ராஜஸ்தான் : “இறைச்சி கடைகள் மூடல்” - தேர்தலில் வெற்றி பெற்றவுடனே வேலையை காட்டிய பாஜக MLA - நடந்தது என்ன?

ராஜஸ்தான் : “இறைச்சி கடைகள் மூடல்” - தேர்தலில் வெற்றி பெற்றவுடனே வேலையை காட்டிய பாஜக MLA - நடந்தது என்ன?

பாஜக ஆளும் முக்கிய மாநிலங்களில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. நாட்டையே இந்து நாடாக மாற்றவும், அசைவ உணவுகள் இல்லாமல் வெறும் சைவ உணவுகளை மட்டுமே விநியோகிக்கவும் பாஜக முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அசைவ கடைகளை மூடும் திட்டத்தை பாஜக குறிப்பிட்ட சில இடங்களில் கையில் எடுத்துள்ளது.

அண்மையில் கூட பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்தது. இந்த சூழலில் தொடர்ந்து இது போல் இனியும் நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ராஜஸ்தானில் உள்ள பாஜக எம்.எல்.ஏ., ஒருவர் பதவி ஏற்பதற்கு முன்பாகவே இறைச்சி கடைகளை மூடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த சூழலில் அம்மாநிலத்தில் உள்ள ஹவா மஹால் (Hawa Mahal) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த பாலமுகுந்த் ஆச்சார்யா (Balmukund Acharya), என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த டிச 3-ம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வெற்றி என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மறுநாளே (டிச., 4) தான் பதவியேற்பதற்கு முன்னரே, தனது தொகுதியில் முக்கிய பகுதி ஒன்றில் சாலையோரத்தில் இருக்கும் இறைச்சி மற்றும் அசைவ உணவு கடைகளை மூடும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கேட்டபோது, அவர்களிடம் கத்தி சண்டையிட்டுள்ளார்.

இதையடுத்து இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நகராட்சி நிர்வாகிகளுடன் விரைந்து வந்த காவல்துறையினர், கடைகளை மூடுவதை தடுத்தனர். அப்போது அதிகாரிகளிடமும், அந்த தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ஆச்சார்யா சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ., வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தது.

இந்த நிலையில், தான் இறைச்சி கடையை மூட காரணம் குறித்து ஆச்சார்யா விளக்கம் ஒன்ரையும் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கம், "சாலையோரத்தில் இருக்கும் இறைச்சி, அசைவு உணவு கடைகளால் புகை, துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை தடுக்க நான் நடவடிக்கை எடுக்கும்போது, அதிகாரிகள் தடுத்தனர். அப்போது அவர்களிடம் நான் பேசினேன். ஆனால் எனது தொண்டை வலித்ததால், நான் சத்தமாக பேச வேண்டியதாயிற்று.

நான் அவ்வாறு செய்தது யார் மனைதையும் புண் படுத்தியிருந்தால், அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்காகவும் இதனை செய்யவில்லை. நமது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி நான் செயல்பட்டு வருகிறேன்." என்று தெரிவித்துள்ளார். எனினும் ஆச்சார்யாவின் செயலுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்ற்னர்.

ஏனெனில், இறைச்சி மற்றும் அசைவ உணவு கடைகளை வைத்திருப்பது பெரும்பாலும் இஸ்லாமியர்கள்தான். இது அவர்களுக்கு பொருளாதாரம் ஈட்டக்கூடிய ஒரு தொழில். இதில் கை வைத்தால் அவர்கள் பிழைப்பு பாதிக்கப்படும். பாஜக முன்னதாக இதுபோன்று வேண்டுமென்றே பல்வேறு விஷயங்களை செய்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து அடுத்த நாளே, பாஜக எம்.எல்.ஏ., இவ்வாறு செய்ததற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (The People’s Union of Civil Liberties) கூறுகையில், "சாலையோர வியாபாரிகள் சட்டத்தில் சைவம் மற்றும் அசைவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வியாபாரிகளுக்கு, நகர விற்பனைக் குழு அமைத்து, விற்பனை மண்டலங்களை உருவாக்கி, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இதுவரை, நகர விற்பனைக் குழு, வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.

விற்பனையாளர்களுக்கு உரிமம் வழங்கப்படவில்லை; விற்பனை மண்டலங்களும் அடையாளம் காணப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ., ஒருவர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு இறைச்சிக்கடைகள் மற்றும் தெருவில் அசைவ வியாபாரிகளை மிரட்டுவது மிகுந்த கவலையளிக்கிறது." என்று தெரிவித்துள்ளது.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post