புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-18

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-18


அடர்ந்த கிளைகள்!  மரமேடை அமைக்க வசதியாகக் காணப்பட்ட பெரிய மரம்! எப்போதாவது ஒருநாள் அந்த மரத்தின் கிளைமேடையில் குடிலொன்றை அமைத்து ரெங்க்மாவுடனும் அவளது ஹந்துந்திவியாவுடனும் பொழுதைப் போக்கலாம் என்று  நினைத்துக் கொண்டான்.

உயிர்போன மானைத் தூக்கி எடுத்துத் தன் தோளில் சுமந்து கொண்டு மறுதோளில் வில்லை மாட்டிக் கொண்டவனாக   ஜாகையை நோக்கி நடந்தான்!

வேட்டையாடிய மிருகமொன்றை மகன் சுமந்து வருவதைக்கண்டு அவனது பெற்றோர் மகிழ்ச்சியடைந்தார்கள். ரெங்க்மாவுக்கு அணிகலன் செய்கின்ற ஆர்வம் அவனை துணிந்து வேட்டையாட வைத்தது என்பதை அவர்கள் அறிவார்கள்!

இதைக் கொண்டு அவன் தன் அத்தை மகளை எவ்வளவு நேசிக்கின்றான் என்பதை அவனது பெற்றோர் ஊகித்துக் கொண்டார்கள்!

முதன் முதலாக மகன் வேட்டையாடியதைக் கொண்டாடி விட வேண்டுமென்ற ஆர்வத்தில் அவனது பெற்றோர் அயலவர்களையும், உறவினர்களையும் விருந்துக்கழைத்து பாபிக்கியூ கொண்டாட்டமொன்றை ஏற்பாடு செய்தார்கள்.

கொண்டாட்டத்திற்கு ரெங்க்மாவைத் தவிர, கிராமத்தில் அனைவரும் வந்தார்கள்!

ரெங்க்மா மூப்பெய்தி ஜாகைக்கு வெளியே கூடாரம் ஒன்றில் முடங்கியிருக்கின்றாள்! செரோக்கியால் கூட அவளைப் பார்க்க முடிவதில்லை!

இன்னும் சில தினங்களில் அவளுக்கு நீராட்டு விழா நடக்கும்! அதன் பிறகுதான் அவள் வெளியில் வரலாம் - எவரையும் பார்க்கலாம்! இதுதான் பழங்குடிகளின் மரபு.

அங்கு வந்திருந்த ஆண்கள் ஒன்று சேர்ந்து ஜாகைக்கு வெளியே - முன்றலில் கற்கள் வைத்து அதன் மேல் உறுதியான தடிகளை அடுக்கி - வேட்டையாடி வந்த மிருகத்தை -  அதன் மேல் வைத்து நெருப்பு மூட்டினார்கள்!

ஆங்காங்கே தடிகள் நடப்பட்டு அதன்மேல் உறுதியான பட்டைகளும் சிரட்டைகளும் வைக்கப்பட்டன. அவற்றின் மேல் சுட்ட கிழங்குகளையும் - தேன்மதைகளையும் - மூலிகைக் கஞ்சினையும் வைத்துவிட்டுச் சென்றார் செரோக்கியின் தந்தை!

நெருப்பு ஜுவாலைவிட்டு எரிந்து கொண்டிருந்தது; இறைச்சி வேகும் வரை வந்திருந்தவர்கள் ஆடிப்பாடினார்கள்.

ஆனால் செரோக்கியால் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க 
முடியவில்லை. வந்திருந்தவர்களை அவன் சுமுகமாக உபசரித்துக் கொண்டிருந்தாலும், அவனது முகம் கவலை தோய்ந்திருந்தது!

தீயில் வெந்த இறைச்சியையும் ஏனைய உணவுப் பதார்த்தங்களையும் விருந்தினர்கள் உண்டு மகிழ்ந்தார்கள்! 

இறுதியாக - செரோக்கிக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வந்தவர்கள் ஒருவர்  பின் ஒருவராக அங்கிருந்து அகன்றார்கள்!

ரெங்க்மாவுக்காக சுட்ட இறைச்சிப் பொதி ஒன்றைக் அவளது பெற்றோரிடம் கொடுத்தனுப்பினான் செரோக்கி!

மறுநாள் - தான் வேறாக்கி வைத்திருந்த கொம்புகளைக் கொண்டு, அணிகலன்கள் செய்வதில் அவன்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்!

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post