2.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

2.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!


இலங்கை சிங்கப்பூராக மாறவேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருக்கும் காலமிது. 

சிங்கப்பூர் அபிவிருத்தியடையாதிருந்த ஒரு காலத்தில் - அதாவது 1965களில் என்று நினைக்கின்றேன். சிங்கப்பூரை இலங்கைத் தீவு மாதிரி ஆக்கிக் காட்டப்போவதாக  அக்காலத்து சிங்கப்பூர் ஆட்சியாளர் அந்நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை  அள்ளிக் கொட்டியதாக இலங்கையில் பேசக் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

அப்படியானால்  ஒரு காலத்தில் ஆசிய நாடுகள் வியக்கத்தக்க விதத்தில் இலங்கை வளர்ச்சி கண்டிருந்திருக்கின்றது என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று இலங்கையையும் மிஞ்சிவிடும் அளவுக்கு சிங்கப்பூர் மிரமிப்பூட்டும்விதத்தில் வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம்  அந்நாட்டு ஆட்சியாளர்களின் உற்சாகமும்  மக்களின் விடாமுயற்சியுமே.

சிங்கப்பூர் பல்லினங்கள் வாழும் நாடாக  இருந்த போதிலும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும்  நாட்டின் மீது அவர்கள்  கொண்டுள்ள பற்றும்  பெருமிதமுமே அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதற்காரணமாக இருந்திருக்க வேண்டும். 

தமது சுதந்திரத்துக்குப் பின்னர்  -  கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூரும் மலேசியாவும் அபிவிருத்திப் பாதையை நோக்கிச்  செல்வதில் ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. 

அதனால் சிங்கப்பூரைத் தொட்டுச் சென்று  மலேசியாவைச் சுற்றிப் பார்ப்பதில்    இரட்டைச் சந்தோசத்தை  உணர்கின்றேன்.
கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து விமானம் மெதுவாக உயரப்பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் நீள்வட்ட யன்னல் வழியே  நோக்கினேன்.

பிரமாண்டமான கட்டிடத் தொகுதிகளே கண்களுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தன.
கோலாலம்பூரின்  கட்டிடத் தொகுதிகளும்  வானுயர் கோபுரங்களும் மலேசிய நாட்டின் அபிவிருத்தியைப் பறைசாற்றிற்று.
150 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதிக்கு ஈய அகழ்விற்கு வந்த சீனத்துத் தொழிலாளர்கள் இப்பிரதேசம் இன்றைய நிலைக்கு வருமென்று சற்றும் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள்! 

பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழ்கின்ற நாடு மலேசியா. ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் மலேயாத் தீபகற்பமும்  தீவுக்கூட்டங்களும் சிரிவிஜய - முஜாபஹிட் பேரரசர்கள் இந்தோனேஷியாவிலிருந்தும் மலாக்கா சுல்தான் மலாக்காவிலிருந்தும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். 

அக்காலத்தில் கிழக்காசிய நாடுகளை நாடி அராபியர் வர்த்தக நோக்கில் வந்து போயினர்.  அவர்களிற் பலர் இந்நாடுகளில் தங்கி – தமது வர்த்தகத்தோ டிணைந்ததாக வாழ்க்கையையும் தொடர்ந்தனர் என்பது வரலாறாகும். 

அந்தவகையில் மலாக்கா சுல்தான் காலத்தில் அதிகமான அரேபியர் மலேசியாவுக்கு வந்தமையும் இஸ்லாத்தின்பால் மலேயர் ஈர்க்கப்பட்டமையுமே மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் காரணமாக அமைந்திருக்கலாம். 
 
தவிர ஆசியாவிலேயே தமிழ்பேசும் இந்துக்கள் அதிகமாக வாழும் நாடாகவும் மலேசியா விளங்குவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
உயரப் பறந்து கொண்டிருந்த விமானம் மெதுவாகத் தரை நோக்கி இறங்கத் தொடங்கியதும் ஆங்காங்கே சிங்கப்பூரின் 63  சிறிய பெரிய தீவுகள் நீண்டும் அகன்றும் பல்வேறு வடிவங்களில் தென்பட்டன. 

விமானம் மேலும் சற்றுக் கீழிறங்கியபோது  பாரிய கட்டிடங்களும் கடலோரங்களில் நங்கூரமிடப்பட்டிருந்த  கப்பல்களும் துறைமுகங்களில் அடுக்கடுக்காகக் குவிந்திருந்த கொள்கலன்களுமே தென்படலாயின.

சுதந்திர வர்த்தகத்தை நீண்டகாலமாகப் பின்பற்றிவருகின்ற நாடு என்பதால் ஏற்றுமதி - இறக்குமதி அதன் பொருளாதாரத்தின் அடித்தாளமாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தை அடைந்ததும்  அவசர அவசரமாக விமான நிலைத்தை விட்டும் வெளியேறி நான் தங்கப்போகும் ஹோட்டலுக்குச் செல்லும் வழியைத் தேடுவதில் ஈடுபட்டேன்.

வெளியேறு தலத்தில் அமைந்திருந்த நாணயமாற்றுக் கவுண்டர்களிலொன்றில் அமரிக்க டொலர்களை சிங்கப்பூர் டொலர்களாக மாற்றிக் கொண்ட பின்னர் அருகிலிருந்த சிற்றுண்டிச்சாலைகளிலொன்றில் சாப்பிட்டுவிட்டு -நான் செல்லவேண்டிய ஹோட்டலுக்குச் செல்லும் வழியை விசாரணைக்கவுண்டரில் கேட்டறிந்து கொண்டேன்.
விசாரணைக் கவுண்டரில்  குறிப்பிட்டபடி  - நகர்ந்துகொண்டிருந்த  ஏணிப்படிகளின் மூலம் இரண்டாவது  தலத்திற்குச் சென்று, விமான நிலையத்திலிருந்து  இலவசமாகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில் வண்டிக்குள் ஏறி - சற்றுத் தூரம் சென்றதும் கிழக்கு மேற்கு வழி (EW) செல்லும் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டேன்.

அங்கிருந்த கவுண்டரில் நான் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டபோது - ரயில்பாதை வரைபடமொன்றைக் கையில் தந்து - அதிலே நான் குறிப்பிட்ட இடத்திற்கு எப்படிச் செல்வதென்பதைக் குறித்துக்காட்டி - அருகிலிருந்த தானியங்கிப் பற்றுச்சீட்டு இயந்திரத்தில்  3.10 சிங்கப்பூர்  டொலருக்கு டிக்கட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கிட்டியது.

டிக்கட் பெறச் சென்ற தன்னியக்க இயந்திரத்தினருகில் தனது டிக்கட்டை எடுத்துக் கொண்டிருந்த ஓர் அழகிய சிங்கப்பூர் மங்கையிடம் நான் இறங்கவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டபோது 2.90 சிங்கப்பூர் டொலருக்கு டிக்கட் வாங்கினால் போதுமென்று கூறவே குறிபிட்ட தொகையைக் கொடுத்து இயந்திரத்திலிருந்து  வெளிப்பட்ட அட்டையை எடுத்துக்கொண்டு கிழக்கு -மேற்காக(EW)ச் செல்லும் ரயிலில் ஏறினேன். 

இரயில் பற்றுச்சீட்டு  கச்சிதமாக பிளாஸ்டிக்கில் அமைக்கப்பட்டிருந்தது.

(தொடரும்)
 

ஐ. ஏ. ஸத்தார் 

Post a Comment

Previous Post Next Post