Ticker

6/recent/ticker-posts

14-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)


11.ஸுரதுல் பாதிஹா ஓதுதல் : 

அஊது & பிஸ்மி இரண்டையும் இரகசியமாக ஓதிய பின் தொழுகையின் அனைத்து றக்அத்துகளிலும் ஸுறா பாதிஹாவை முழுமையாக ஓதுவது கட்டாயமாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘தொழுகையில் ஸூறதுல் பாதிஹா ஓதாதவருக்கு தொழுகையே இல்லை” (புஹாரி& முஸ்லிம்). 

இதே வேளை இமாமைப் பின்பற்றி தொழும் மஃமூம்கள் சத்தமிட்டு ஓதி தொழும் தொழுகைகளில் (உ-ம் : மஃரிப்,இஷா,ஸுப்ஹ்…) ஸுறா பாதிஹாவை ஓத வேண்டுமா,ஓத கூடாதா என்பது தொடர்பில் அறிஞர்களிடையே இரு கருத்துகள் காணப்படுகின்றன :

முதல் கருத்து:

மஃமூம்கள் ஸூறா பாதிஹா ஓதக்கூடாது, இமாம் ஓதுவதை கேட்டுகொண்டிருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு இரு ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

‘அல்குர்ஆன் ஓதப்பட்டால் செவிதாழ்த்தி கேளுங்கள், வாய்மூடி இருங்கள்…||(7:204). 

நபிகளார் கூறினார்கள் : ‘இமாம் என்பவர் பின்பற்றப்பட வேண்டியவராவார். அவரோடு முரண்படாதீர்கள். அவர் அல்லாஹு அக்பர் என கூறினால் நீங்களும் அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள். அவர் ஓதினால் நீங்கள் மௌனமாக நில்லுங்கள்|| (முஸ்லிம்). 

இரண்டாவது கருத்து :

மற்றும் சில அறிஞர்கள் அனைத்து தொழுகைகளிலும் மஃமூம்கள் ஸுறா பாதிஹா ஓத வேண்டும் என கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாகவும் முதல் சாராருக்கு பதிலாகவும் பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றனர் :

ஒருநாள் நபியவர்கள் ஸுப்ஹ் தொழுகை நடாத்தினார்கள். நபியவர்கள் ஸூறா பாதிஹா ஓதிவிட்டு வேறு ஒரு ஸூறாவை ஓதிக்கொண்டிருந்த போது ஸஹாபாக்கள் ஸூறா பாதிஹா ஓதி கொண்டிருந்தார்கள். தொழுகை முடிந்த பின் நபியவர்கள் ‘இமாமுக்கு பின்னால் நீங்கள் ஏதும் ஓதினீர்களா? ” என்ற போது ஸஹாபாக்கள் ‘ஆம்” என்றார்கள். அப்போது நபியவர்கள் ‘இமாமுக்கு பின்னால் ஸூறா பாதிஹா மட்டும் ஓதுங்கள். வேறு எதுவும் ஓதாதீர்கள். ஏனெனில் ஸூறா பாதிஹா ஓதாதவருக்கு தொழுகை கூடாது” என்று கூறினார்கள் (திர்மிதி& அபூதாவூத்). 

இமாம் திர்மிதி, இமாம் ஹத்தாபி, இமாம் பைஹகி ஆகியோர் இது ஆதாபூர்வமான ஹதீஸ் என குறிப்பிடுகின்றனர்.

இந்த ஹதீஸ் உண்மையில் மஃமூம்கள் அனைத்து தொழுகைகளிலும் பாதிஹா ஓத வேண்டும் என்பதற்கு பலமான ஆதாரமாக அமைகிறது.

அத்தோடு முதல் சாரார் முன்வைக்கும் இரு ஆதாரங்களும் ஸூறா பாதிஹாவை தவிரவுள்ள ஏனைய ஸூறாக்களை மஃமூம்கள் ஓதாமல் இமாம் ஓதுவதை கேட்டுகொண்டிருக்க வேண்டும் என்பதற்கே ஆதாரமாக அமைகின்றன.

இமாம் திர்மிதி (ரஹ்) கூறுகிறார்கள் : ‘இமாமை பின்பற்றி தொழும் மஃமூம்கள் அனைத்து தொழுகைகளிலும் ஸூறா பாதிஹா ஓத வேண்டும் என்ற கருத்தையே பெரும்பாலான ஸஹாபாக்கள்,தாபிஈன்கள்,இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ,இமாம் அஹ்மத்,இமாம் அப்துல்லாஹ் இப்னுல் முபாரக், இமாம் இஸ்ஹாக் உள்ளிட்ட பலர் கொண்டுள்ளார்கள்” (பார்க்க : ஸுனனுத் திர்மிதி& 2ஃ118& தமாமுல் மின்னா பீ பிக்ஹில் கிதாபி வஸஹீஹிஸு ஸுன்னா& 1ஃ231). 

சுருங்கக் கூறின்;

சத்தமிட்டு ஓதி தொழப்படும் தொழுகைகளில் இமாம் ஸூறா பாதிஹா ஓதிக் கொண்டிருக்கும் போது மஃமூம்கள் மௌனமாக கேட்டுகொண்டிருக்க வேண்டும். வஜ்ஜஹ்து போன்ற ஆரம்ப துஆவை ஓதி கொண்டிருக்க கூடாது.

இமாம் ஸூறா பாதிஹாவுக்கு பின் வேறு ஸுறா ஓதும் போது ஸூறா பாதிஹா மாத்திரம் ஓதுவதற்கு அனுமதி இருப்பதால் அதை மாத்திரம் ஓத வேண்டும். வேறு எந்த ஸூறாவும் ஓத கூடாது.

இது இவ்வாறிருக்க ஒருவருக்கு ஸூறா பாதிஹா மனனமில்லையென்றால் என்ன செய்வது?

1 )ஒரு தடவை நபியவர்கள் ஒருவருக்கு தொழுகை முறையை கற்றுகொடுத்தார்கள். அப்போது அவர்கள் ~உனக்கு குர்ஆன் மனனமிருந்தால் அதை ஓது. இல்லையெனில் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர், லாஇலாஹ இல்லல்லாஹ் என்பவற்றை கூறு’ என்று கூறினார்கள். (திர்மிதி& அபூதாவூத்). 

2 )மற்றொரு தடவை நபியவர்களிடம் ஒருவர் வந்து ‘அல்குர்ஆனில் எனக்கு எதுவும் மனனமில்லை. அதற்கு நிகராக தொழுகையில் ஓத ஏதாவது கற்று தாருங்கள்’ என்று கேட்ட போது நபியவர்கள் 

~ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அழீம்’ என்று கூறு என கூறினார்கள் (அபூதாவூத்& நஸாஈ) 

இனி

(12) ‘ஆமீன்” கூறுதலும் வேறு ஸூறா ஓதுதலும்:

(13) றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் :

(14) றுகூஉவிலிருந்து நிலைக்கு வருதல்:

(15) ஸுஜூதுக்கு செல்லுதல் :

போன்றவற்றின் சட்டங்களை பார்க்கலாம்… 

(தொடரும்)

ARM.ரிஸ்வான் (ஷர்க்கி)


 



Post a Comment

0 Comments