Ticker

6/recent/ticker-posts

17-ஸுன்னாவின் அடிப்படையில் தொழுகை முறை

(நபி வழியில் தொழுகை)


13. றுகூஉ செய்தலும் அதில் தாமதித்தலும் :

ஸூறா பாதிஹாவும் வேறு ஸூறாவும் ஓதி முடித்த பின் சிறிது தாமதித்து இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹு அக்பர் என்று கூறி றுகூஉ செய்ய வேண்டும். இவ்வாறே நபியவர்கள் செய்வார்கள் (பார்க்க : புஹாரி , முஸ்லிம் , அபூதாவூத் , ஹாகிம்).

தொழுகையில் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை தோள்புயங்களுக்கு நேராக அல்லது காதுகளுக்கு நேராக உயர்த்த வேண்டும் என்பது நபிவழியாகும் :

இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள் :

1.நபியவர்கள் ஆரம்ப தக்பீரின் போதும்

2. றுகூஉக்கு செல்லும் போதும் (எல்லா றக்அத்துகளிலும்)

3. றுகூஉவிலிருந்து நிலைக்கு வரும் போதும் (எல்லா றக்அத்துகளிலும்)

4.முதல் அத்தஹிய்யாத்திலிருந்து மூன்றாவது றக்அத்துக்கு வரும் போதும் ஆகிய இந்த நான்கு சந்தர்ப்பங்களில் மட்டுமே கைகளை தோள்புயம் வரை (அல்லது காதுகள் வரை) உயர்த்துவார்கள் (புஹாரி , முஸ்லிம் , அபூதாவூத்).

இந்த நான்கு சந்தர்ப்பங்கள் தவிர வேறு எந்த நிலையிலும் கைகளை உயர்த்த கூடாது.

றுகூஉவில் பின்வரும் ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டும் :

1.கைவிரல்களை பொத்தாமல் சற்று பிரித்து இரு உள்ளங்கைகளையும் இரு முழங்கால்களில் வைத்தல்:

நபியவர்கள் கூறினார்கள் : “நீ றுகூஉ செய்தால் உமது இரு உள்ளங்கைகளையும் இரு முழங்கால்களில் வைத்துக்கொள். உமது கைவிரல்களை சற்று பிரித்து வை. பின்னர் ஒவ்வொரு உறுப்பும் அமைதியடையும் வரை றுகூவில் தாமதித்து நில்’ (இப்னு ஹுஸைமா , இப்னு ஹிப்பான்).

2. இரு முழங்கைகளையும் விலாவோடு சேர்க்காமல் விலக்கி வைத்தல் :

நபியவர்கள் றுகூஉவில் இரு முழங்கைகளையும் விலாவோடு சேர்க்காமல் விலக்கி வைப்பார்கள்.(திர்மிதி , இப்னு ஹுஸைமா).

3. முதுகை நீட்டி நேராக நிற்றல் :

நபியவர்கள் றுகூஉ செய்தால் தமது முதுகை (வளைக்காமல்) நீட்டி , அம் முதுகில் நீரை ஊற்றினால் நிற்குமளவுக்கு மிக நேர்த்தியாக குனிந்து நிற்பார்கள் (புஹாரி , பைஹகி , தபரானி).

நபிகளார் தமது தலையை கீழே தாழ்த்தாமலும் மேலே உயர்த்தாமலும் (முதுகும் தலையும் சமமாக இருக்கத்தக்கதாக) நேராக வைப்பார்கள் (முஸ்லிம் , அபூதாவூத்).

மேற்கூறப்பட்ட ஒழுங்குகள் அனைத்தும் ஆண்களுக்கு மட்டுமன்றி பெண்களுக்கும் உரியவையாகும்.

மேற்கூறப்பட்ட ஒழுங்குகளுக்கு மாறாக;

– இரு கைகளையும் தோள் புயங்களுக்கு அல்லது காதுகளுக்கு நேராக உயர்த்தாமலே றுகூஉக்கு செல்லுதல் ,

– றுகூஉவில் தாமதிக்காமல் விடுதல் ,

– இரு கைகளையும் முழங்காலில் வைக்காமல் முழங்காலுக்கு மேலே அல்லது முழங்காலுக்கு கீழே வைத்தல் ,

– இரு முழங்கைகளையும் விலாவோடு சேர்த்து வைத்தல் ,

– முதுகையும் தலையையும் சமமாக வைக்காமல் வளைந்து அல்லது கடுமையாக குனிந்து நிற்றல்

– ஆகிய அனைத்து முறைகளும் பிழையானவையும் நபிகளாரின் வழிமுறைக்கு முரணானவையும் தொழுகையில் குறைபாட்டை ஏற்படுத்துபவையுமாகும்.

மேலும் றுகூஉ , ஸுஜூத் ஆகிய நிலைகளில் (பர்ழ் மற்றும் ஸுன்னத் ஆகிய இரு தொழுகைகளிலும்) அல்குர்ஆன் வசனங்களை ஓதுவது தடை செய்யப்பட்டதாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : “றுகூஉவிலும் ஸுஜூதிலும் அல்குர்ஆனை ஓதுவது எனக்கு தடை செய்யப்பட்டுள்ளது’ (முஸ்லிம்)

றுகூஉவில் நபியவர்கள் பல திக்ருகளை ஓதியுள்ளார்கள். அவற்றுள் சில :

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

“ஸுப்ஹான றப்பியல் அழீம்’ (03 அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள்) – (அஹ்மத் , அபூதாவூத்).

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ

“ஸுப்பூஹுன் குத்தூஸுன் றப்புல் மலாஇகதி வர் ரூஹ்’ (முஸ்லிம்)

سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ

“ஸுப்ஹான கல்லாஹும்ம றப்பானா வபிஹம்திக அல்லாஹும்மஹ்பிர்லீ’ (நபியவர்கள் இதை ருகூஉவிலும் ஸுஜூதிலும் அதிகமாக ஓதுவார்கள்) (புஹாரி , முஸ்லிம்). 

(தொடரும்)

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி) 


 



Post a Comment

0 Comments