்து அவர்களின் உதவியோடு எங்களை மருத்துவமனையில் அனுமதித்தான்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருவாட்டி நூருக்குத் தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அஜிசுலுக்குக் கழுத்து, வயிறு, இடது கால் ஆகிய பகுதிகளில் 25 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அஜிசுல் மருத்துவமனையில் ‘கோமா’ நிலையில் இருப்பதாகவும் அவனுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

tamilmurasu


 



Post a Comment

Previous Post Next Post