
இனி..
24. ஸலாம் கூறுவதன் ஒழுக்கங்கள்
25. ஸலாம் கூறிய பின் போண வேண்டிய ஒழுக்கங்கள்
24. ஸலாம் கூறுதல் :
அத்தஹிய்யாத் , ஸலவாத் , துஆக்கள் ஆகிய அனைத்தும் ஓதி முடிந்த பின் தொழுகையின் முடிவுரையாக ஸலாம் கூற வேண்டும்.
நபியவர்கள் ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்” என்று தனது வலது கன்னத்தின் வெண்மை தெரியுமளவும் இடது கன்னத்தின் வெண்மை தெரியுமளவுக்கும் இரு பக்கமும் திரும்பி ஸலாம் கூறுவார்கள்” (திர்மிதி , அபூதாவூத்).
சில வேளைகளில் முதலாவது ஸலாம் கூறும் போது ‘வபரகாதுஹு” என்ற சொல்லையும் மேலதிகமாக சேர்த்து கூறுவார்கள்” (அபூதாவூத் , இப்னு ஹுஸைமா)
(இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதென இமாம் நவவி , இமாம் இப்னு ஹஜர் , இமாம் அல்பானி ஆகியோர் கூறுகின்றனர்).
25. ஸலாம் கூறிய பின்:
இமாமாக தொழுகை நடத்துபவர் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் மஃமூம்களை நோக்கி திரும்பி இருப்பது நபியவர்களின் நடைமுறையாகும்.
நபியவர்கள் ஸலாம் கூறியவுடன் எவ்வளவு நேரம் கிப்லாவை நோக்கி அமர்ந்திருப்பார்கள்?
ஆயிஷா (றழி) அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் ஸலாம் கூறியவுடன் ‘அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்” என்பதை ஓதும் அளவுக்கே உட்கார்ந்திருப்பார்கள்” (முஸ்லிம்).
இதன் அர்த்தம் அந்த திக்ரை ஓதும் அளவுக்கு இருந்து விட்டு பின்னர் எழுந்து சென்றுவிடுவார்கள் என்பதல்ல. ஸலாம் கூறுவதற்கு முன்னர் கிப்லாவை முன்னோக்கி இருந்தது போன்று ஸலாம் கூறிய பின் கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க மாட்டார்கள் என்பதேயாகும்.
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள் : மேற்படி ஹதீஸின் விளக்கம் என்னவெனில் , ஸலாம் கூறுவதற்கு முன்னர் கிப்லாவை முன்னோக்கியிருந்த அதே அமைப்பில் உட்கார்ந்திருக்காமல் மேற்கூறப்பட்ட ‘அல்லாஹும் அன்தஸ் ஸலாம்…’ எனும் திக்ரை ஓதும் அளவுக்கு இருந்துவிட்டு பின்னர் மஃமூம்களை முன்னோக்கி திரும்புவார்கள் (பார்க்க : ‘பத்ஹுல் பாரி”).
எனவே , மஃரிப் , ஸுப்ஹ் உட்பட அனைத்து தொழுகைகளிலும் ஸலாம் கூறிய பின் அந்த திக்ரை ஓதும் அளவு இருந்துவிட்டு பின்னர் மஃமூம்களை முன்னோக்கி இருப்பதே நபியவர்களின் ஸுன்னாவாகும்.
இமாமாக நின்று தொழுகை நடத்தியவர் மஃமூம்களை நோக்கி எப்படி திரும்புவது ?
அனஸ் (றழி) அறிவிக்கிறார்கள் : ‘நபிகளார் தொழுகை முடிந்தவுடன் வலப்புறமாக திரும்பி மஃமூம்களுக்கு நேராக இருப்பதை நான் அதிகமாக பார்த்திருக்கிறேன்” (முஸ்லிம் , நஸாஈ).
இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கிறார்கள் : ‘நபியவர்கள் தொழுகை முடிந்ததும் அதிகமாக இடப்புறமாக திரும்பி இருப்பதை பார்த்துள்ளேன்” (புஹாரி , முஸ்லிம்).
அதாவது நபிகளார் சில வேளைகளில் வலப்புறமாகவும் சில வேளைகளில் இடப்புறமாகவும திரும்பி மஃமூம்களுக்கு முகத்தை முன்னோக்கி அமர்வார்கள்.
(தொடரும்)

.gif)





0 Comments