5.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!

5.சிங்கப்பூர் - மலேசியா நினைவுகள்!


மரிலியன் சிலை (Merlion) சிங்கத்தின் தலையையும் மீன் உடலையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது 1964ம் ஆண்டு பிரேஸர்  பிரன்னர் (Frazer Brunner) என்பவரால் சிங்கப்பூர் உல்லாசப் பயணத்துறைக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.

சிங்கப்பூர் தேசிய இலட்சணை சிங்கமும் புலியும் ஐந்து நட்சத்திரங்களையும் பிறையொன்றையும் தாங்கி நிற்பது போன்ற தோற்றம் கொண்டது. தேசியக் கொடியில் சிவப்பு பின்னணியில் ஐந்து நட்சத்திரங்களும் பிறையொன்றும் காணப்படுகின்றன.

சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப்பிரதேசமாக ஓர்ச்சாட் பகுதி - ரிவர் சைட் கருதப்படுகின்றது. ஓர்ச்சாட் பகுதியில் ஒரேன்ஜ் குரோ ரோட் - ஹென்டி ரோட்  - ஓர்ச்சாட் ஹோட்டல் போன்றன அமைந்திருப்பதால் -  இப்பகுதி உல்லாசப் பயணிகள் நடமாடும் பகுதியாகவுள்ளது. 
  
இப்பகுதியிலேயே சிங்கப்பூரின் மூன்று நூதனசாலைகள் அமைந்துள்ளன. புகிஸ் -  கம்போங் கிலாம் - லிட்டில் இந்தியா - சைனா டவுன்  என்பன அடுத்த முக்கியவர்த்தகச் சந்தைகள் அமைந்துள்ள பகுதிகளாகும்.


ஸென்தோஸா முக்கிய உல்லாசப்பயணிகள் வந்துபோகும் இடமாகும். சிங்கப்பூரின் தென் பகுதியில் அமைந்துள்ள இது டிஸ்னிலேண்டுக்கு ஒப்பாகக் கருதப்படுகின்றது.  இங்கே கடல் வாழ் உயிரினங்களையும் பார்வையிட முடிவது அபூர்வமானதாகும்.

சிங்கப்பூர் மொழியில்  வீதிக்கு ஜலான் என்றும், ஒழுங்கைக்கு லோரோங் என்றும் - குன்றுப்பகுதிக்கு புகிட் என்றும்  கிராமத்திற்கு கம்போங் என்றும் கூறுவர்.

ஆசியாவிலேயே  ஊழல் மிகக் குறைவானதும் சுகாதாரத்தைப் பேணும் நாடாகவும் சிங்கப்பூர் கருதப்படுவது சிறப்பானதாகும்.

வீதிகளில் குப்பைக்கூலங்களையோ  கால்நடைகளையோ  போலீஸாரையோ காணாத  சூழலொன்றை இரண்டு நாட்கள் நுகர்ந்துவிட்டு  தரைவழியாக சொகுசு பஸ்ஸில்  மலேசியா செல்வதானது மலேசியாவின் பெரும் நகரங்களான ஜோஹோர் -  செம்பிலான் போன்ற பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்த்துக் கொண்டே செல்கின்ற வாய்ப்பைத் தந்தது.  

நான் பிரயாணம் செய்த  இரண்டடுக்கு பஸ் வண்டி என்னைப்போன்ற 25 பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது.

வீதி இரு மருங்குகளிலும் பிரம்மாண்டமாக கட்டடத் தொகுதிகளே தென்பட்டன.

அவையும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களும்  மலர்கள் நடப்பட்டு மிகக் கச்சிதமாக இருந்ததானது அழகிய வண்ணப்பூந்தோட்டமொன்றிற்குள் பயணம் செய்யும் உணர்வைத் தந்தது.

பஸ் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது.  விடுமுறைக் காலத்தின் ஆரம்பம்என்பதால்  சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்வோர் அதிகம்.  அதனால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே காணப்பட்டது. 

 குறிப்பிட்டதோர்  இடத்தில் வண்டி நிறுத்தப்பட்டு  கடவுச்சீட்டில் முத்திரை குத்தப்பட்டு சற்றுத்தூரம் செல்ல ஜொஹோர் நீரிணையைக் கடந்தவுடன் மலேசியாவுக்குள் பிரவேசித்து விட்டதை உணர முடிந்தது. 
 
சிங்கப்பூரிலிருந்து கூப்பிடு தூரத்தில் ஜொஹோர் அமைந்துள்ளது.  மலேசியாவிலிருந்து சிங்கப்பூரைப் பிரிப்பது ஜொஹோர் நீரிணையாகும். ஆரம்பகாலத்தில் ஜோஹோர் சுல்தானிடமிருந்து சிங்கப்பூரை ஆங்கிலேயர் தம் வசப்படுத்திக் கொண்டமை வரலாறாகும். 
 
ஜொஹோர் பிரதேசத்திலிருந்து செம்பிளான் வரைக்கும் பனை மரங்கள் நிறைந்த பெருந்தோட்டங்களைக் காணக்கூடியதாக இருந்தது.  நமது நாட்டிற்குப் பனை எண்ணெய் (Palm Oil) இங்கிருந்துதான் வருகின்றது.


 
மலேசியாவின் பொருளாதாரப் பயிராக இது கொள்ளப்படுகின்றது. 

அவ்வப்போது ஏற்படுகின்ற எல்நினோ காலநிலை மாற்றமானது மலேசியாவின் பனை எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே வீதி ஓரங்களில் தேக்கு மரங்கள் நடப்பட்டிருந்தன. 1960களில் அதிகமாக மரங்கள் வெட்டப்பட்டமையால்  மலேசியாவில் அதிகளவு மண்ணரிப்பு ஏற்பட்டதாகவும் - அதனைக் கட்டுப்படுத்துவதற்காக  காடுகள் அழிவதைத்தடுத்தலுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்தமையால்  இன்று மரங்கள் வெட்டலில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளதோடு - மரங்கள் மீள்நடுகை செய்யப்பட்டும் வருகின்றது.

அந்தவகையில் தேக்கு மரங்கள் அதி முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படுகின்றன. நாங்கள் சென்று கொண்டிருந்த விஸ்தரிக்கப்பட்ட பெரு வீதியின் இரு மருங்குகளிலும் செழித்து வளர்ந்திருந்த தேக்கு மரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. 

மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் தளபாடங்கள் இலங்கையில் ஆங்காங்கே விற்கப்படுவதும் -  மலேசியத் தளபாடங்களை  இலங்கையர் விரும்பி வாங்குவதும் தேக்கு மரங்களைக் கொண்ட தளபாடங்களாக அவை இருப்பதனாலேயாகும். தேக்கு மரத்தளபாடங்களைக் கரையான்கள் அரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ் பயணம் தொடரவே  அடுத்து நாம் சந்தித்த பெரிய நகர் செம்பிலானாகும். நெகோரி செம்பிலான் ( Sembilan) என்பது  ஒன்பது பிரதேசம் என்பதைக் குறிக்கும். இது சுமார் 6645 சதுர கிலோ மீற்றர்களைக் கொண்டது. செம்பிலான் பகுதியில் நாம் பிரயாணம் செய்கின்றபோது உயர்ந்த கட்டடங்கள் கொண்ட பல நகரங்களையும் கிராமங்களையும் கடந்து போக முடிந்தது.

எமது பஸ்வண்டி மலாக்கா வழியாகச் செல்லவில்லை.  இருந்தபோதிலும் மலாக்கா பற்றி இங்கு குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

மலாக்கா செம்பிளானுக்கும் - கோலாலம்பூருக்குமிடைப்பட்ட போர்த்துக்கேயர்ஆதிக்கம் செலுத்திய ஒரு  நகரமாகும். 

மலாக்கா சுல்தான்  இப்பகுதியிலிருந்தே ஆட்சி செய்ததாகக் கூறப்படுகின்றது. ஐரோப்பியர்  வருகைக்கு முன்னர்  மலேசியாவின் பெரும் பகுதிகள் சுல்தான்கள் ஆட்சிக்கே உட்பட்டிருந்தது.

(தொடரும்)

ஐ. ஏ. ஸத்தார் 
 


 



Post a Comment

Previous Post Next Post