Ticker

6/recent/ticker-posts

நிலவில் தடம்பதித்த இந்தியா.. 2023 ஆம் ஆண்டு நடந்த விண்வெளி ஆய்வுகள்


விண்வெளி ஆய்வில் இந்தாண்டு பெரிய மையில் கல் எட்டப்பட்டுள்ளது என சொல்லாம். இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம், ரஷ்யாவின் லூனா-25, ஜப்பானின் ஸ்லிம் மற்றும் நாசாவின் விண்வெளி ஆய்வு திட்டங்கள் என முக்கிய நிகழ்வுகள் இந்தாண்டு நடைபெற்றுள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். 

இந்தியாவின் வரலாறு படைத்த சந்திரயான் - 3 திட்டம் :

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் - 3 விண்கலத்தை ஜூலை மாதம் 14 ஆம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விண்ணில் ஏவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் - 3 விண்கலத்தில் உயரம் படிபடியாக குறைக்கபட்டது. உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த ரோவரை சுமந்து செல்லும் விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெற்றிகரமாக சரியாக மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறக்கினர். இதன் மூலம் நிலவை நோக்கிய பயணத்தில் சரித்திரம் படைத்தது இந்தியா. மேலும், நிலவில் தடம்பதித்த 4வது நாடு என்ற பெருமையையும், தென் துருவத்தில் தடம்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது. இதுவரை நிலவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளே தடம்பதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிக்கொண்டுவரப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் சரியாக 14 நாட்கள் இயக்கும்படி ரோவர் வடிவமைக்கப்பட்டிருந்தது. தென் துருவப்பகுதியில் கிடைக்கும் சூரிய ஒளியில் சக்தியை கொண்டு இயங்கும் ரோவர், நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வை மேற்கொண்டது. ரோவர் சேகரித்த தகவல்கள் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மூலம் இஸ்ரோவிற்கு அனுப்பப்பட்டது. தனது பணிகளை சரியாக செய்த ரோவர் 14 நாட்களுக்கு பின்பு ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றது. நிலவில் இருக்கும் தனிமங்கள், நிலவின் வெப்பநிலை போன்ற தகவல்களை சந்திரயான் - 3 திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

ரஷ்யாவின் நிலவு பயணம் :

சுமார் 47 ஆண்டுகள் கழித்து ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஆகஸ்ட் 10 ஆம் தேதி லூனா -25 விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. இந்தியாவின் சந்திரயான் - 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்பட்ட தருணத்தில் லூனா - 25 வெற்றிகரமாக நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு வந்தடைந்தது.

ரஷ்யாவின் லூனா - 25 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தரையிறக்கத் திட்டமிடப்பட்டது. அதே நேரத்தில் இந்தியா, விக்ரம் லேண்டரை ஆகஸ்ட் 23 ஆம் தேதி தரையிறக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால் லூனா - 25 எதிர்பார்த்ததற்கும் மிஞ்சிய வேகத்தில் பயணிப்பதால் தரையிறங்குவதில் கோளாறு ஏற்படலாம் என்று இந்திய விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

அதன்படியே ஆகஸ்ட் 20 காலை லூனா - 25 விண்கலத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து, தரையிறங்குவதற்கு ஏற்றவாறு விண்கலத்தின் பாதை மாற்றும்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்று வட்டப் பாதையில் இருந்து நகர்ந்த லூனா - 25 நிலவின் பரப்பில் மோதி நொறுங்கியது.

நிலவில் தடம்பதிக்க விரும்பும் முயற்சியில் ஐப்பான் :

நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவை அடுத்து ஜப்பானும் இணையவுள்ளது. ஜப்பானில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா, ஸ்லிம் என்னும் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியுள்ளனர். செப்டம்பர் 6 ஆம் தேதி தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து விண்ணிற்கு ஏவப்பட்ட ஸ்லிம் விண்கலம் டிசம்பர் 25 ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது. 2024 ஜனவரி 19 ஆம் தேதி நிலவில் தரையிறக்க ஜப்பான் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விண்கலத்தின் முக்கிய நோக்கமே குறைவான எடையுடன் நிலவில் மேற்பரப்பில் சாப்ட் லாண்டிங் செய்யவேண்டும் என்பது ஆகும். இதன் மூலம் நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பத்தை குறைந்த செலவில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்லிம் விண்கலத்தில் சிறிய லேண்டர் மற்றும் ரோவர் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் நிலவின் மேற்பரப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய 5வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும்.

விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரம் படைத்த நாசா :

கடந்த 1999 ஆம் ஆண்டு, பூமியில் இருந்து சுமார் 200 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் 500 மீட்டர் விட்டம் கொண்ட “பென்னு” என்னும் சிறுகோளை நாசா கண்டுபிடித்தது. அதனை ஆய்வு செய்ய, கடந்த 2016 ஆம் ஆண்டு ஒசைரிஸ்-ரெக்ஸ் என்ற விண்கலத்தை நாசா விண்ணில் ஏவியது. சுமார் 2 ஆண்டுகள் பயணம் செய்த ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், பென்னுவை வெற்றிகரமாக அடைந்தது.

சுமார் 2 ஆண்டுகள் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பென்னுவை ஆய்வு செய்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி, நீண்ட நெடிய முயற்சிக்கு பின், பென்னு எரிகல்லில் இருந்து சுமார் 250 கிராம் மண் மாதிரியை ஓசிரிஸ் ரெக்ஸ் சேகரித்தது. மாதிரிகளுடன் ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தில் இருந்து பிரிந்த இயந்திரம் பூமியை நோக்கி திரும்பியது. மணிக்கு சுமார் 43 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பறந்து, பாராசூட் உதவுயுடன் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானதாக கருதப்படும் பென்னு சிறுகோளின் மண் மாதிரிகள், உட்டாவில் இருந்து ஜான்சன் ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வில் பென்னு மாதிரிகளில் இருந்து 5 சதவீதம் கார்பன் மற்றும் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த ஆய்வின் மூலம் மர்மமான வினாக்களுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், சூரிய குடும்பத்தின் தோற்றம், பூமியின் உயிர்கள் பரிணமித்ததற்கான உண்மை காரணங்கள் தெரியவரும் என நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

வியாழனின் துணை கோள்களை ஆய்வு செய்யும் நாசா :

வியாழன் கோள் குறித்த ஆய்வில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து நாசா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு வியாழனின் துணை கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா ஜூஸ் என்னும் விண்கலத்தை விண்ணில் ஏவியுள்ளது. வியாழன் விண்கலத்திற்கு கேனிமீட், காலிஸ்டோ மற்றும் யூரோபா என்ற மூன்று துணை கோள்கள் உள்ளன. இவை பனிக்கட்டிகளால் நிறைந்துள்ளது.

இந்த துணைகோள்களில் பனிக்கட்டிகள் கீழ் நீர் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக நாசா ஜூஸ் விண்கலத்தை நிலவிற்கு ஏவியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் அந்த கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை கண்டறியமுடியும். ஏற்கனவே வியாழனின் சுற்றுவட்ட பாதையில் சுற்றுவருகின்ற ஜூனோ விண்கலம் வியாழன் கோள் குறித்த பல தகவல்களை அளித்து வருகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசா:

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் நெடுநாள் கனவாக இருப்பது இந்த திட்டம். செவ்வாய் கிரகம் குறித்த ஆய்வுகளை பல வருடங்களாக நடத்திவரும் நாசா செவ்வாய் கிரகத்தின் வாழ்வியல் போன்ற அமைப்பை 1,200 சதுர அடியில் உருவாக்கியுள்ளனர். அதில் 4 நபர்கள் கொண்ட குழுவை கொண்டு, எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திட்டம் இந்தாண்டு ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டது. ஆய்வுக்கூடம், படுக்கை அறை, சமையல் அறை, விளையாட்டு, உடற்பயிற்சி இடம் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் அப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு போன்ற சிவப்பு நிற மண் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வீரர்கள் நடப்பதற்கான பயிற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களை விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பவுள்ளது.

மிக சக்திவாய்ந்த ராக்கெட்டை உருவாக்கிய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் :

எலான் மஸ்க்-கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் இந்தாண்டு பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வகையில், இதுவரை எந்த நாடுகளிடமும் இல்லாத மிக சக்திவாய்ந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளனர். ஸ்டார்ஷிப் என பெயரிடப்பட்ட இந்த விண்வெளி வாகனம் அதிக எடைகொண்டதாகவும், உயரமானதாகவும் இருக்கிறது. இந்த விண்வெளி வாகனத்தின் முதல் சோதனை 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெற்றது. அதில் ஏவிய நில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் வெடித்து சிதறியது.

அதனைத்தொடர்ந்து, 2023 நவம்பர் 18 ஆம் தேதி மீண்டும் இரண்டாம் முறை விண்ணில் செலுத்துவதற்கான சோதனை நடைபெற்றது. இதில் தோல்வியடைந்த நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் இந்த திட்டத்தில் வெற்றிபெற முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதனிடையே, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு திட்டமான ஸ்டார்சிப் திட்டத்திற்காக இந்தாண்டு வரை சுமார் 5,500 சிறிய செயற்கை கோள்களை விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 70 நாடுகளுக்கு செயற்கை கோள் மூலம் இணைய சேவையை வழங்கும் திட்டம்தான் ஸ்டார்சிப். புவி வட்டப்பாதையில் சிறிய செயற்கை கோள்கள் மூலம் இணைப்பு உருவாக்கி, அதன் மூலம் இணைய சேவை வழங்கும் பணியில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.


news18


 



Post a Comment

0 Comments